இயக்குநர் கே.பாலசந்தரின் வாழ்க்கையில் தவிர்க்க முடியாத மூன்று பேர் நாகேஷ், ரஜினி மற்றும் கமல்
இயக்குநர் கே.பாலசந்தரின் வாழ்க்கையில் தவிர்க்க முடியாத மூன்று பேர் நாகேஷ், ரஜினி மற்றும் கமல் – நடிகர் சிவகுமார்
மறைந்த கே.பாலச்சந்தரின் நினைவாக அவரது நினைவு நாளில் ‘கே.பாலசந்தர் ரசிகர்கள் சங்கம்’ துவக்கம்
இயக்குநர் கே.பாலசந்தரின் வாழ்க்கையில் தவிர்க்க முடியாத மூன்று பேர் நாகேஷ், ரஜினி மற்றும் கமல் – நடிகர் சிவகுமார்
மறைந்த இயக்குநர் கே.பாலச்சந்தர் பெயரில் அவரது 5-ஆம் ஆண்டு நினைவு தினத்தில் அவருக்கு ‘கே.பாலச்சந்தர் ரசிகர்கள் சங்கம்’ துவங்கப்பட்டது. இச்சங்கம் உருவாக முக்கிய காரணம் ‘கவிதாலயா’ பாபு மற்றும் ‘கவிதாலயா’ பழனிசாமி இருவரும் தான். அதற்கான தொடக்க விழாவில் கே.பாலச்சந்தரைப் பற்றி சினிமா பிரபலங்கள் பேசியதாவது:-
நடிகர் சிவகுமார் பேசியதாவது,
இயக்குநர் கே.பாலசந்தரின் வாழ்க்கையில் தவிர்க்க முடியாத மூன்று பேர் நாகேஷ், ரஜினி மற்றும் கமல். ‘மூன்று முடிச்சு’ படத்திற்காக விருந்தினர் கதாபாத்திரத்திற்காக என்னை அணுகியபோது நான் நடிக்க மறுத்துவிட்டேன். ஆனால், மூன்று முடிச்சு படத்தில் ரஜினி நடிக்கும்போது நீ கறுப்பாக இருக்கிறாய் என்று வருந்தாதே நீ கருப்பு வைரம் தமிழ்நாட்டையே கலக்கப் போகிறாய் என்று அன்றைக்கே கூறியவர். அதேபோல், இயக்குநர் பாலசந்தரின் தயாரிப்பு நிறுவனத்தில் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்டியர் நடிகர் ரஜினிகாந்த்.
‘சொல்லத்தான் நினைக்கிறேன்’ படத்தில் என் கதாபாத்திரத்தை அனைவரும் பேசும்படியாக அமைத்தவர் கே.பாலசந்தர். கே.பாலசந்தரின் இயக்கத்தில் முக்கிய இடம்பெற்ற 5 படங்களில் ‘அக்னிசாட்சி’யும் ஒன்று. ‘சிந்து பைரவி’ மூலம் எனக்கு அனைவரின் கைதட்டல்களையும் வாங்கிக் கொடுத்தவர் கே.பாலசந்தர். சினிமா இருக்கும்வரை அவர் புகழ் மறையாது.
இவ்வாறு இயக்குநர் கே.பாலசந்தர் பற்றி நடிகர் சிவக்குமார் பேசினார்.
இயக்குநர் சரண் பேசும்போது,
இயக்குநர் பாலசந்தர் தன்னைத் தானே செதுக்கிக் கொண்ட சிற்பி. பலர் வாழ்க்கையை ஜொலிக்க வைத்தவர். நாங்கள் அனைவரும் அவருடைய பக்தர்கள். பக்தர்கள் ஒன்றுகூடி ரசிகர்கள் சங்கம் துவங்கி இருக்கிறோம் என்றார்.
