இளம் இயக்குநர்கள் வயலன்ஸ் இல்லாமல் படம் எடுங்கள்” தமிழரசன் படவிழாவில் பாரதிராஜா வேண்டுகோள்

MOUNAM RAVI

“இளையராஜா இடத்தை நிரப்ப இனி யாரும் பிறந்து கூட வர முடியாது” தமிழரசன் படவிழாவில் பாரதிராஜா பேச்சு
SNS MOVIES பட நிறுவனம் சார்பில் கொளசல்யா ராணி பெருமையுடன் தயாரிக்கும் படம் தமிழரசன். இப்படத்தை பாபு யோகேஸ்வரன் எழுதி இயக்கியுள்ளார். இப்படத்தின் சிறப்பம்சமே வெகு நாட்களுக்குப் பிறகு  இசைஞானி இளையராஜா இசை அமைத்துள்ளார் என்பது தான். விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்துள்ள இப்படம் பக்கா கமர்சியல் படமாக உருவாகியுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்தனர். நேற்று இப்படத்தின் இசை மற்றும் டீசர் வெளியீட்டு விழா அடையாரில் மிகப்பிரம்மாண்டமாக நடந்ததுடன் அதில் வெளியிடப்பட்டது. விழாவில் இசை ஞானி இளையராஜா, இயக்குனர் இமயம் பாரதிராஜா, நாயகன் விஜய் ஆண்டனி, ராதாரவி,படத்தின் இயக்குநர் பாபு யோகேஸ்வரன், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, T. சிவா ,படத்தின் நாயகி ரம்யா நம்பீசன், ரோபோ சங்கர், மதுமிதா, மற்றும் பா.ஜ.க கட்சியின் முக்கிய பிரமுகர்களான பொன்.ராதாகிருஷ்ணன், வானதி ஸ்ரீனிவாசன்ஆகியோர் கலந்து கொண்டனர்.
இவ்விழாவில் *இயக்குநர் பாபு யோகஸ்வரன்* பேசியதாவது,
“இந்தப் படம் இவ்வளவு சிறப்பாக அமைந்ததிற்கு முக்கிய காரணம் தயாரிப்பாளரும் விஜய் ஆண்டனியும் தான் காரணம். நாங்கள் இரண்டு ராஜாக்களைப் பார்த்து தான் வளர்ந்தோம். அந்த இரண்டு ராஜாக்கள் இளையராஜாவும் பாரதிராஜாவும் தான். அவர்கள் இந்த மேடையில் இருப்பது மிகவும் பெருமையாக இருக்கிறது. இந்தப்படம் வெற்றியடைய அனைவரும் ஒத்துழைப்பு தரும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறேன்” என்றார்
இயக்குநர் *மோகன்ராஜா* பேசியதாவது,
“ரொம்ப உணர்ச்சிப் பூர்வமான அனுபவம். இந்த மேடையில் நான் நிற்க காரணம் என் மகன். அவன் இப்படத்தில் நடிகனாக அறிமுகமாகிறான். எங்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் பத்திரிகையாளர்கள். எங்களுக்கு நிறைய ஆதரவு கொடுத்துள்ளீர்கள். அதுபோல் என் மகனுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். விஜய் ஆண்டனி வாடா போடா என்று பழகும் அளவிற்கு நட்பு உள்ளவன். விஜய் ஆண்டனி என் மகனை நடிக்க கூப்பிட்டார். மேலும் இளையராஜா இப்படத்திற்கு இசை அமைக்கிறார் என்றும் சொன்னார். இதைவிட என் மகனுக்கு பெரிய பெருமை இருக்க முடியாது. மிகவும் சந்தோஷமாக இருக்கிறது” என்றார்.
