சூர்யாவின் காதல், சாய் பல்லவியின் ஏக்கம், யார் மீது யார் பைத்தியம்

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் என்ஜிகே படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் பல சுவாரசியங்களை பார்க்க முடிந்தது.

சூர்யா பேசும்போது, “செல்வராகவன் ஒவ்வொரு நாள் படப்பிடிப்பிலும் புது படத்திற்கு செல்வதுபோல இருந்தது. நேற்று நடந்த படப்பிடிப்பின் தொடர்ச்சி மறுநாள் இருக்காது.

செல்வராகவன் இயக்கத்திலும் சரி, டப்பிங்கிலும் நுணுக்கமாக பார்த்து பார்த்து செல்வார். அவருடைய இயக்கத்திலும், எழுத்திலும் எனக்கு தீராத காதல் உண்டு. செல்வாவின் இயக்கத்தில் ஆத்மார்த்தமாக நடித்திருக்கிறேன்.

யுவனின் இசையைப் பார்க்கும் போது எனக்கு ஆச்சரியமாக இருக்கும். அவருடைய இசை காலத்தைக் கடந்து நிற்கும் என்பதில் சந்தேகமில்லை. சாய்பல்லவி ஒவ்வொரு காட்சி முடிந்தபிறகும் நான் நன்றாக நடித்திருக்கிறேனா? என்று கேட்டு மிகவும் அர்ப்பணிப்புடன் நடித்தார். இதுதவிர, இப்படத்தில் நடித்த மற்ற நடிகர், நடிகைகளும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு காலதாமதமானாலும் இப்படத்திற்கு என்ன தேவையோ அதை தேவைப்படும் நேரத்தில் சரியாக செய்துக் கொடுத்தார். என்னுடைய துறையில் இப்படம் ஒரு முக்கியமான படமாக இருக்கும். இப்படத்தின் டப்பிங் பேசி முடித்துவிட்டேன். செல்வராகவன் அடுத்த படம் எடுத்தால் நானே கதாநாயகனாக நடிக்க விருப்பம்,” என்றார்.

சாய் பல்லவி தன்னுடைய உரையில், “கதை கேட்டவுடன் எனக்கு பிடித்தது. படப்பிடிப்பு எனக்கு ஸ்கூல் மாதிரி இருந்தது. லீவு கிடைக்காதா?, மழை பெய்யாதா? என்று ஸ்கூல் மாணவன் போல் நினைத்துக் கொண்டு இருந்தேன்.

படப்பிடிப்பு தளம் எனக்கு மிகவும் பயமாக இருந்தது. நான் வீட்டில் இருந்து செல்லும் போதே இப்படி நடிக்கனும், அப்படி நடிக்கனும் என்று தயாராக செல்வேன். ஆனால், அங்கு சென்றால் வேற மாதிரி இருக்கும். நான் தயாராக செல்வதுதான் தவறு என்று புரிந்துக் கொண்டேன்.

இயக்குனர் செல்வராகவனிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டேன். என்னை விட சிறப்பாக நடிக்கிறார். சூர்யாவின் மிகப்பெரிய ரசிகை நான். அவர் கூட இருந்து எப்படி பட்டவர் என்று தெரிந்துக் கொண்டேன்”, என்றார்.

இதற்கிடையே, என்ஜிகே டிரைலரில் இடம்பெறும் நாட்டுல ஒவ்வொன்னும் ஒருவிதமான பைத்தியம், அவனுக்கு இந்த நாட்டுமேலேயே பைத்தியம் என்ற வசனம் ரசிகர்களை கவர்ந்துள்ளது.