திமுக‍‍-வுக்கு தாவுகிறாரா தம்பிதுரை? செக் வைக்கும் செந்தில் பாலாஜி

அதிமுக மூத்த தலைவரும், நாடாளுமன்ற துணை சபாநாயகருமான தம்பிதுரை சமீப காலமாக பாஜக‌வுக்கு எதிராக பேசும் பேச்சுகள் அதிமுகவுல புயலை கிளப்பி உள்ள நிலையில, அவர் திமுகவுக்கு தாவ போறதா ஒரு தகவல் அரசியல் வட்டாரங்களில் உலா வருது.

ஜெயலலிதாவுக்கு பிறகு அதிமுகவுல எதிர்காலம் இல்லைனு நினைக்கிற தம்பிதுரை, தனக்கு கட்சியில உரிய முக்கியத்துவம் தரப்படலைன்னும் நினைக்கிறாராம். பாஜக கூட அதிமுக கூட்டணி அமைச்சா தன் தொகுதியில இருக்கிற சிறுபான்மையினர் ஓட்டுகளை தான் இழக்க நேரிடும்னு பயப்படுற தம்பிதுரை, திமுகவுக்கு தாவலாமனு யோசிச்சிட்டு வர்றாராம்.

ஆனால், இதை கேள்விப்பட்ட, அவர் மாவட்டத்துக்காராரும், அதிமுகவுல இருந்து அமமுகவுக்கு போயி, அங்கே இருந்து சமீபத்துல திமுகவுக்கு தாவுனருமான முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடுப்பில் இருக்கிறாராம். எப்படியாவது தம்பிதுரையை திமுகவுக்கு வர விடாம பண்ணிடனும்னு அவர் தரப்புல முயற்சிகள் மேற்கொள்ளப்படுதாம்.

நேற்று மக்களவையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் பங்கேற்று பேசிய தம்பிதுரை, பாஜக அரசின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்தார். “இடைக்கால நிதிநிலை அறிக்கையில் பெரிய அளவில் சலுகைகளை அறிவித்தது சரியல்ல” என்று கூறிய அவர், இந்த இடைக்கால நிதிநிலை அறிக்கையானது, தேர்தல் அறிக்கை போல் இருக்கிறது என்று காட்டமாக விமர்சிச்சார்.

மேலும் அவர், “பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு அறிவிக்கப்பட்ட 6000 ரூபாய் உதவித்தொகை போதாது. குறைந்தபட்சம் 12 ஆயிரம் ரூபாயாவது வழங்க வேண்டும். தற்போது அறிவித்த சலுகைகளை ஏன் 2018 ஆம் ஆண்டு அறிவிக்கவில்லை?”னு கேட்டார்.

சில தினங்களுக்கு முன், தவறான கட்சியில் சரியான மனிதர் வாஜ்பாய் இருந்ததைப் போன்று தமிழகத்தில் அதிமுகவில் தம்பிதுரை உள்ளதாக கனிமொழி கருத்து தெரிவித்து இருந்தார்.

தம்பிதுரை அண்மை காலமாக பிரதமர் நரேந்திர மோடியையும், மோடி தலைமையிலான மத்திய அரசையும் எதிர்த்து கருத்து தெரிவித்து வருகிறார் . தான் கலந்துகொள்ளும் அனைத்து பொதுக்கூட்டங்களிலும் மத்திய அரசை விமா்சிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார் .

இந்த நிலையில், விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த கனிமொழி, “தவறான கட்சியில் வாஜ்பாய் எப்படி இருந்தாரோ அதேபோல் தம்பிதுரை தமிழகத்தில் அ.தி.மு.க-வில் உள்ளார். மத்திய பா.ஜ.க பற்றி தம்பிதுரைக்கு புரிந்த உண்மை விரைவில் அவரது கட்சியினரும் புரிந்துகொள்வர்” எனக் கூறியுள்ளார்.