NAAN SIRITHAL MOVIE SUCCESS MEET

என்னுடைய சக்களத்தி ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி தான் – நடிகை குஷ்பூ

அவ்னி மூவிஸ் சார்பில் இயக்குநர் சுந்தர்.சி தயாரிப்பில் கடந்த வெள்ளியன்று (14.02.2020) ‘நான் சிரித்தால்’ படம் வெளியாகி வெற்றிப் பெற்றது. இப்படத்தில் ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி நாயகனாகவும், ஐஸ்வர்யா மேனன் நாயகியாகவும் நடித்திருந்தார்கள். இவ் வெற்றி விழாவில் கலந்து கொண்ட அப்படத்தின் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பேசியதாவது:-

நடிகர் ரவிமரியா பேசும்போது,

தமிழ் சினிமாவில் மிக அரிதாக நடக்கும் விழா வெற்றி விழாவாக இருக்கிறது. ஆனால், கடந்த 3 நாட்களில் திருவிழா கோலாகலமாக திரையரங்கம் நிறைந்து காட்சியளிக்கிறது. பொதுவாக இதுபோன்ற வெற்றி விழாவில் தேவையற்ற பேச்சுக்களைத் தவிர்த்து ‘நான் சிரித்தால்’ படத்தின் வெற்றியை மட்டுமே பேசுங்கள். ஏனென்றால், இப்படம் சுந்தர்.சி,ஆதி கூட்டணிக்கு  ஹாட்ரிக் வெற்றி. இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இப்படம் வெற்றிபெறவில்லையென்றால், நான் சினிமாவிலிருந்தே விலகி விடுவேன் என்றேன். நான் கூறியதுபோல் இப்படம் வெற்றிப் பெற்றுள்ளது. திரையரங்கில் படவா கோவி, இயக்குநர் ரவிக்குமார் மற்றும் ஒவ்வொரு நடிகர்களும் காட்சியில் தோன்றும்போது பார்வையாளர்கள் ரசித்து கைத்தட்டி ஆரவாரம் செய்தார்கள். இயக்குநர் ராணா ஒவ்வொருவரையும் நன்றாக புரிந்துகொண்டு அவர்களுக்கேற்ப கதாபாத்திரத்தை அமைத்திருக்கிறார். இயக்குநர் ஷங்கர் போல மாபெரும் இயக்குநராக ராணா வருவதற்கு வாழ்த்துகள்.

அன்று குஷ்பூ, பிறகு நயன்தாரா ஆகியோர்களை அனைவருக்கும் பிடித்தது போல இன்று ஐஸ்வர்யா மேனனையும் அனைவருக்கும் பிடித்திருக்கிறது.

படத்தொகுப்பாளர் சுஜித் பேசும்போது,

இந்த வாய்ப்பைக் கொடுத்த சுந்தர்.சி, ராணாவிற்கு நன்றி. தெலுங்கில் ‘டியர் காமரேட்’ வெற்றி படத்தில் பணிபுரிந்த பிறகு, தமிழில் இப்படம் வெற்றி பெற்றதற்கு மகிழ்ச்சி என்றார்.

‘படவா’ கோபி பேசும்போது,

இந்த விழாவில் இப்படத்தின் வெற்றியைப் பற்றி பேசுவதா? அல்லது என்னுடைய வெற்றியைப் பற்றி பேசுவதா? என்பதில் குழப்பமாக உள்ளது.  ‘3’ படத்தில் எனது கதாபாத்திரத்தைப் பார்த்து ரசித்து ‘நான் சிரித்தால்’ படத்திற்கு ஆதிக்கு அப்பாவாக நடிக்க அழைத்தார் இயக்குனர் ராணா. சிறு சிறு வேடங்கள், நிகழ்ச்சி தொகுப்பாளர் என்று இருந்த எனக்கு இந்த கதாபாத்திரம் மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்தது என்றார்.

சண்டை பயிற்சி இயக்குநர் பிரதீப் பேசும்போது,

ஆதியுடன் இது 3வது படம். அடுத்தடுத்த படங்களில் இது தொடரவேண்டும் என்று விரும்புகிறேன் என்றார்.

நடிகர் கதிர் பேசும்போது,

ஆதிக்கு நன்றி. படப்பிடிப்பு தளத்தில் என்னுடன் நேரம் செலவழித்து என்னுடைய கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வைத்தார். அதனால் எனது கதாபாத்திரத்தை அனைவரும் ரசித்தார்கள் என்றார்.

