அறிவழகன் – அருண் விஜய் கூட்டணி மீண்டும் இணைகிறது


B.YUVRAAJ (P.R.O)  

தமிழ் திரையுலகில் எப்போதுமே வெற்றிக் கூட்டணி மீண்டும் இணைந்தால், படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகும். அப்படியொரு வெற்றிக் கூட்டணியை மீண்டும் இணைந்து படம் பண்ணவுள்ளார்கள். ஆம், அறிவழகன் – அருண் விஜய் கூட்டணி மீண்டும் இணைகிறது. இந்தக் கூட்டணி மீது நம்பிக்கை வைத்து பெரும் பொருட்செலவில் தயாரிக்கவுள்ளார் ‘ஆல் இன் ஆல் பிக்சர்ஸ்’ விஜய ராகவேந்திரா. ‘செக்கச்சிவந்த வானம்’, ‘தடம்’ ஆகிய படங்களின் வெற்றியால் சக்சஸ் நாயகனாக வலம் வரும் அருண் விஜய், இந்தப் படத்துக்காக தற்போது தயாராகி வருகிறார். இன்னும் ஒருசில நாட்களில் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கவுள்ளது. படப்பிடிப்பு நடத்துவதற்கான இடங்கள் தேர்வில் தற்போது தீவிரமாக பணிபுரிந்து வருகிறார் இயக்குநர் அறிவழகன்.அருண் விஜய்யை வைத்து ‘குற்றம் 23’ என்ற மாபெரும் வெற்றி படத்தை இயக்கிய அறிவழகன், இம்முறை ஸ்பை ஆக்‌ஷன் த்ரில்லர் படத்தை இயக்கவுள்ளார். பெரும் பொருட்செலவில் இந்தப் படம் தயாராகிறது. அறிவழகன் இயக்கத்தில் உருவான படங்களில் இது தான் பொருட்செலவில் அதிகம். சென்னை, ஹைதராபாத், டெல்லி உள்ளிட்ட பல இடங்களில் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது.

இந்தப் படம் தொடர்பாக அறிவழகன், “‘குற்றம் 23’ படத்துக்குப் பிறகு மீண்டும் அருண் விஜய் சாரை இயக்கவிருப்பதில் மகிழ்ச்சி. தமிழ் திரையுலகில் இதுவரை வந்திராத புதுமையான ஒரு ஸ்பை ஆக்‌ஷன் த்ரில்லர் கதை. எனது முந்தைய படங்களை விட இதில் ஆக்‌ஷன் காட்சிகள் அதிகம். கண்டிப்பாக அது பேசப்படும். ரெஜினா நாயகியாக நடிக்கவுள்ளார். மீதமுள்ள நடிகர்கள் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது” என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

அறிவழகனின் நெருங்கிய நண்பராக ராஜசேகர் ஒளிப்பதிவாளராக பணிபுரியவுள்ளார். இவர் ‘ஆர்யா 2’, ‘ஆரஞ்ச்’ உள்ளிட்ட பல தெலுங்கு படங்களில் பணிபுரிந்தவர். தற்போது இசையமைப்பில் தனிமுத்திரை பதித்து வரும் சாம் சி.எஸ் இசையமைப்பாளராக பணிபுரியவுள்ளார். ‘குற்றம் 23’ படத்துக்கு கலை இயக்குநராக பணிபுரிந்த சக்தி வெங்கட்ராஜ் இதிலும் கலை இயக்குநராக ஒப்பந்தமாகியுள்ளார்.டிசம்பரில் படப்பிடிப்பு தொடங்கி 2020-ம் ஆண்டு கோடை விடுமுறைக் கொண்டாட்டமாக இந்தப் படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.