‘‘தாய்மொழி தெலுங்காக இருந்தாலும் தமிழ் மொழியில் நடிப்பதையே விரும்புகிறேன்’’ என்கிறார் புதுமுகம் சந்திரிகா.

‘‘நான் பிறந்தது, வளர்ந்தது எல்லாமே சென்னை. படிச்சது ஃபேஷன் டிசைனிங். சினிமாவில் நடிக்கவேண்டும் என்ற ஆர்வம் சிறுவயதிலேயே இருந்தது. நான் வசிக்கும் பகுதியில் ஏராளமான சினிமாக்காரர்கள் இருந்தார்கள். அவர்களுடன் சில சினிமா நிகழ்ச்சிகளுக்கு செல்வேன். அப்படித்தான் எனக்குள் சினிமா ஆசை வந்தது.

நான் வீட்டுக்கு ஒரே பெண் என்பதால் கொஞ்சம் செல்லம் அதிகம். என்னுடைய அம்மா டீன் ஏஜ்ஜாக இருந்தபோது அவருக்கு சினிமா வாய்ப்பு வந்ததாம். ஆனால் அப்போது அவருக்கு அரசு வேலை கிடைத்த காரணத்தால் சினிமாவில் நடிக்க ஆர்வம் காட்டவில்லையாம். இப்போது நான் சினிமாவில் நடிக்க விருப்பம் தெரிவித்ததும் வீட்டிலிருந்துதான் எனக்கு முதல் சப்போர்ட் கிடைத்தது.

சினிமாவில் இப்போது போட்டி அதிகம் என்றாலும் இந்தச் சூழ்நிலையில் நடித்து பெயர் வாங்கும்போதுதான் ஜெயிக்க வேண்டும் என்ற வெறித்தனம் உண்டாகும். விடாமுயற்சி இருந்தால் சினிமாவில் ஜெயிக்க முடியும் என்று நம்புகிறேன். சினிமாவில் அதிர்ஷ்டம் தாண்டி திறமை, உழைப்பு முக்கியம். ‘இன்புட்’ என்ன கொடுக்கிறோமோ அதுதான் ‘அவுட்புட்’டாக வரும்.

தற்போது சினிமாவில் வுமன் சென்ட்ரிக் கதைகள் வர ஆரம்பித்துள்ளது. அதுபோன்ற கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன்.

சினிமாவில் எனக்கு ஜோதிகா, நயன்தாரா மேடம் இருவரையும் பிடிக்கும். இருவரும் எந்த கேரக்டர் கொடுத்தாலும் அந்தக் கேரக்டராக மாறி என்னைப் போன்ற வளரும் நடிகைகளுக்கு முன் உதாரணமாக இருக்கிறார்கள். நடிகர்களில் விஜய்சேதுபதியைப் பிடிக்கும்’’ என்று சொல்லும் சந்திரிகா இந்த கொரோனா காலத்திலும் ஜூம் ஆப் மூலம் கதை கேட்டு இரண்டு படங்களை ஓ.கே.செய்துள்ளாராம்.