இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் தமிழ் திரையுலகினர் கலந்துக் கொள்ள விழா குழுவினர் நேரில் அழைப்பு
இந்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சகம், எண்டர்டெயின்மென்ட் சொசைட்டி ஆஃப் கோவா ஆகியோர் இணைந்து, வரும் நவம்பர் 20 முதல் 28ம் தேதி வரை கோவாவில் நடத்துகின்ற இந்திய சர்வதேச திரைப்பட விழாவிற்கு, (IFFI – International Film Festival of India) தமிழ் திரையுலகையும், பத்திரிக்கையாளர்களையும் நேரில் சந்தித்து அழைப்பு விடுக்கும் விதமாக சென்னையில் இந்த நிகழ்ச்சியை அதன் ஒருங்கிணைப்பாளரும், பிலிம் பெடரேஷன் ஆஃப் இந்தியா மற்றும் தென்னிந்திய திரைப்பட சேம்பர் ஆஃப் காமர்ஸின் செயலாளருமான ரவி கொட்டாரக்கரா ஏற்பாடு செய்திருந்தார்.
இந்திய சர்வதேச திரைப்பட விழாவிற்கு இது 50வது ஆண்டு என்பதால், இந்த வருட விழாவை வெகுவிமரிசையாக கொண்டாடுவதற்குரிய அனைத்து ஏற்பாடுகளையும் அவர் முன்னெடுத்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக, ஒவ்வொரு மாநில தலைநகரிலும் இது போன்ற சிறப்பு சந்திப்பு நிகழ்ச்சிகளை நடத்தி, அனைத்து படைப்பாளிகளையும் ஒருங்கிணைக்கும் மாபெரும் முயற்சியின் ஒரு அங்கமாக சென்னையில் இந்த சந்திப்பு நடைபெற்றது. இதனை தொடர்ந்து பெங்களூரு, கொச்சி, ஹைதராபாத், மற்றும் கொல்கத்தா ஆகிய மாநில தலைநகரங்களிலும் இந்த நிகழ்ச்சி நடைபெறவிருக்கிறது.
இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு பேசிய திரைப்படவிழா இயக்குனரகத்தின் கூடுதல் இயக்குனர் ஜெனரல் திரு. சைதன்யா பிரசாத், “இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் விழா மேலதிக முக்கியத்துவம் வாய்ந்தது. இது இஃபியின் 50 வது ஆண்டு விழா. வழக்கமாக 10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் சுமார் 200 படங்கள் திரையிடப்படும். ஆனால் இந்த ஆண்டு திரைகளை அதிகப்படுத்தி சுமார் 300 படங்கள் திரையிட ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இத்திரைப்படவிழா ஜூரியாக ஆஸ்கார் விருது கமிட்டியின் முன்னாள் சேர்மன் ஜான் பெய்லீ இசைந்திருக்கிறார். அவருடன் இணைந்து பணியாற்றும் 3 ஜூரி உறுப்பினர்களும் சர்வதேச அளவில் பரந்த நோக்குள்ள தங்களது படைப்புத்திறனுக்காக போற்றப்படும் சிறப்புடையவர்கள்.
இந்தியன் பனோரமாவில் இடம்பெற்ற 23 திரைப்படங்கள் இந்த விழாவிலும் திரையிடப்படும். கூடுதல் சிறப்பாக கடந்த 50 ஆண்டுகால இஃபி வரலாற்றில் இடம்பிடித்த, மிகவும் சிறப்புடைய 25 திரைப்படங்கள் தனித்திரையில் திரையிடப்பட இருக்கிறது. இவ்விழாவில் தேர்ந்தெடுத்து வழங்கப்படும் சிறந்த திரைப்படத்திற்கான விருதுடன், பிராந்திய மொழி வாரியாக ஒரு சிறந்த படத்தை தேர்வு செய்து, அதற்கென ஒரு சிறப்பு விருதும் வழங்கப்பட உள்ளது” என்றார்.
