குடும்ப ரசிகர்களை கவர வருகிறார் சூர்யா – ஆகஸ்ட் 14ல் வெளியாகும் ‘விஸ்வநாத் & சன்ஸ்’!
சமீபத்திய தமிழ் திரையுலகில் ஆக்ஷன், வன்முறை என பரபரப்பான கதைகள் அதிகம் வெளியாகி வரும் நிலையில், குடும்ப உறவுகள், மனித உணர்வுகள், காதல், கனவுகள் மற்றும் வாழ்க்கையின் நெகிழ்ச்சியான தருணங்களை மையமாகக் கொண்ட திரைப்படங்களுக்கான எதிர்பார்ப்பும் அதிகரித்து வருகிறது. அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் உருவாகியுள்ள சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படம், ஆகஸ்ட் 14 சுதந்திர தின விடுமுறையை முன்னிட்டு உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
சூர்யா நடிப்பில் வெளியான ‘கருப்பு’ திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு, அவரது அடுத்த படைப்பாக வெளியாகும் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ மீது ரசிகர்கள் மத்தியில் ஏற்கனவே பெரும் ஆர்வம் உருவாகியுள்ளது. குடும்பத்தை மையமாகக் கொண்ட சுவாரஸ்யமான கதைக்களத்துடன் உருவாகியுள்ள இப்படம், பல தலைமுறைகளைச் சேர்ந்த உறவுகள், அவர்களின் கனவுகள், சவால்கள் மற்றும் உணர்வுகளை அழகாகப் பதிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சர்வதேச அளவில் சாதனை படைத்த துப்பாக்கிச் சுடும் வீரரான சஞ்சய் விஸ்வநாத் கதாபாத்திரத்தில் சூர்யா நடித்துள்ளார். காதல், குடும்பப் பாசம், விளையாட்டு, உணர்ச்சி மற்றும் பொழுதுபோக்கு என அனைத்து அம்சங்களையும் இணைத்து உருவாகியுள்ள இப்படம், சூர்யா ரசிகர்களை மட்டுமின்றி அனைத்து தரப்பு குடும்ப ரசிகர்களையும் கவரும் வகையில் அமைந்துள்ளது.
மமிதா பைஜு நாயகியாக நடிக்க, ராதிகா சரத்குமார், யோகி பாபு, ரவீனா டாண்டன், நாசர், காளி வெங்கட், ஜார்ஜ் மரியான், பவானிஸ்ரீ உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
‘வாத்தி’, ‘லக்கி பாஸ்கர்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய வெங்கி அட்லூரி இப்படத்தை இயக்கியுள்ளார். சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் இணைந்து பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். ஏற்கனவே வெளியாகியுள்ள பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. நிமிஷ் ரவி ஒளிப்பதிவையும், நவீன் நூலி படத்தொகுப்பையும் கவனித்துள்ளனர்.
ஃபர்ஸ்ட்-லுக் போஸ்டர் மற்றும் சமீபத்தில் வெளியான டிரெய்லர் ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளன. இதனையடுத்து, படத்தின் முன்பதிவு தொடங்கியுள்ள நிலையில், ரசிகர்கள் ஆர்வத்துடன் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து வருகின்றனர்.
குடும்பத்துடன் இணைந்து ரசிக்கக்கூடிய பொழுதுபோக்கு திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பை ‘விஸ்வநாத் & சன்ஸ்’ பூர்த்தி செய்யுமா என்ற ஆவலுடன், ஆகஸ்ட் 14 வெளியீட்டை ரசிகர்கள் உற்சாகமாக எதிர்நோக்கி வருகின்றனர்.