தமிழிசை கொளுத்தி போட்ட பட்டாசு, ஷாக் ஆன ஸ்டாலின்

நாம் ‘ஸ்டாலின், ராவ் சந்திப்பு: பாஜக அணிக்கு தாவுமா திமுக?’ என்று செய்தி வெளியிட்ட சில மணி நேரங்களில் தமிழக அரசியலில் ஒரு பூகம்பமே வெடித்தது. அதற்கு காரணம் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்ட ஒரு திடுக் தகவல் தான்.

திமுக தலைவர் மு க ஸ்டாலின் பாஜகவுடன் பேசி வருவதாக தமிழிசை சொல்ல‌, தீ பற்றிக் கொண்டது திமுக மற்றும் காங்கிரஸ் கூடாரங்களில். பாஜகவுடன் பேசியதாக நிரூபித்தால் அரசியலை விட்டு விலக தயார் என தமிழிசைக்கு ஸ்டாலின் சவால் விட, தமிழிசை மனசோர்வில் இருக்கிறார் என காங்கிரஸ் மாநில தலைவர் அழகிரி சொல்ல, ஒரே பரபரப்பு தான்.

ஆனால் இதற்கெல்லாம் அசராத தமிழிசை, “தேர்தல் கூட்டணி தொடர்பாக பாஜகவுடன் திமுக பேசியது என நான் கூறியது உண்மைதான். இந்த கருத்தை பாஜகவுடன் திமுக பேசியதாக எனக்கு வந்த தகவலின் அடிப்படையில் கூறினேன்.

நான் சொல்வதில் எப்போதுமே உண்மை இல்லாமல் இருக்காது. திமுக தலைவர் ஸ்டாலின் அரசியலில் அதிகநாட்கள் இருக்க வேண்டும் என்பதுதான் எங்களின் ஆசை. நான் கூறியது உண்மையா இல்லையா என்பதை ஸ்டாலின் நிரூபிக்கட்டும்.

இதை எப்போது வேண்டுமானாலும் நிரூபிப்பேன். அரசியலில் எந்த நேரத்தில் நிரூபிக்க வேண்டுமோ அப்போது நிரூபிப்பேன். என்னை அரசியலை விட்டு விலக சொல்ல யாருக்கும் உரிமை இல்லை.

ஸ்டாலின் சொல்கிறார் என்பதற்காக இன்றைக்கே நிரூபிக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. பொய் சொல்லாத, ஊழல் செய்யாத,நேர்மையான அரசியலே எனது அரசியல் பாரம்பரியம். என்னுடைய அரசியல் வாழ்கை என்றும் நேர்மையானது தான்,” எனக் கூறினார்.

இந்தத் தகவல்கள் காங்கிரஸ் மேலிடத்தை எட்ட, அவர்கள் விசாரணையை முடுக்கி விட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழிசையின் சரவெடி பேட்டிகளால் ஷாக்கில் உள்ள ஸ்டாலின், இந்த விஷயத்தை எப்படி சமாளிக்கலாம் என யோசித்து வருகிறாராம்.