நடன இயக்குநர் சந்தோஷ் பேசும்போது,

சிங்கிள் பசங்க பாடலை நான் நடனம் அமைத்தேன். என்னுடைய மகள் முழுப் பாடலையும் பாடுவாள். ஆதியின் பாடல்கள் குழந்தைகள் வரை இணைத்திருக்கிறது. படப்பிடிப்பு தளத்தில் என்னை உற்சாகப்படுத்தினார்.

ஐஸ்வர்யா நன்றாக ஒத்துழைப்பு கொடுத்தார் என்றார்.

‘பிக் பாஸ்’ புகழ் ஜூலி பேசும்போது

இப்படத்தின் வெற்றி தனிமனிதர் வெற்றியல்ல. ஒரு குடும்பத்தின் வெற்றி. ராணா, உங்களுக்கு ஒரு கதாபாத்திரம் இருக்கிறது என்று அழைத்தார். ராணாவிடம் பொறுமையைக் கற்றுக் கொண்டேன்.

மொத்த படக்குழுவினரும் என்னை தங்கள் குடும்பத்தில் ஒருவர் போல நடத்தினார்கள் என்றார்.

‘எரும சாணி’ புகழ் விஜய் பேசும்போது,

ஆதி கோவையிலிருந்து என்னை அழைத்து வந்து இந்த வாய்ப்பைக் கொடுத்ததற்கு நன்றி. படப்பிடிப்பில் ஆதி சிறுசிறு கரெக்ஷன்ஸ் கூறுவார். இயக்குநர் ரவிக்குமாரைப் பார்க்கும்போது சிறிது பயம் வரும். குஷ்பூ, ஐஸ்வர்யா மேனன் என்று படப்பிடிப்பு தளத்தில் அனைவரும் என்னுடன் அன்புடன் பழகுவார்கள் என்றார்.

எழுத்தாளர் சத்யகுமார் பேசும்போது,

இப்படத்தின் குறும்படமான ‘கெக்க பெக்க’ படத்தில் மணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தேன். யூடியூப்பில் குறும்படத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த எனக்கு இந்த வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி. ஆதி என்னை தன்னுடைய சகோதரர் போல பார்த்துக் கொண்டார்.ரவிக்குமார் போன்றோர்களுடன் நடித்ததில் எனது குடும்பத்தினர் மகிழ்ச்சியடைந்தனர் என்றார்.

கலை இயக்குநர் பிரேம் அனைவருக்கும் நன்றி என்றார்.

ஒளிப்பதிவாளர் வாஞ்சிநாதன் பேசும்போது,

ரவிக்குமாருக்கு கேமரா வைப்பதற்கு சிறிது பதற்றம் இருக்கும். அவர் ஏதாவது குறைகூறுவாரா என்ற தயக்கம் இருந்துகொண்டே இருந்தது. ஆனால், அவர் எதுவும் கூறாததே எனது வெற்றியாக கருதுகிறேன். ரவிமரியாவின் நடிப்பைப் பார்க்கும்போதே சிரித்து விடுவேன் என்றார்.

கதாநாயகி ஐஸ்வர்யா மேனன் பேசும்போது,

இயக்குநர் சுந்தர்.சி திறமைவாய்ந்த இயக்குநர் என்பது அனைவருக்கும் தெரியும். அவருடன் பணியாற்ற அனைவரும் விரும்புவார்கள். ஆதி பன்முக திறமை வாய்ந்தவர். இப்படத்தின் மூலம் அவர் நல்ல நண்பராகிவிட்டார். இப்படம் வெளியாகி இந்த சில நாட்களில் 7 முறை பார்த்துவிட்டேன். இப்படத்திற்கு கிடைத்த விசிலும், கைத்தட்டலும் ஆதியையே சாரும்.

மேலும், என்னுடன் நடத்த நடிகர், நடிகைகளுக்கும், தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் நன்றி என்றார்.

இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் பேசும்போது,

சுந்தர்.சி தயாரிப்பில் ‘தலைநகரம்’ படத்தில் நடித்திருக்கிறேன். இது இரண்டாவது படம். ரஜினிகாந்த் பாராட்டியிருக்கிறார் என்று சுந்தர்.சி என்னிடம் ‘கெக்க பெக்க’ குறும்படத்தை பார்க்க சொன்னார். பார்த்ததும் எனக்கு என்ன கதாபாத்திரம் என்று கேட்டேன். அது இக்குறும்படத்தில் இல்லை. ஆனால், நாங்கள் ‘டில்லி பாபு’ என்ற கதாபாத்திரத்தை உருவாக்கியிருக்கிறோம். நான் தான் வில்லனா? என்றேன். இல்லை. ஆதி கதாநாயகன், அவருடைய சிரிப்புதான் வில்லன் என்றார். இந்த கதாபாத்திரத்தை போல நிஜ வாழ்வில் நான் பார்த்திருக்கிறேன்.