நடிகர் *ரோபோ சஙகர்* பேசியதாவது,
“இந்த வருடத்தின் இது கடைசி ஞாயிறு. அப்படியான ஞாயிற்றுக்கிழமை அன்று ஒரு கோவில் வளாகத்தில் வைத்து இசை வெளியீட்டு விழா நடத்துவது சிறப்பு. அதற்கு தயாரிப்பாளருக்கு நன்றி. இன்றைய கதாநாயகர் இளையராஜா சார் தான். நான் நடித்துள்ள படத்திற்கு அவர் இசை அமைத்துள்ளார் என்பது எனக்குப் பெரிய பெருமை..விஜய் ஆண்டனி சூட்டிங் ஸ்பாட்டில் ரொம்ப அமைதியாக இருப்பார். ஆனால் நடிப்பில் அசத்தி விடுவார். மோகன்ராஜா மகனுக்கு இப்படத்தில் ஒரு முக்கியமான கேரக்டர். அவன் சிறப்பாக நடித்துள்ளான். இப்படம் பெரிய வெற்றியடைய வாழ்த்துகள்” என்றார்.
தயாரிப்பாளர் இயக்குநர் *சுரேஷ்காமாட்சி* பேசியதாவது,
“இளையராஜா அவர்களின் பாடல்களைப் பற்றி நாம் சொல்வதற்கு ஒன்றுமில்லை. இந்தப்படத்திலும் எப்படியும் சிறப்பாக செய்திருப்பார். விஜய் ஆண்டனி ஒரு சுயம்பு வாக வளர்ந்து வருகிறார். அவர் பெரிதாக ஜெயிக்க வேண்டும். தயாரிப்பாளருக்கு வாழ்த்துகளையும் ..விழாவிற்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றியினையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
தயாரிப்பாளர் *பெப்சி சிவா* பேசியதாவது
“பத்திரிகை நண்பர்களுக்கும் மேடையில் இருப்பவர்களுக்கும் முதல் நன்றி. நான் பெப்சி சிவா ஆக மாறுவதற்கு ஒத்துழைப்பு தந்த பத்திரிகை நண்பர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் நன்றி.பாரதிராஜா எனக்கு எல்லா நேரத்திலும் உதவியாக இருப்பவர். பி.ஆர்.ஓ மெளனம் ரவி என் ஆத்மார்த்தமான நண்பர். அவர் மூலமாக எனக்கு நிறைய மீடியா நண்பர்கள் கிடைத்தார்கள். அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருப்பதை நினைத்து மிகவும் வருத்தமாக இருக்கிறது. இந்தப்படத்தை என் மனைவி தான் தயாரிக்கிறார். அவர் சார்பாக மெளனம் ரவி அவர்களுக்கு ஒரு லட்சம் கொடுப்பதில் பெருமை அடைகிறோம். இந்தபடத்தின் பாடல்கள் இரண்டாயிரத்தி இருபதாம் ஆண்டு முழுவதும் பேசப்படும். அந்தளவிற்கு அவரின் பாடல்கள் சிறப்பாக வந்துள்ளன. விஜய் ஆண்டனி தான் என்னை தைரியப்படுத்தி இப்படத்தை தயாரிக்க வைத்தார். இந்த முழுப்படத்திலும் அவருடைய பங்களிப்பு மிக அதிகம். தயாரிப்பாளராக என் மனைவி உருவாகி இருந்தாலும் பைனான்ஸியர் உத்தவ், விஜய் ஆண்டனி இருவரும் ஆற்றிய பங்கு மிக அதிகம். இதனிடையே 2000 பேர்களுக்கு அன்னதானம் செய்துவிட்டு தான் இந்த விழாவை துவங்கியுள்ளோம். இந்த விழாவிற்கு வருகை தந்துள்ள, வானதி ஸ்ரீனிவாசன், பொன்.ராதாகிருஷ்ணன், ராதாரவி உள்பட அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி. இந்தப்படம் நிச்சயமாக வெற்றிப்படமாக இருக்கும். ஏன் என்றால் இந்தப்படத்தில் எல்லாமே பாசிட்டிவாக இருக்கிறது” என்றார்
