தமிழில் பிஸியாகும் மாலா பார்வதி

A. ஜான் PRO
*தமிழுக்கு வரும் புதிய அம்மா மாலா பார்வதி*
*சினிமாவுக்காக சைக்காலஜிஸ்ட் பணியை உதறிய மாலா பார்வதி*
*தமிழில் பிஸியாகும் மாலா பார்வதி*
மலையாள திரையுலகில் சிறந்த குணச்சித்திர நடிகைகளை பட்டியலிட்டால் அதில் நடிகை மாலா பார்வதிக்கு ஒரு முக்கிய இடமுண்டு.. அந்த அளவிற்கு தான் நடிக்கும் எந்த ஒரு படத்திலும் அந்த கதாபாத்திரமாகவே தன்னை வெளிப்படுத்தி கொள்பவர் தான் மாலா பார்வதி. 2007-ல் இயக்குநர் ஷாஜி கைலாஷ் இயக்கிய டைம் என்கிற படத்தில் அறிமுகமான இவருக்கு பிரபல இயக்குநர் லால்ஜோஸ் இயக்கிய நீலத்தாமரை திரைப்படம்தான் முழு அடையாளம் தந்தது.
அடிப்படையில் சைக்காலஜிஸ்ட்டான இவருக்கு ஆரம்பத்தில் நடிப்பு மீது பெரிய ஆர்வம் இல்லை. ஆனால் இவர் நடித்த படங்களை பார்த்துவிட்டு தங்களது படங்களில் இவர் தான் நடிக்க வேண்டும் என இயக்குநர்கள் தேடிவர ஆரம்பிக்க, வேறு வழியின்றி தான் பார்த்துவந்த மருத்துவ பணியையும் விட்டுவிட்டு முழுநேரமாக நடிப்பில் இறங்கிவிட்டார் மாலா பார்வதி. சினிமாவுக்காக நடிப்பு பயிற்சியையும் முறையாக கற்றுக்கொண்டார்.
மலையாளத்தில் வருடத்திற்கு 10 முதல் 20 படங்களுக்கு குறையாமல் நடித்து வரும் பிஸியான நடிகையான இவரை விக்ரம் பிரபு நடித்த இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழுக்கு அழைத்து வந்தவர் இயக்குநர் ஏ.எல்.விஜய். அதைத்தொடர்ந்து பிரியதர்ஷன் இயக்கத்தில் உதயநிதி நடித்த நிமிர் படத்தில் பார்வதி நாயரின் அம்மாவாக நடித்திருந்தார் மாலா பார்வதி. அந்தப்படத்தில் இருவர் பெயரும் பார்வதி என்று இருந்ததால் குழப்பத்தை தவிர்க்க பிரியதர்ஷனின் ஆலோசனைபடை மாலா பார்வதி என தனது பெயரை மாற்றிக்கொண்டார்.. டாப்ஸி நடித்த கேம் ஓவர் படத்திலும் படம் முழுவதும் அவருடன் பயணிக்கும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தமிழ், மலையாளம் என இரு மொழிப்படமாக உருவான வாயை மூடி பேசவும் படத்திலும் இவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மலையாளத்தில் சமீபத்தில் வெளியான ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் என்கிற படத்தில் இவருக்கும் சீனியர் காமெடி நடிகர் சுராஜூக்குமான காதல் எபிசோட் ரசிகர்களிடம் ரொம்பவே வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது மலையாளத்தில் ப்ரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் மிக பிரமாண்டமான  வரலாற்று படமாக உருவாகியுள்ள  மரைக்கார்  படத்திலும் மிக முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் மாலா பார்வதி.
அதேபோல தமிழில் விஷ்ணு விஷால், தெலுங்கில் நானி, சமந்தா மற்றும் மாதவன் நடித்துள்ள ‘மாறா’ படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத்தின் அம்மாவாக என இளம் முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் தொடர்ந்து இடம்பெற்று  பிஸியாக நடித்து வருகிறார் மாலா பார்வதி. மலையாளத்தை போல தமிழிலும் ஒரு சிறந்த நடிகை என்ற பெயரை பெறவேண்டும் என்பதே இவரது விருப்பமாக இருக்கிறது. அந்தவிதமாக தமிழ்த்திரையிலும் தவிர்க்க முடியாத ஒரு ‘அம்மாவாக இவர் வலம் வருவார் என நம்பலாம்.