“மியூசிக் ஸ்கூல்” படத்தின் முதல் பாடல் ‘மம்மி சொல்லும் வார்த்தை’ வெளியானது.
இளையராஜாவின் இசையில், இசையை மையமாகக் கொண்டு உருவாகும் பன்மொழித் திடைப்படமான “மியூசிக் ஸ்கூல்” படத்தின் முதல் பாடல் ‘மம்மி சொல்லும் வார்த்தை’ வெளியானது.
மேஸ்ட்ரோ இளையராஜாவின் இசையில் பன்மொழி மியூசிகல் திரைப்படமாக உருவாகும் “மியூசிக் ஸ்கூல்” படத்திலிருந்து, வெளியீட்டு தேதி அறிவிப்புடன் கூடிய மோஷன் போஸ்டர் வெளியானதை அடுத்து, தயாரிப்பாளர்கள் தற்போது இப்படத்திலிருந்து முதல் பாடலை வெளியிட்டு ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளனர். ‘மம்மி சொல்லும் வார்த்தை’ என ஆரம்பிக்கும் இப்பாடல் படத்தைப் பற்றிய அறிமுகத்தைத் தரும் வகையிலும், இன்றைய நவீனகால இளைஞர்களைக் கவரும் வகையிலும் அமைந்துள்ளது.
வாழ்வில் ஜெயிக்க மிக உயர்ந்த கல்வித் தகுதியை அடைய வேண்டுமென வற்புறுத்தும், பெற்றோரின் தொடர்ச்சியான ஆதிக்கத்தை நுட்பமாகக் கேலி செய்யும் ‘மம்மி சொல்லும் வார்த்தை’ பாடல், குழந்தைகள், பெற்றோரைப் அல்லாமல் சுதந்திரமாக வாழ்வதைப் பற்றியும், நவ நாகரீக இளைஞர்களின் உலகைப் படத்தின் கதாப்பாத்திரங்கள் வழியாக அழகாகச் சித்தரிக்கிறது.
இளையராஜா இசையமைப்பில் உருவாகியுள்ள ‘மம்மி சொல்லும் வார்த்தை’ பாடலை, பா.விஜய் எழுதியுள்ளார், பிரியா மாலி, சரத் சந்தோஷ், ஹிருத்திக் ஜெயகிஷ், நேஹா கிரிஷ், பத்மஜா ஸ்ரீனிவாசன் மற்றும் RS ரக்தக்ஷ் ஆகியோர் இப்பாடலைப் பாடியுள்ளனர். நடன இயக்குநர் ஆடம் முர்ரே இப்பாடலுக்கு நடனம் அமைத்துள்ளார்.
இளம் மாணவர்கள் எதிர்கொள்ளும் தற்போதைய கல்வி அழுத்தத்தைக் கூறுவதுடன், “மியூசிக் ஸ்கூல்” திரைப்படம், பள்ளி குழந்தைகளின் ஒட்டுமொத்த வளர்ச்சியின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்துகிறது. கல்விச் சாதனைகள் மற்றும் கல்வியல்லாத மற்ற செயல்பாடுகளின் சமநிலையை வலியுறுத்தும் இத்திரைப்படம், மிக முக்கியமான மற்றும் தீவிரமான ஒரு விஷயத்தைப் பொழுதுபோக்கு முறையில் 11 பாடல்களால் அழகாக விவரிக்கிறது. அவற்றில் மூன்று பாடல்கள் இந்திய ரசிகர்களைக் கவரும் வகையில், கிளாசிகல் மியூசிக் முறையில் உருவாகியுள்ளது.
முன்னணி நட்சத்திரங்கள் ஸ்ரேயா சரண், ஷர்மன் ஜோஷி, ஷாம் மற்றும் பிரகாஷ் ராஜ் ஆகியோருடன் அறிமுக நடிகர்களான ஓசு பருவா மற்றும் கிரேசி கோஸ்வாமி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் இசைப் பள்ளியின் மற்ற நடிகர்கள் பெஞ்சமின் கிலானி, சுஹாசினி முலே, மோனா அம்பேகன்கர், லீலா சாம்சன், பக்ஸ் பார்கவா, வினய் வர்மா, ஸ்ரீகாந்த் ஐயங்கார், வக்கார் ஷேக், ஃபானி ஆகியோருடன் மற்றும் பல குழந்தை நட்சத்திரங்களும் இணைந்து நடித்துள்ளனர்.
ஹைதராபாத்தைச் சேர்ந்த யாமினி பிலிம்ஸ் வழங்கும் இந்தப் பன்மொழி திரைப்படம் இந்தி மற்றும் தெலுங்கில் படமாக்கப்பட்டு, தமிழில் மொழிமாற்றம் செய்யப்படுகிறது. பிவிஆர் இந்தி, தமிழ்ப் பதிப்புகளையும், தில் ராஜு தெலுங்கு பதிப்பையும் 12 மே 2023 அன்று வெளியிடுகிறார்கள்.