விஜய் சேதுபதி நடித்த ‘பத்தா’ திரைப்படத்தின் சக்சஸ் மீட் நிகழ்ச்சி!
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, லிஜோமோல் ஜோஸ், ஹரிகிருஷ்ணன்,சாந்தி பாலச்சந்திரன், அர்ஜுன் சிதம்பரம், சாய் பிரித்வி ராஜ், சஹஸ்ரா, அஜய் கோஷ், தீபா வெங்கட் நடிப்பில், பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் உருவாகி, அக்டோபர் 1ஆம் தேதி வெளியான திரைப்படம் ‘பத்தா’.
இப்படத்திற்கு சாய் அப்யங்கர் இசையமைக்க, செல்வகுமார் எஸ்.கே. ஒளிப்பதிவு செய்திருந்தார். படத்தொகுப்பு: ஆர். கலைவாணன். அட்லீ வழங்க, ஸ்டார் ஸ்டுடியோ18 (Star Studio18) , ஏ ஃபார் ஆப்பிள் ஸ்டுடியோஸ் (A for Apple Studios) , சினி 1 ஸ்டுடியோஸ் புரொடக்ஷன் நிறுவனங்கள் ( Cine 1 Studios Production) சார்பில் முராத் கெதானி, பிரியா அட்லீ, அலோக் ஜெயின் & அஜித் அந்தாரே ஆகியோர் தயாரித்திருந்தனர்.
ஆக்சன் படமாகத் தொடங்கி, மானுட மெல்லுணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் சுவாரஸ்யமாக விரியும் கதையில் உருவான ‘பத்தா’ திரைப்படம், விமர்சன ரீதியாக ஊடகங்களால் பாராட்டப்பட்டும், வசூல் ரீதியாகத் திரையரங்குகள் அதிகரிக்கப்பட்டும் வெற்றிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. இந்த வெற்றி மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளும் வகையில், ‘பத்தா’ படக்குழுவினர் ‘சக்சஸ் மீட்’ வெற்றிச் சந்திப்பை முன்னிட்டு பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர்
நிகழ்ச்சியில் படத்தின் ஒளிப்பதிவாளர் செல்வகுமார் பேசும்போது,
“முதலில் இந்த வாய்ப்பு கொடுத்த அட்லீ அண்ணாவுக்கு நன்றி. நான் ஒவ்வொரு படத்திலிருந்தும் கற்றுக்கொண்டிருக்கிறேன். அந்த வகையில் இயக்குநர்கள் லோகேஷ் கனகராஜ், ராஜுமுருகன் வரிசையில் பாலாஜி தரணிதரன் அவர்களிடமும் கற்றுக்கொண்டேன். அது மட்டுமில்லாமல், வாழ்க்கையில் எதற்கும் ஆசைப்படக்கூடாது, எளிமையாக வாழ வேண்டும் என்பதையும் அவரிடம் கற்றுக்கொண்டேன். மாலை 6 மணிக்குள் சாப்பிட்டுவிட வேண்டும், சீக்கிரம் தூங்கப் போய்விட வேண்டும், செல்போன் தொடர்புகளை விட்டுவிட்டு நிம்மதியாகத் தூங்க வேண்டும் என்றெல்லாம் அவரிடம் கற்றுக்கொண்டேன்.
விஜய் சேதுபதி சார் அருமையாக நடித்திருந்தார். சிறுவன் சாய் நடிப்பில் ஆச்சரியப்படுத்தினான். லிஜோமோல் சிறப்பாக நடிக்கக்கூடியவர். ‘மகளே’ பாடலின் படப்பிடிப்பின்போதே எனக்குக் கண்கள் கலங்கின” என்றார்.
நடிகர் ஹரிகிருஷ்ணன் பேசும்போது,
” இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது அனைவருக்கும் மிக்க நன்றி .ஒரு நல்ல படத்தில் நான் இருப்பதற்காக, நான் பங்கேற்க வாய்ப்பு கொடுத்ததற்காக நன்றி. விஜய் சேதுபதி அண்ணா அவர்களுடன் நான் நடித்ததற்காகவும் எனக்கு உரிய இடத்தை கொடுத்ததற்காகவும் நன்றி. இந்தப் படத்திற்கு நல்ல நேர்நிலை உணர்வுகள் உருவாகிக்கொண்டே வருகின்றன. அதற்கு காரணம் அட்லீ என்கிற நல்ல ஆத்மா தான் காரணம்” என்றார்.