நடிகர் ராஜேஷ் பேசும்போது,
1974ம் ஆண்டு ‘அவள் ஒரு தொடர்கதை’ படம் எடுக்கும்போது தான் சந்தித்தேன். நேரம் தவறாமையை அவரிடம் தான் கற்றுக் கொள்ள வேண்டும். நேர்மையான மனிதர். நான் சினிமாத்துறைக்கு வரும்போது யாசின் என்னிடம் கூறினார், பாலாஜி, கே.பாலசந்தர் ஆகிய மூவரை மட்டும் நம்பு என்றார். ஸ்ரீதர், சேதுமாதவன் மற்றும் கே.பாலசந்தர் ஆகிய மூன்று இயக்குநர்களிடம் தான் தைரியமாகப் பேசுவேன். நீ சினிமாவை நேசிப்பவன், சினிமாவில் வெற்றிபெற வேண்டும் என்று வந்திருக்கிறாய். நீ வெற்றி பெறுவாய் என்றார். குற்றாலத்தில் நானும், சரிதாவும் நடித்துக் கொண்டிருக்கும்போது குற்றாலத்தில் வெள்ளம் வந்துவிட்டது. உடனே, கிளைமாக்ஸை மாற்றி வெள்ளத்தைப் படமெடுத்தார். அவர் அனைவரின் நடிப்பையும் ரசித்து மனமுவந்து பாராட்டுவார். இவரைப் போன்ற ஒரு ஒப்பற்ற மனிதரைப் பார்க்க முடியாது.
மறந்து போன சினிமாத்துறையில் ஒப்பற்ற இயக்குநர் கே.பாலசந்தருக்கு ரசிகர்கள் மன்றம் அமைத்ததில் மகிழ்ச்சி. நான் அதற்கு தலைவனாக இல்லாமல் தொண்டனாக பணியாற்றுவேன். அவருக்கு சிலை வைப்பதற்கு முயற்சி எடுப்பேன்.1984-1985
1985-1986, 1986-1987 ஆகிய மூன்று வருடங்களுக்கான விருது இன்னும் மீதம் இருக்கிறது. அதில் ‘சிறை’ படத்திற்காக எனக்கு விருது இருக்கிறது. ஆனால், ஜெயலலிதாவிடம் நான் கூறினேன். அவர்கள் ஏன் விழாவை நடத்தவில்லை என்று தெரியவில்லை என்றார்.
நடிகர் நாசர் பேசும்போது,
எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தாலும் மரணம் மரணம் தான். ஆனால், சில மனிதர்கள் தான் தங்கள் வாழ்ந்துகாட்டிய விதத்தில் மரணமில்லாமல் இன்னும் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள்.
என்னுடைய முதல் படம் ‘கல்யாண அகதிகள்’ அவருடைய இயக்கத்தில் தான் உருவானது. அப்படத்தில் எனக்கு ஏற்பட்ட முக்கிய நிகழ்வால் இன்னும் அந்த பழக்கத்தை பின்பற்றிக் கொண்டிருக்கிறேன். இதுவரை ஒருநாள் கூட நான் காலதாமதமாக படப்பிடிப்பிற்கு சென்றதில்லை. என்னால், ஒரு படப்பிடிப்பு கூட தடைபட்டதுமில்லை. இதற்கு காரணம் இயக்குநர் கே.பாலசந்தர் தான். நேரத்தை தன்னைவிட அதிகமாக மதிக்கக்கூடியவர். என் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது இயக்குநர் கே.பாலசந்தர்.
கே.பாலசந்தருக்கு சிலை வைப்பதைவிட அவருடைய பழக்க வழக்கங்களையும், படமெடுக்கும் பாணியையும் நடைமுறைக்குக் கொண்டுவருவதுதான் இன்றைய காலகட்டத்திற்கு தேவை. ஏனென்றால், அவர் சைலன்ஸ் என்று கூறிவிட்டால் யாரும் பேசமாட்டார்கள். ஒரே இடத்தில் செட்டை மாற்றிவிட்டு பொருளாதாரத்தையும் குறைப்பார். நேரத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பார். இவையெல்லாம் இன்றைய சினிமாவில் இல்லை என்பதை நான் எங்கு வேண்டுமானாலும் கூறுவேன்.
கே.பாலசந்தர் என்று கூறியவுடன் நினைவிற்கு வருவது அறிவு சார்ந்த சினிமா என்பது தான். அவர் பெயரில் ஒரு நூலகம் அமைய வேண்டும்.
மேலும், இதுவரை சுமார் 250க்கும் மேற்பட்ட தயாரிப்பு நிறுவனங்களைப் பார்த்திருக்கிறேன். ஆனால், கவிதாலயா புரொடக்ஷன்ஸ்-ன் கட்டமைப்பு போல வேறு எந்த நிறுவனத்தையும் பார்த்ததில்லை.
இவ்வாறு நாசர் பேசினார்.