நடிகர் *ராதாரவி* பேசியதாவது,
“பெருந்தலைவர் காமராஜருக்குப் பிறகு ஒரு உன்னதமான மனிதர் என்றால் அது பொன்னார் மட்டும் தான். அவர் தான் என்னை இங்கு அழைத்து வந்தார். சொல்ல முடியாது அவரே பி.ஜே பி தலைவராக வந்தாலும் வருவார். சகோதரி வானதி ஸ்ரீனிவாசன் அவர்கள் நீங்கள் எங்கள் கட்சிக்கு வந்தது சந்தோஷம் என்றார். இந்திப்பாடல்களை கேட்டுக் கொண்டிருந்த மக்களை தமிழ்பாடல்களை கேட்க வைத்தவர் இளையராஜா. இவர் நல்லா என்னை கெடுத்துவிட்டார். அவர் எனக்கு இசை அமைத்த பூவே செம்பூவே என்ற பாடல் ரொம்ப பிரபலம். இயக்குநர் இமயத்திடம் நடிக்க நிறைய வாய்ப்பு கேட்டிருக்கேன். இப்ப அவர் நடிக்க வந்துட்டார். விஜய் ஆண்டனி நல்ல நண்பர். அவர் இப்படியான படங்கள் தான் செய்ய வேண்டும். நான் பிச்சைக்காரன் போன்ற படங்கள் தான் அவருக்கு செட் ஆகும். அப்படி வரிசையில் தமிழரசன் படமும் இருக்கும். இந்த விழாவை வாழ்த்துக்கூடிய ஒரு இடத்தில் வைத்திருக்கிறார்கள். நான் வெளிநாடு சென்ற போதும் என்னை ஒர்க் பெர்மிட் இல்லை என்று துரத்தி விட்டார்கள். அதைத் தான் இப்போது நம் நாட்டில் குடியுரிமைச் சட்டமாக கொண்டு வந்திருக்கிறார்கள். இங்கிருக்கவனை வெளியிலேப் போகச் சொன்னாதானய்யா பிரச்சனை. இது கூட தெரியவில்லை. நல்லதை எடுத்துக்கொள்ளுங்கள். அதுதான் இப்படம். அதைத்தான் இந்தப்படம் சொல்கிறது. தயவுசெய்து இப்படத்தை தியேட்டரில் வந்து பாருங்கள்” என்றார்
நடிகர் *விஜய் ஆண்டனி* பேசியதாவது,
“இன்னைக்கு நான் ஒரு மியூசிக் டைரக்டரா அகி, நடிகனாக இருக்கிறேன் என்றால் அதுக்கு காரணம் இளையராஜா. அவர் ஆயிரம் படங்களுக்கு இசை அமைத்து இருக்கிறார்.  அவர் ஒரு இசை அமைப்பாளருக்கு இசை அமைத்திருப்பது இதுதான். இந்தத் தயாரிப்பாளர் சிவா சாரைப் பார்க்க பயமாக இருக்கும். அவர் நிறைய செல்வு செய்யக்கூடியவர். நிறைய பெரிய நடிகர்களை நடிக்க வைத்துள்ளார். இந்தப்படத்தை மிகச்சிறப்பாக எடுத்துள்ளார் இயக்குநர். அவர் பெரிய இயக்குநராக வருவார். மோகன்ராஜா மகன் சிறப்பாக நடித்துள்ளான். இந்தப்படத்தை குடும்பத்தோடு வந்து பார்க்கலாம். பாருங்கள்”
*வானதி ஸ்ரீனிவாசன்* பேசியதாவது,
“கலைத்துறைக்கும் பா.ஜ.க கட்சிக்கும் இப்போது நெருக்கம் அதிகமாகி வருகிறது. நிறைய சினிமா பிரபலங்கள் சமீபகாலமாக எங்களிடம் வருகிறார்கள். அதனால் தமிழகம். மாற்றத்திற்கான மாநிலமாக மாற இருக்கிறது. ஜி.எஸ்.டி விசயத்திற்கும் பைரஸி விசயத்திற்கும் உதவி கேட்டிருக்கிறீர்கள். நிச்சயமாக அதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும். பைரஸி என்பதை மக்கள் நினைத்தால் தான் தீர்வு காண முடியும். அடுத்தவர் உழைப்பை திருடக்கூடாது என்ற எண்ணம் வர வேண்டும். இது ராஜாக்கள் இருக்கின்ற மேடை. சின்ன வயதில் பார்த்த பிரமித்தவர்கள் இவர்கள். திறமையான கலைஞர்கள் பங்காற்றியுள்ள இப்படம் வெற்றிபெற வாழ்த்துகிறேன். இந்தப்படத்தில் உழைத்த அனைவரும் அடுத்த கட்டத்திற்கு செல்ல இறைவன் அனந்த பத்மநாபசாமி அருள் புரியட்டும்” என்றார்