நடிகர் பாலமுருகன் பேசும்போது ,
“எனக்கு இது தான் முதல் படம். நான் இதற்கு முன்பு மீடியாக்களில் இருந்து கொண்டு சினிமா நிகழ்ச்சிகளைப் பார்த்துக் கொண்டிருந்தேன். இப்பொழுது நான் இந்த மேடையில் இருக்கிறேன். வாய்ப்பு கொடுத்த இயக்குநருக்கு நன்றி.விஜய் சேதுபதி அண்ணாவிடம் நிறைய கற்றுக் கொண்டேன்” என்றார்.
சாய் அப்யங்கர் முதலில் இசையமைக்க எனக்கு ஒரு சின்ன பயம் இருந்தது. ஆனால் அந்தப் பயத்தை நீக்கி, நம்பிக்கையை அவர் ஏற்படுத்தினார். அதற்குப் பிறகு பின்னணி இசை அமைக்க வைத்தேன். அவர் படத்தை வேறொரு உயரத்துக்குக் கொண்டு சென்றார். அதுமட்டுமல்ல, காஸ்டியூமர் ஸ்ருதி மஞ்சரி வயதில் இளையவராக இருந்தாலும், 80s களின் உடைகளை எல்லாம் சரியாகக் கொண்டு வந்தார். டிசைனர் கோபி பிரமாதமான திறமைசாலி.
பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா பேசும்போது,
“இது ஒரு நீண்ட பயணம். இந்தப் படம் வணிகப் படங்களுக்குள் கலையை கொண்டு வந்த படம். இந்தப் படத்தின் வெற்றி மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருக்கிறது. வணிகத்தை மீறி கலை செய்யக்கூடிய இயக்குநராக பாலாஜி தரணிதரன் இருக்கிறார்.
இந்தப் படம் என் வாழ்க்கையைப் பிரதிபலிப்பதாக இருப்பதால் என் மனதுக்கு நெருக்கமான படமாக இருக்கிறது. படத்தில் வரும் பத்தாவுக்கு அவன் பாடியபோது ஒரு சின்ன பாராட்டு கிடைத்திருந்தால், அவன் கத்தியைத் தூக்கியிருக்க மாட்டான்.
என் வாழ்க்கையும் அப்படித்தான் திசை மாறியது. போதை அடிமையாக இருந்து மாறியிருக்கிறேன். நல்ல படங்கள் எல்லாம் நல்ல புத்தகங்கள் போன்றவை. இந்தப் படம் அப்படிப்பட்ட படம்” என்றார்.
திங்க் மியூசிக் சந்தோஷ் பேசும்போது,
“விஜய் சேதுபதி சாரின் ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ முதல் அவரது எல்லா முக்கியமான படங்களிலும் நாங்கள் இணைந்திருக்கிறோம். இந்தப் படத்திலும் இணைய வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி” என்றார்.
நடிகர் விஜய் சேதுபதி பேசும்போது,
“எனக்கு இப்போது காய்ச்சல் வந்திருப்பது போல இருக்கிறது. பெரிய மகிழ்ச்சியாக இருந்தால் எனக்குக் காய்ச்சல் வரும். நான் நன்றி சொல்வதற்கு நிறைய பேர் இருக்கிறார்கள். யாரிடம் தொடங்குவது என்று எனக்குத் தெரியவில்லை. முதலில் இந்தப் படத்தை இவ்வளவு தூரம் கொண்டு சென்றதற்குப் பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கு மிகவும் நன்றி. ஒரு படத்தை எடுத்து வந்து உங்களுக்குப் போட்டுக் காட்டிவிட்டுக் காத்திருக்கும் போது, பிரசவத்திற்கு மனைவியை அனுப்பிவிட்டு வெளியில் பதற்றத்துடன் காத்திருப்பது போல் இருக்கும்.
நீங்கள் எல்லாம் மலர்ந்த முகத்தில் வந்தீர்கள் என்றால், அன்று எங்கள் தோட்டம் முழுவதும் பூக்கள் பூத்திருக்கும். மகிழ்ச்சியாக வருவோம். கொண்டாட்டத்துடன் வருவோம். நீங்கள் நின்று, பாராட்டி, கை கொடுத்து, கட்டிப் பிடித்து, நடத்தியபோது மகிழ்ச்சியாக இருந்தது. மக்களுக்கும் ரசிகர்களுக்கும் நன்றி. இந்தப் படத்தை தங்கள் படம் போல ஆரத்தழுவிக் கொண்டாடிக் கொண்டிருக்கும் அன்புக்குரிய மக்களுக்கும் என் ரசிகர்களுக்கும் மிக்க நன்றி.
