சின்னத்திரை நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு புத்தாண்டு பரிசுகள் புத்தாடை வழங்கும் விழா!
சின்னத்திரை நடிகர் சங்கத்தின் சார்பில் உறுப்பினர்களுக்கு புத்தாண்டுப் பரிசுகள் , புத்தாடை, இனிப்புகள் வழங்கும் விழா இன்று சின்னத்திரை நடிகர் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.இவ்விழாவில் சின்னத்திரை நடிகர் சங்கத்தின் துணைத்தலைவர் இயக்குநருமான மனோபாலா கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார்.
இந்த விழா குறித்து சின்னத்திரை நடிகர்கள சங்கத்தின் தலைவர் ஏ. ரவிவர்மா பேசும்போது,
“சின்னத்திரை நடிகர் சங்கத்தின் 16 ஆண்டுகால வரலாற்றில் உறுப்பினர்களுக்கு பரிசுகள் வழங்குவது இதுவே முதல் முறையாகும் . இதற்கு மனமுவந்து பங்களிப்பு செய்த சங்கத்தின் உறுப்பினர்கள் எம்.பி .பாலாஜி மற்றும் சி. ஈஸ்வரன் இருவருக்கும் சங்கத்தின் சார்பாக நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
நமக்கு நாமே உதவி செய்து ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்கிற உயரிய நோக்கத்தில் சங்க உறுப்பினர்களே மற்ற உறுப்பினர்களுக்கு பரிசுப் பொருட்கள் வாங்கிக் கொடுத்து உதவுவதற்கு தொடக்கப் புள்ளியை அமைத்திருக்கிறார்கள். இது மேலும் பலருக்கு உற்சாகத்தையும் தூண்டுதலையும் கொடுக்கும் .
இந்த ஆண்டு நடிகர்கள் 150 பேர், நடிகைகள் 150 பேர். என்று 300 பேருக்கு பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன.
இப்போது 1800 பேருக்கு மேல் உறுப்பினர்கள் உள்ள இந்தச் சங்கத்தில் அடுத்த ஆண்டு அனைத்து உறுப்பினர்களுக்கும் புத்தாண்டு பரிசு வழங்குவதாக என் தலைமையிலான சங்கம் முடிவு செய்துள்ளது. அதற்கு ஒரு ஆரம்பமாக இந்த விழா இருக்கிறது .
சங்க நலனுக்கான பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறோம்.சின்னத்திரை நடிகர்கள் சங்கம் மலேசியாவில் நட்சத்திரக் கலைவிழா நடத்தி மாபெரும் வெற்றிபெற்றது அனைவருக்கும் தெரியும் .அதே போல சங்கத்தின் வளர்ச்சிக்கும் உறுப்பினர்களின் நலனுக்கும் இந்தச் சங்கம் தொடர்ந்து பாடுபடும் ; உறுப்பினர்கள் நலனுக்கு உதவக்கூடிய திட்டங்களைச் செயல்படுத்தும் .வருகிற 2020 -ல், அனைத்து உறுப்பினர்களுக்கும் நல்ல வேலை வாய்ப்புகள் கிடைத்து வாழ்வில் எல்லா நலமும் பெறவேண்டும் என்று கூறிக்கொண்டு அனைவருக்கும் புத்தாண்டு பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.” என்றார்.
பரிசுகளை வழங்கி இயக்குநர் மனோபாலா பேசும்போது ,
“இதை எனது குடும்ப விழாவில் கலந்து கொள்வது போல் உணர்கிறேன். இது ஒரு நல்ல முயற்சி .இது மேலும் தொடர வேண்டும் வாழ்த்துக்கள். அனைவருக்கும் புத்தாண்டு பொங்கல் நல்வாழ்த்துக்கள்” என்றார்.
இவ் விழாவில் சின்னத்திரை நடிகர் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் சின்னத்திரை நடிகர், நடிகைகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
VRCS