இயக்குநர் *பாரதிராஜா* பேசியதாவது,
“பெயரிலே பொன்னை வைத்துள்ள பொன்.ராதாகிருஷ்ணன், வானதி ஸ்ரீனிவாசன், விஜய் ஆண்ட்னி, சிவா அனைவருக்கும் வணக்கம். சிவா நல்ல படம் எடுக்கணும். என்று நினைப்பவர். விஜய் ஆண்டனி ஒரு ஆச்சர்யமான முகம். ரொம்ப சாதாரணமா இருப்பார். ஆனால் படத்தில் வேறமாதிரி இருக்கிறார். நல்ல இசை அமைப்பாளர் இப்போது நல்ல நடிகர். தமிழரசன் என்ற பெயர் ரொம்ப நல்லாயிருக்கு. இளையராஜாவை மிஞ்சுவதற்கு இனி ஒரு இசை அமைப்பாளர் பிறந்து வந்தாலும் முடியாது. படத்தை ஒன்றுமே இல்லாமல் எடுத்துக் கொடுத்தாலும் அந்தப்படத்திற்கு உயிர் கொடுத்து விடுவார் இளையராஜா..பேசாத படத்தை பேச வைத்தவர் இளையராஜா. அவருக்கும் எனக்கும் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அவர் இசைக்கு ஈடு இணையில்லை. இந்த இயக்குநரை சிவா தேர்ந்தெடுக்கிறார் என்றால் நிச்சயம் பாபு யோகேஸ்வரன் நல்ல இயக்குநராகத் தான் இருப்பான். இனி வரும் இளைஞர்கள் கொஞ்சம் வயலன்ஸ் இல்லாமல் படமெடுங்கள். இது நல்லபடம். சிவா மனசிற்கு இந்தப்படம் பெரிய வெற்றியை அடையும்” என்றார்
முன்னாள் மத்திய அமைச்சர்.*பொன்.ராதாகிருஷ்ணன்* பேசியதாவது
“தமிழரசனின் வெற்றிக்காக உழைத்தவர்களை எதிர்காலத்தில் இதற்கு நிகரான ஒரு படம் என்பது போன்ற வாழ்த்துக்களைச் சொன்னவர்களை வணங்குகிறேன். பாரதிராஜா இளையராஜாப் பற்றி பேசும் போது இதற்கு மேல் யாராலும் இளையராஜாவை புகழ முடியாது என்று நினைத்தேன். இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடு இருந்தால் இப்படித்தான் இருக்க வேண்டும். தயாரிப்பாளர் சிவா ஒரு வேலையை எடுத்தால் அதை மிகச்சிறப்பாக முடிக்கக் கூடியவர். அவருடைய துணைவியாரும் இப்படத்தை தயாரித்து இருக்கிறார்கள். திரைத்துறையில் இருக்கும் சில பிரச்சனைகளை சிலர் குறிப்பிட்டார்கள். நிச்சயமாக இது குறித்து உரிய அமைச்சர்களிடம் பேசுவோம். அதன் மூலம் உங்களோட இருப்போம் என்று சொல்லிக்கொள்கிறேன்..எங்களோடு இணைந்து பயணிக்கும் திரையுலகினரை அன்போடு வரவேற்று வாழ்த்துகிறேன். இந்தப்படம் மிகச்சிறந்த திரைப்படம் என்ற உச்சத்தை தொட வேண்டும். என்று வாழ்த்துகிறேன். உங்களுக்கு இறைவன் ஆசீர்வாதம் உங்களுக்கு உண்டு. விஜய் ஆண்டனி எங்கள் ஊர்க்காரர். எங்கள் ஊர்க்காரரில் நடிகர்களில் யாரும் பெரிதாக வரவில்லை. விஜய் ஆண்டனி மிகப்பெரிய நடிகராக அடையாளம் காண   வேண்டும் என்று வாழ்த்துகிறேன்” என்றார்