இயக்குநர் ரமேஷ் கண்ணா பேசும்போது,
சினிமாவில் வாய்ப்பு கிடைக்க வேண்டுமென்றால் பாரதிராஜா மற்றும் கே.பாலசந்தர் வீட்டிற்கு தான் செல்ல வேண்டும். அதற்காக நான் தினமும் அவர்கள் வீட்டிற்கு செல்வேன். ஒருநாள் என்னை வீட்டிற்கு அழைத்தார். எனக்கு கதையைப் பற்றி கலந்துரையாடுவதற்கு நீ தான் சரியான ஆள் என்றார். கார்த்தியை வைத்து ஒரு படம் எடுத்தோம். ஆனால், அப்படம் வெளியாகவில்லை. பிறகு தான் ‘முத்து’ படத்தில் இணை இயக்குநராகப் பணியாற்றினேன். அந்த மகானுடன் இருந்ததை பெரும் பாக்கியமாக கருதுகிறேன் என்றார்.
இயக்குநர் பி.கஜேந்திரன் பேசும்போது,
‘தண்ணீர் தண்ணீர்’ படத்தின் படப்பிடிப்பில் கேசட்டை தண்ணீருக்குள் போட்டுவிட்டேன். அதற்காக அவர் என்னை அடிப்பார் என்று ஆவலுடன் இருந்தேன். ஆனால், அவர் என்னை அடிக்கவில்லை. அவருடன் வாழ்ந்த நாட்கள் புண்ணியமான நாட்கள் என்றார்.
நடிகர் ரவிக்குமார் பேசும்போது,
‘அவர்கள்’ படத்தில் நடிப்பதற்கு எனக்கு அழைப்பு வருகிறது. கண்மணி சுப்பு, ரெட்டி இருவரும் உதவி இயக்குநராக பணிபுரிந்து கொண்டிருந்தனர். கே.பாலசந்தர் நிறுவனத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தவுடன், அவர் திட்டுவார், அடிப்பார் என்று அவரைப் பற்றி கேள்விப்பட்டிருந்ததால், எப்படியாவது அப்படத்தில் நடிக்கக் கூடாது என்று நினைத்திருந்தேன். ஆனால், எனது அப்பா நேரில் சென்று பார்த்துவிட்டு வா என்று அனுப்பிவைத்தார். நான் கே.பாலசந்தரிடம் கேரளாவில் நடித்துக் கொண்டிருக்கிறேன், தேதி பிரச்னை வரும் என்றேன். அதெல்லாம் பார்த்துக் கொள்ளலாம் என்று கூறிவிட்டார். அவரால் தான் எனக்கு ரஜினி மற்றும் கமலுடன் நடிக்க வாய்ப்புக் கிடைத்தது. அதன்பிறகு ‘மரபு கவிதைகள்’ என்ற தொலைக்காட்சித் தொடரில் நடிக்கக் கூடிய பாக்கியம் கிடைத்தது.
ஒவ்வொரு காட்சியும் நடித்து முடித்ததும் பார்த்தால் நாம் நடித்தோமா? என்று ஆச்சரியப்பட வைக்கும். அவர் தான் நடிக்க வைத்தார் என்றார்.
‘கராத்தே’ ஹூசைனி பேசும்போது,
நடித்தால் கே.பாலசந்தரின் இயக்கத்தில் தான் நடிப்பேன் என்று உறுதியாக இருந்தேன். நான் ஒரு சிற்பி, நான் இயக்குநர் கே.பாலசந்தரின் சிலையை செதுக்குவேன் என்று தொலைபேசியில் கூறினேன். உடனே வர சொல்லி அழைத்தார்கள். நாளை முதல் ஆரம்பித்துவிடலாம் என்றார். இதை சற்றும் எதிர்பார்க்காத நான் அரசு ஃபைன் ஆர்ட்ஸ் கல்லூரியில் பேராசியராக இருந்த தனபால் காலில் விழுந்து, நான் சிலை செதுக்க வேண்டும் என்று கூறினேன். 5 வருடங்கள் பயிற்சி எடு என்று கூறினார். அவ்வளவு நாட்கள் எனக்கு அவகாசமில்லை. நாளைக்கே சிலை வடிக்க வேண்டும் என்றும், கற்றுக் கொள்ள வேண்டும் என்று என் நிலைமையை விளக்கியதும், இரவு நேரத்தில் அவரிடம் கற்றுக் கொண்டு 20 நாட்களில் கே.பாலசந்தரின் சிலையை வடித்து முடித்தேன். அந்த சிலை முன்னணி பத்திரிகைகளில் அட்டைப் படத்தில் வந்தன. அதன்பின் கே.பாலசந்தரிடம் நான் நடிக்க வாய்ப்புக் கேட்டுத்தான் வந்தேன். நான் சிற்பி அல்ல என்றேன். ‘புன்னகை மன்னன்’ படத்தில் எனக்கு முக்கிய வேடம் கொடுத்து என்னையும் நடிகனாக்கினார். அதன் விளைவால் என்னை இலங்கை அகதி என்று 19 நாட்கள் சிறையில் அடைத்தார்கள்.