உங்களுக்குப் பிடித்து விட்டால் போதும், தூக்கிக் கொண்டு செல்வீர்கள். அது பற்றி யார் என்ன மாதிரியாகப் பேசினாலும், அதற்கு விளக்கம் கொடுப்பீர்கள். அனைத்து சமூக ஊடகங்களிலும் கொண்டு செல்வீர்கள். அப்படி அதை நீங்கள் உங்கள் படத்தைப் போலவே கொண்டாடும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. இப்படிப்பட்டவர்களைப் பார்க்கும்போது, நம் வாழ்க்கை வரம்தான் என்பதை நினைவுபடுத்துகிறது.
இந்தக் கதையை மற்ற தயாரிப்பாளர்கள் நம்பவில்லை. அட்லீ தான் நம்பினார். சினிமா என்பது வியாபாரம் தான். இதைக் குறையாகச் சொல்லவில்லை. இயக்குநர் பற்றி சில கேள்விகள் கேட்டார்கள். இயக்குநரைப் பற்றிப் பேசும்போது, அவருக்கு முந்தைய படம் என்ன? அதன் வியாபாரம் என்ன? என்று கேள்விகளைக் கேட்டார்கள். ஆனால் அவர் இயக்கிய மூன்று படமும் அற்புதமானவைதான். நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சீதக்காதி, பத்தா என மீண்டும் அற்புதமான படங்கள் தானே? ஒரு பக்கக் கதையில் நான் நடிக்க ஆசைப்பட்டேன். ஆனால் என் முகத்தைப் பார்த்துவிட்டு கல்லூரி மாணவனாக நடிக்க வேண்டும் என்றார். அவர் மேலும் உற்றுப் பார்த்து இருந்தால் ஒப்புக்கொள்வார். அதனால் நடிக்க முடியவில்லை.
சீதக்காதி, முதலில் என்னை ஏற்றுக்கொள்ளவில்லை. கமல் சார், அமிதாப் சார், மோகன்லால் சார் போன்றவர்கள் நடிக்க வேண்டிய கதை என்றார். ஆனாலும் நான் நடித்தேன். தெருவில் இருக்கும் நாய்கள் அழகாக இருந்தால் கூட, அதை நாம் ஒப்புக்கொள்ள மாட்டோம். ஜெர்மன் ஷெப்பர்ட்தான் நமக்குப் பிடிக்கும்.
இங்கு நிறைய நபர்களை அடிப்பது, இந்தக் கூட்டமாக இருப்பது, இதெல்லாம் பெரிய படங்களில் இருப்பவை. ஆனால் மனதில் உள்ளதைச் சொல்லக்கூடிய படம் தான் பத்தா. இது உணர்வுகளைச் சொல்கிற படம். எனக்கு குழந்தைகள் பிடிக்கும். ஆனால் இப்படத்தின் படப்பிடிப்பின் போது சின்ன பையன் சாய் உடன் நான் சரியாக பேசவில்லை, பழகவில்லை. ஏனென்றால் அவன் எனக்கு பயந்த மாதிரி நடிக்க வேண்டும். ஒரு சகஜம் ஏற்பட்டு விட்டால் அது மாறிவிடும் என்று நான் இறுக்கமாக இருந்தேன். அவன் நன்றாக நடித்திருக்கிறான். இந்தப் படத்தின் மூலம் பெரிய புகழ் வந்திருக்கிறது. அவன் திசை மாறிச் சென்றுவிடக்கூடாது. அவன் நன்றாகப் படிக்க வேண்டும் என்று சொல்வேன். லிஜோமோலின் பங்களிப்பு சிறப்பாக இருந்தது. நன்றி. என் சகோதரர்கள் ஹரி, ஜோதி, விஷ்ணு, பாலா, உங்களுக்கும் நன்றி. நீங்கள் மிகவும் நன்றாகச் செய்திருக்கிறீர்கள். சாய் அப்யங்கர் மீது எனக்கும் சந்தேகம் இருந்தது. ஆனால் இந்தப் படத்தைப் புரிந்துகொண்டு வேலை செய்தார். இப்படி அனைவரும் இந்தப் படத்தின் கதையைப் புரிந்துகொண்டு பணியாற்றினார்கள். அனைவருக்கும் நன்றி” என்றார்.