எண்டர்டெயின்மென்ட் சொசைட்டி ஆஃப் கோவாவின் துணை சேர்மன் திரு சுபாஷ் பால் தேசாய் பேசும் போது, “இந்த சிறப்பு விழாவிற்கான ஏற்பாடுகளை இந்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சகத்துடன் இணைந்து கோவா அரசு எடுத்து வரும் முக்கிய பணிகளில் சிலவற்றை குறிப்பிட்டார். எளிதான பிரதிநிதி பதிவு செயல்முறை, பதிவு கவுண்டர்கள் அதிகரிப்பு, திரைப்பட கல்லூரி – விஸ்காம் மாணவர்களுக்கு பதிவு கட்டணம் ரத்து மற்றும் ஒரு திரையில் இருந்து மற்றொரு திரைக்கு செல்ல இலவச பயண ஏற்பாடு, ஒவ்வொரு திரைக்கு வெளியிலும் திறந்த மன்றங்கள், விசாலமான விவாத அரங்குகள், பயண உதவி மையங்கள், விருந்தினர் உதவி மையங்கள், சுற்றுலா சம்பந்தமான தொடர்பு மையங்கள் உள்ளிட்ட அனைத்து விதமான ஏற்பாடுகளையும் திறம்பட செய்திருக்கிறது. இத்தனை பிரம்மாண்டமான ஏற்பாடுகளை செய்திருக்கும் நிலையில், சுமார் 8000 பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள்”, எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
ஹோட்டல் ராடிசன் ப்ளூ எக்மோரில் நடைபெற்ற இந்த சந்திப்பில், காட்ரகட்டா பிரசாத், தலைவர், பிலிம் சேம்பர் தென்னிந்திய வர்த்தக சபை, மற்றும் பொறுப்பாளர்கள், திரைப்படவிழா ஒருங்கிணைப்பாளர் ரவி கொட்டாரக்கராவுடன் இணைந்து அரசு சார்பில் விழாவில் கலந்துக் கொண்ட திரு சைதன்யா பிரசாத் மற்றும் திரு சுபாஷ் பால் தேசாய் ஆகியோரை கௌரவித்தனர்.
அதனை தொடர்ந்து திரைப்படவிழா ஒருங்கிணைப்பாளர் ரவி கொட்டாரக்கரா பேசுகையில், “இந்த திரைப்பட விழாவில், 20 இந்திய சர்வதேச தொழிட்நுட்ப வல்லுனர்கள் ‘நேரடி பயிற்சி வகுப்புகள்’ (மாஸ்டர் கிளாஸ்) வழங்கவிருக்கின்றனர். இந்த புதிய முயற்சி, வளர்ந்து வரும் ஆர்வமுள்ள இளம் திரைத்துறையினருக்கு ஒரு பெரும் வரப்பிரசாதமாக அமையும். பல நல்ல படைப்பாளிகளை உருவாக்க உதவும். மேலும், மற்றுமொரு புதுமையையும் இந்த திரைப்பட விழா அறிமுகப்படுத்த இருக்கிறது. கண் பார்வையற்றவர்களும் படம் பார்க்கும் விதத்தில் இவ்விழாவில் சிறப்பு திரையிடல் நடைபெறவிருக்கிறது. இந்த முயற்சி தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சர் மேதகு பிரகாஷ் ஜவடேகர் அவர்களின் முன்னெடுப்பால் சாத்தியமானது. அவருக்கு இந்த நிகழ்ச்சியின் வாயிலாக எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்து கொள்கிறேன்” என்றார்.
நடிகர் இயக்குனர் பார்த்திபன், பிரமிட் நடராசன், கலைப்புலி தாணு, ஜேஎஸ்கே சதீஷ், எல் சுரேஷ், அருள்பதி, டி சிவா, தனஞ்செயன், ஏவிஎம் சண்முகம், ராஜீவ் மேனன் உள்ளிட்ட திரளான தமிழ் திரையுலகினரும், பி வி கங்காதரன், ஜி டி விஜயகுமார் உள்ளிட்ட கேரளா திரைத்துறையினரும், சி கல்யாண், சாரதி உள்ளிட்ட ஆந்திர திரைத்துறையினரும், கே சி எம் சந்திரசேகர், தாமஸ் டிஸோஸா உள்ளிட்ட கர்நாடக திரைத்துறையினரும், திரளான ஊடக அன்பர்களும் கலந்துக் கொண்டனர் PRO :Nikil Murukan