சென்னையைக் கலக்கிய மகளிர் சிலம்பம் போட்டிகள்!

sakthi saravanan pro
7 மாநில வீராங்கனைகள் பங்கேற்பு:
சென்னையைக் கலக்கிய மகளிர் சிலம்பம்  போட்டிகள்!
அறிவியல் வளர்ச்சியும் தகவல் தொழில் நுட்பமும் முன்னேறிவரும் இந்தக்காலத்தில் நமது தொன்மையான வீரக் கலையான சிலம்பம், வர்மம், குத்துவரிசை போன்ற விளையாட்டுகள் மறக்கடிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் நமது தொன்மையான சிலம்பத்தை மீட்டெடுக்கும் ஒரு முயற்சியாக வீரக்கலைகள் மீது வீரியமுள்ள பற்று கொண்ட டாக்டர் எம். கே. சோமசுந்தரம் அவர்கள் தற்காப்புக் கலையை வளர்ப்பதில் தன்னிகரற்ற ஈடுபாட்டுடன் விளங்குகிறார். தனது ‘மாஸ் இன்டர்நேஷனல் ஸ்போர்ட்ஸ் அகாடமி’ சார்பில் சிலம்பம், குத்துச்சண்டை, கராத்தே போன்ற வீர விளையாட்டுகளை பயிற்சிகள் அளித்து அழிந்துவிடாமல் காப்பாற்றி வளர்த்து வருகிறார்.இதற்கான பயிற்சிகளை மாணவர்களுக்கு வழங்கி வருகிறார். குறிப்பாக இப்பயிற்சிகளை ஏழை மாணவர்களுக்கு இலவசமாக கடந்த  15 ஆண்டு காலமாக அளித்து வருகிறார். இவரிடம் பயிற்சி பெற்ற பலரும் விளையாட்டு ஒதுக்கீட்டின் மூலம் பல்வேறு அரசுப்பணிகளில் அமர்ந்திருக்கிறார்கள்.
வேலு நாச்சியாரும் ஜான்சி ராணியும்  போன்று வீரப்  பெண்மணிகள் நிறைந்த நாடு இது.
‘ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை காண்’ என்னும் பாரதியின் வாக்கை மெய்ப்பிக்கும் வகையில் பெண்களுக்கான சிலம்பம் போட்டிகளை நடத்த இவர் முடிவு செய்தார். அதன்படி இவரது முன்னெடுப்பு முயற்சியின் அடுத்தகட்டமாக 7 மாநில மகளிர் வீராங்கனைகள் சுமார் 300 பேர் கலந்துகொள்ளும் தேசிய அளவிலான சிலம்பம் விளையாட்டுப்போட்டிகள் நிகழ்வு செயின்ட் ஜோசப் கல்லூரியின் விளையாட்டு அரங்கத்தில் ஜனவரி 25 அன்று தொடங்கி 27 வரை நடைபெறுகிறது.
 இதில் கலந்து கொள்பவர்கள் சர்வதேச அளவிலான அடுத்தநிலைப் போட்டிகளுக்கு மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கும் அடுத்து கனடாவுக்கும் செல்ல இருக்கிறார்கள்.
கேளிக்கை  எண்ணங்களில் நாட்டு மக்கள் மனம் மயங்கி உடல் நலம் சீர் கெட்டு விடாமல் தடுக்கும் வகையில் விளையாட்டையும் உடல் வலுவையும் பேணிக் காக்கும் முயற்சியில் டாக்டர் எம். கே. சோமசுந்தரம் ஈடுபட்டு வருகிறார். அவருடன் சிலம்பக்கலை பேராசான்கள் அ.பா. கிருஷ்ணன் மற்றும் தனபால் ஆகியோரும் கைகோர்த்து இருக்கிறார்கள்.
 செயின்ட் ஜோசப் கல்லூரி வளாகத்தில் நடைபெறும் இந்த போட்டி நிகழ்ச்சிகளை கல்லூரியின் தலைவர் பாபு மனோகரன் ஊக்கப்படுத்தி இந்த குழுவினர் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருந்து வழிகாட்டுகிறார்.
 இந்த இரண்டு நாள் நிகழ்ச்சியின் முடிவில் வெற்றி பெற்றவர்கள் தேர்வு செய்யப்பட்டு சர்வதேச அளவிலான போட்டிகளுக்கு அனுப்பப்படுவார்கள்.
ஞானத்தில் சிறந்து விளங்கும் நம் நாடு உடல் நலத்திலும் விளையாட்டுக் களத்தில் சிறந்து விளங்க வேண்டும் என்றால் இப்படிப்பட்ட விளையாட்டுப்போட்டிகளை  வரவேற்று ஊக்கப்படுத்த வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாகும்.