நிறைவாகத் தயாரிப்பாளர் அட்லீ பேசும்போது,
“எப்படி இருந்தாலும், எப்படிப் பேசினாலும் குற்றம் சொல்கிறார்கள். நான் திமிர் பிடித்தவன் என்கிறார்கள். நியாயமாக இருக்க வேண்டும்; கூட இருப்பவர்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பேன். அந்த நேர்மை, நம்பிக்கை திமிர் என்றால் இருக்கட்டும்.
பால் கெட்டுப் போனால், தயிராகும்போது அது மதிப்பு மிக்கதாக மாறுகிறது. தயிர் கெட்டுப் போனால், நெய்யாகும்போது அது மேலும் மதிப்பு மிக்கதாக மாறுகிறது. இப்படித்தான் வாழ்க்கையிலும் சில கெட்ட அனுபவங்களால் நாம் அடுத்த கட்டத்திற்குச் செல்வோம். கடவுள் வழி தவறவிட்டார் என்றால், அதற்கு ஒரு அர்த்தம் இருக்கும். அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்கிறார் என்று அர்த்தம். அப்படிப்பட்ட பத்தாவின் அனுபவம்தான் இந்தப் படம்.
நான் நம்பிக்கையோடு இருக்கிறேன். அப்படி அதற்கு திமிர் என்றால் வைத்துக் கொள்ளுங்கள்.
நான் சின்ன வயதில் விஜய் சாரை வைத்துப் படம் இயக்குவேன் என்றால், யாரும் நம்ப மாட்டார்கள், சிரிப்பார்கள். ஷாருக்கானை வைத்துப் படம் இயக்குவேன் என்றால், யாரும் நம்ப மாட்டார்கள், சிரிப்பார்கள். அப்படித்தான் எனது ஒவ்வொரு கட்டமும் இருந்தது. இன்று பாலிவுட் வரை சென்று படம் இயக்கியிருக்கிறேன்.
நான் கறுப்பாக இருக்கிறேன், மதுரை பக்கத்தில் இருந்து வந்திருக்கிறேன். அதனால் சிலருக்குக் கேலியாகத் தெரியலாம். ஆனால் இதைப் பற்றி நான் கண்டுகொள்ளாமல் என் பாதையில் போய்க் கொண்டே இருப்பேன்.
இந்தப் படத்தைப் பொறுத்தவரை, நான் சொன்ன ஒரு சொல்லிற்காக வந்து இணைந்து கொண்ட தயாரிப்பாளர் முராத் கெதானிக்கு நன்றி.
சிலரை மறக்கவே முடியாது. அப்படிப்பட்டவர்தான் விஜய் சேதுபதி அண்ணன். அவர் நல்ல மனிதர், நல்ல நடிகர் என்பதைவிட, முதலில் நல்ல மனிதர். அவரைப் பார்த்து நிறைய கற்றுக்கொண்டிருக்கிறேன். அவரைப் பற்றி ரஜினி சார், ஷாரூக்கான் எல்லாம் பேசுகிறார்கள்.
இன்று விஜய் சேதுபதி அண்ணாவை இந்தியா முழுக்க தெரியும். அவரை நான் மேலும் மேலே கொண்டு செல்வேன். கமல் சார், விஜய் சேதுபதி அண்ணா இருவரையும் வைத்து வாய்ப்பு இருந்தால் ‘மருதநாயகம்’ படத்தினை மீண்டும் தொடங்கி எடுக்க வேண்டும் என்பது என்னுடைய ஆசை.
சாய் அப்யங்கர் கடவுளின் குழந்தை. அவரைப் பற்றிப் பலரும் பலவிதமாகப் பேசலாம். ஆனால் நாங்கள் லண்டன் சென்றபோது, ஹாலிவுட் படங்களில் பணியாற்றிய சுமார் 200 இசைக் கலைஞர்களையே இவரது இசைக் குறிப்புகளுக்கு வாசிக்கவைத்து, ஆச்சரியப்படுத்திக் கைதட்டல் வாங்கி வந்தவர். நான் இங்கு சொல்கிறேன், அவர் தமிழ்நாட்டின் பெருமைமிகு அடையாளமாக வளர்வார். இப்படம் வெற்றிப் பாதையில் சென்று கொண்டிருந்தாலும், மேலும் வெற்றிபெற வைக்க வேண்டும் என்று நான் மக்களைத் தேடிச் செல்கிறேன். அது குறைவானதல்ல. மக்களை நோக்கிச் செல்வது உயர்வான விஷயம்” என்றார்.
***B.YUVRAAJ (P.R.O)