நான் சில காட்சிகளில் சில யோசனைகள் ராணாவிற்கு கூறுவேன். சிலவற்றை கேட்டுக் கொள்வார். சிலவற்றுக்கு அது இந்த இடத்திற்கு பொருந்தாது என்று கூறுவார். ராணா இப்படத்துடன் நிற்காமல் விரைந்து அடுத்தடுத்து படங்கள் இயக்க வேண்டும்.

ஆதியைப் பார்க்கும்போது விஜயைப் பார்ப்பதுபோல இருக்கிறது.

புதுமுக இயக்குநர்களுடன் 9 படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன். ஆகையால், நடிப்பைக் கற்றுக் கொண்டிருக்கிறேன். இன்று இருக்கும் இளைஞர்கள் இரவில் தான் பணியாற்றுகிறார்கள்.

இப்படத்தில் பணியாற்றி மொத்த குழுவினர்களுக்கும் நன்றி என்றார்.

இயக்குநர் ராணா பேசும்போது,

ஆதி, சுந்தர்.சி. மற்றும் குஷ்பூ மூவரும் என் மீது வைத்த நம்பிக்கையால் தான் இப்படம் உருவானது.

கே.எஸ்.ரவிக்குமாரை வைத்து படம் இயக்குவது கணித ஆசிரியை அருகில் வைத்து தேர்வு எழுதுவது போல இருந்தது. முதல் படம் இயக்குகிறாய், கவனத்துடன் பணியாற்ற வேண்டும் என்று என்னை கே.எஸ்.ரவிக்குமார் ஊக்குவித்தார்.

எனது நண்பர்கள் மற்றும் அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் நன்றி என்றார்.
இப்படத்தின் உலக உரிமை பெற்ற  விநியோகதஸ்தர் ராக்ஃபோர்ட் முருகானந்தம் பேசும்போது,

‘மீசைய முறுக்கு’, ‘நட்பே துணை’ படத்தில் உதவியது போல ‘நான் சிரித்தால்’ படத்திற்கும் இயக்குநர் சுந்தர்.சி உதவினார். அடுத்த படத்திற்கு 1000 திரையரங்கில் வெளியிடுவேன் என்றார்.

‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி பேசும்போது,

இப்படத்தின் வெற்றி அன்பால் மட்டுமே கிடைத்திருக்கிறது. அன்று முதல் இன்று வரை எனது ரசிகர்கள் ஆதரவளித்து வருகிறார்கள். ஒவ்வொரு முறையும் எனக்கு சரி எது? தவறு எது? என்று சுட்டிக் காட்டி ஊக்குவிக்கும் பத்திரிகையாளர்களுக்கு நன்றி.

இயக்குநர் சுந்தர்.சியுடனான உறவு எப்படி வளர்ந்தது என்று தெரியவில்லை. அவர் என்மீது வைத்த நம்பிக்கையை நான் காப்பாற்றியிருக்கிறேன் என்பதில் மகிழ்ச்சி.

நான் பள்ளியில் படிக்கும்போது ‘ராப்’ பாடல் தான் இளைஞர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றிருந்தது. ஆனால், இப்போது எனது ‘ஹிப் ஹாப்’ பாடலையும் ரசிக்கிறார்கள். என்னைப் போலவே சுதந்திரமான கலைஞர்களை ஊக்குவிக்கும் பொருட்டு அவர்களை எங்களது ஒவ்வொரு படங்களிலும் அறிமுகப்படுத்தி வாய்ப்பு வழங்கி வருகிறோம். அப்படிதான் யூடியூப்-ல் ராணாவைப் பார்த்து அழைத்து வந்தோம். அவர் மட்டுமல்லாமல் அவருடைய நண்பர்களையும் அழைத்து வந்தோம். அவர்கள் ஒவ்வொருவருக்கும் இயக்குநராகும் திறமையுள்ளது. அதேபோல, ‘எரும சாணி’ விஜய்யையும் சென்னையில் வாய்ப்பு நிறைய இருக்கிறது வா என்று அழைத்தேன். இன்று ஒரு படத்தில் இயக்குநராக ஒப்பந்தமாகியிருக்கிறார். இது எதிர்காலத்திலும் தொடரும்.

கே.எஸ்.ரவிக்குமார் திட்டுவதாக இருந்தாலும், பாராட்டுவதாக இருந்தாலும் மனதில் இருப்பதைக் கூறிவிடுவார். இப்படத்தில் தூணாக இருந்தார்.

