மேட்டர் டீலக்ஸ்: சமந்தாவை சாடுகிறாரா ராஷி கன்னா?

சமீபத்தில் வெளியான சூப்பர் டீலக்ஸ் படத்தில் சர்ச்சைக்குரிய கதாபாத்திரத்தில் நடித்து பல பேரோட டிஸ்லைக்ஸை அள்ளியுள்ள சமந்தாவை தாக்கும் விதமா நடிகை ராஷி கன்னா ஒரு கருத்து தெரிவித்து இருக்கிறார்.

சமந்தாவின் பெயரை குறிப்பிடாமல் பேசிய ராஷி, “நடிகர், நடிகைகள் சமூகத்தில் பாதிப்பு ஏற்படுத்தக் கூடியவர்கள். எனவே திரையில் என்ன மாதிரியான கதாபாத்திரத்தில் நடிக்கிறோம் அது எவ்வாறு சித்தரிக்கப்படுகிறது என்பதில் கவனமாக இருக்க வேண்டும்,” என்றார்.

மேலும், பெருகி வரும் பாலியல் குற்றங்களைப் பற்றி பேசும் போது, “நீதித்துறையில் மாற்றங்கள் நிகழவேண்டும். சட்டங்கள் மூலம் கடுமையாகவும் உடனடியாகவும் தண்டிக்க வேண்டும். இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்,” என்றார்.

இமைக்கா நொடிகள் மூலம் அறிமுகமான ராஷி, தொடர்ந்து ஜெயம் ரவிக்கு ஜோடியாக அடங்கமறு படத்தில் நடித்தார். அந்த இரு படங்களுமே பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் பற்றி விரிவாகவே பேசின.

“ஒரு நடிகையாக இது போன்ற படங்களில் நடிக்க முடியும். சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவிடமுடியும். ஆனால் இத்தகைய குற்றங்களை நிறுத்துவதற்கோ அல்லது குறைப்பதற்கோ இது போதுமானதாக இருக்காது,” என்று ராஷி தெரிவித்துள்ளார்.

தற்போது விஜய் சந்தர் இயக்கத்தில் உருவாகி வரும் சங்கத்தமிழன் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்து வரும் ராஷி கன்னா, தமிழ் கற்று வருகிறார்.

“நான் முதலில் தெலுங்கில் அறிமுகமானதால் அந்த மொழி எனக்கு பழக்கமாகி விட்டது. நான் தெலுங்கு சினிமாவுக்கு வந்து நான்கு வருடங்களாகி விட்டன. தற்போது என்னால் தெலுங்கில் பேச முடியும். தெலுங்கை அடுத்து தமிழ் கற்று வருகிறேன்,” என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், “படப்பிடிப்பின் போது செட்டில் உள்ளவர்களிடம் தமிழில் பேச முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். விரைவில் தமிழை கற்று விடுவேன். மொழியை தெரிந்து வைத்துக் கொண்டால் தான் வசனங்கள் புரியும். தற்போது நான் நடித்து வரும் ‘சங்கத் தமிழன்’ படத்தில் ஒரு பாடலை படமாக்கியுள்ளோம். அந்த படத்தில் என் கதாபாத்திரம் வித்தியாசமானது. என் வசனங்கள் கூட வித்தியாசமனது. அந்த படத்தில் நடிப்பது மகிழ்ச்சியாக உள்ளது,” என்று கூறியுள்ளார்.