பிறகு, நீ என்னை தத்ரூபமாக சிலை வடிக்கிறாய், ஆகையால் சிற்ப கலை கற்றுக் கொள் என்று என்னை அனுப்பி வைத்தார். இன்று சிற்ப கலையில் நான் பல தங்க பதக்கங்களோடு பி.எச்.டி. படித்துக் கொண்டிருக்கிறேன். அவருடைய சிலையை செதுக்குவதற்கு எனக்கு மட்டும் தான் முழு தகுதி இருக்கிறது என்று கூறுவேன். அதற்கான அனுமதி கிடைத்தவுடன் என் பணியைத் துவங்குவேன். உலகத்திலேயே யாரும் செய்யாத அளவுக்கு தத்ரூபமாகவும், உயிரோட்டமாகவும் சிலை வடிப்பேன் என்று சத்தியம் செய்கிறேன் என்றார்.
இயக்குநர் கண்மணி சுப்பு பேசும்போது,
பாட்டு எழுத வந்தவனை இயக்குநராக ஆக வேண்டும். அதிலும் கே.பாலசந்தர் மாதிரி இயக்குநராக வேண்டும் என்று என் தந்தையிடம் கூறினேன். அவருடன் உதவி இயக்குநராகவே இருக்க வேண்டுமென்று ஆசைப்பட்டேன். ஆனால், எனக்கு இயக்குநர் வாய்ப்பு கிடைத்ததும் அவரிடம் கூறினேன். முதலில் நீ போகணுமா? என்றவர், போ நன்றாக இயக்கு என்றார். ஆனால் அப்படம் சரியாக ஓடவில்லை. இருப்பினும் படப்பிடிப்பில் நீங்கள் கே.பாலச்சந்தர் போலவே கற்றுக் கொடுக்குறீர்கள் என்று கூறினார்கள். அதையே எனது வெற்றியாக கருதுகிறேன் என்றார்.
நடிகர் பூவிலங்கு மோகன் பேசும்போது,
கே.பாலசந்தரின் ரசிகன் நான். இன்றும் அவருடைய ரசிகனாகத்தான் இருக்கிறேன். அவருடைய திரைப்படங்களில் திருவள்ளுவர் இல்லாமல் இருக்க மாட்டார். அவரிடம் நான் நிறைய கற்றுக் கொண்டேன். எங்களுடைய ஆசான் கே.பாலசந்தர் என்றார்.
ஏ.எல்.எஸ். ஜெயந்தி கண்ணப்பன் பேசும்போது,
எங்களது ஏ.எல்.எஸ். தயாரிப்பு நிறுவனம் பழமையான நிறுவனத்தில் ஒன்று. நான்கு முதலமைச்சர்களுக்கு ஊதியம் கொடுத்த பெருமை எங்களுக்கு உண்டு. பாபு மற்றும் பழனி இருவரும் கே.பாலசந்தர் ரசிகர்கள் சங்கத்தை அனைவரும் பாராட்டக்கூடிய வகையில் இதை அமைத்திருக்கிறார்.
எங்கள் குடும்பத்தாருக்கு மிகவும் நெருக்கமானவர்.
இவ்வாறு ஜெயந்தி கண்ணப்பன் பேசினார்.
மேலும், மறைந்த கே.பாலசந்தருக்கு சிலை வைக்க பலரும் பல மேடைகளிலும் பேசினாலும், பாபுவும் பழனியும் முறையாக அரசாங்கத்திற்கு கடிதம் கொடுத்துள்ளனர். அதன்படி அடுத்த ஆண்டு கே.பாலச்சந்தரின் சிலை சென்னையில் நிறுவப்படும். மேலும், கராத்தே ஹூசைனி அவரின் சிலையை வெண்கலத்தில் தன் சொந்த செலவில் தானே வடிப்பதாகவும் சத்தியம் செய்துள்ளார்.