படத்தில் இரண்டாவது பாதியை வெற்றிபெற செய்தது கே.எஸ்.ரவிக்குமார், ரவிமரியா, ராணா ஆகியோர் தான். நாயகன், நாயகி போல எனக்கும், என் அப்பாவாக நடித்த ‘படவா’ கோபிக்கு கெமிஸ்ரி பேசும்படியாக வந்திருக்கிறது.

ராஜ்மோகனின் தமிழ் எனக்கு மிகவும் பிடிக்கும். அருமையாக தொகுத்து வழங்கியிருக்கிறார். கதிர் கடின உழைப்பாளி. அவருடைய திறமைக்கு விரைவிலேயே மிகப்பெரிய உயரத்திற்கு செல்வார்.

மேலும், இப்படத்திற்காக பணியாற்றிய ஒவ்வொரு கலைஞர்களுக்கும் நன்றி.

‘ஹிப் ஹாப் தமிழா’ என்பது நான் மட்டுமல்ல. நானும் எனது நண்பன் ஜீவா இருவரும். ஆனால், அவரைப் பற்றி பேசுவதை அவர் விரும்பமாட்டார். ‘ஹிப் ஹாப் தமிழா’வின் வெற்றிக்கு ஜீவா தான் முதுகெலும்பு.

ஐஸ்வர்யா மேனன் ‘பிரேக் அப்’ பாடலில் காலணி கூட இல்லாமல் சிறப்பாக நடனமாடினார். அதேபோல், நேரம் தவறாமைக்கு ஐஸ்வர்யா மேனன் சிறந்த உதாரணம்.

எனக்கு பல கனவுகள் இருக்கிறது. அதை ஒவ்வொன்றாக நனவாக்கி வருகிறேன். என்னுடன் பணியாற்றும் அனைவரின் கனவும் நனவானதில் மகிழ்ச்சி என்றார்.

நடிகை குஷ்பூ பேசும்போது,

இதுபோன்ற சினிமா மேடையில் பேசி பல வருடங்கள் ஆகிறது. ‘அவ்னி மூவிஸ்’ என்பது எனக்கும் சுந்தர்.சி-க்கும் கனவு. ஏனென்றால், எங்கள் இருவருக்கும் தெரிந்தது சினிமா மட்டும்தான். அவ்னி மூவிஸ்-ன் வெற்றிக்கு முழுக்க முழுக்க காரணம் எனது கணவர் சுந்தர்.சி மட்டும்தான். நாங்கள் இருவரும் சினிமாவை நேசிக்கிறோம். எங்கள் படங்கள் மட்டுமல்லாமல் அனைவரின் படங்களும் வெற்றிபெற வேண்டும் என்று நினைப்போம். ஆதி எங்கள் குடும்பத்திற்குள் வந்தது எனது சிறிய மகளால் தான். அவள் தான் ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதியை அறிமுகப்படுத்தினாள். எனக்கு சக்களத்தி ஆதி தான். எனது கணவரும், ஆதியும் பேச ஆரம்பித்தார் நேரம் காலம் பார்க்காமல், இரவு 2 மணி ஆனாலும் பேசிக் கொண்டேயிருப்பார்கள்.

கே.எஸ்.ரவிக்குமாருடன் நீண்ட நாள் நட்பு இருக்கிறது.

இப்படத்தின் வெற்றி ஒவ்வொருவரும் அடுத்தவர் மேல் வைத்திருக்கும் நம்பிக்கை. அந்த நம்பிக்கை வீண் போகாமல் அனைவரும் காப்பாற்றுகிறார்கள்.

இன்றைய காலத்தில் நகைச்சுவையில் பரபரப்பாக நடித்துக் கொண்டிருப்பவர் யோகிபாபு. ஆனால், நாங்கள் அழைத்ததும் உடனே ஒப்புக் கொண்டார்.

எங்களுக்கு கருத்து, கஷ்டங்கள் ஆகியவற்றை சொல்லும் படம் எடுப்பதைவிட அனைவரையும் மகிழ்விக்கும் படமாக எடுக்க வேண்டும் என்ற உறுதியோடு இருக்கிறோம். அதன்பலனாக, விநியோகஸ்தர்கள் நீண்ட நாட்களுக்குப் பிறகு திரையரங்கில் பூ வாசனை வருகிறது என்று கூறுகிறார்கள். குடும்பத்துடன் திரையரங்கிற்கு வருவது அதிகரித்திருப்பதில் மகிழ்ச்சி.

என்னுடைய வெற்றிக்கு எனது பின்னால் பக்கபலமாக இருக்கும் எனது கணவர் சுந்தர்.சி. தான் காரணம் என்றார்.