ஸ்டாலின்‍ டிடிவி ரகசிய டீலிங் ஓவர், தங்க தமிழ்செல்வனுக்கு தடை

தங்களது ரகசிய டீலிங்கை லீக் செய்து விட்டார் என்று தங்க தமிழ்செல்வன் மீது அமமுக திமுக தலைமைகள் கோபத்தில் இருக்கிறார்களாம். இனிமேல் அவர் மீடியாக்களிடம் வாயைத் திறக்கக்கூடாது எனத் தடையும் போடப்பட்டுள்ளதாம்.

வெள்ளந்தியான அதிரடி பேச்சுக்கு சொந்தக்காரரான தங்க தமிழ்செல்வன், இந்த தேர்தலை அதிமுக ஆட்சியை வீட்டிற்கு அனுப்பும் தேர்தலாக பார்க்கிறோம். திமுகவும் நாங்களும் சேர்ந்தால் தான் இந்த ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப முடியும் என கூறியிருந்தார்.

இது குறித்து விமர்சித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “திமுகவுடன், அமமுக கூட்டு வைத்துள்ளது தங்க தமிழ்செல்வன் மூலம் வெட்ட வெளிச்சமாக வெளிப்பட்டுள்ளது” எனத் தெரிவித்து இருந்தார். அமைச்சர்களும் இதுகுறித்து அமமுக மீதும் தினகரன் மீதும் குற்றச்சாட்டுகளை அடுக்கினர்.

விரைவில் தங்க தமிழ்செல்வன் திமுகவில் சேரப்போகிறார் என அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தங்கத் தமிழ்ச்செல்வனின் பேட்டிகளில் திமுகவில் சேரப் போவதை சொல்லாமல் சொல்லிக் கொண்டிருப்பதாகக் கூறினார்.

அதோடு, திமுக-அமமுக கூட்டு, தங்க தமிழ்செல்வன் மூலம் வெட்டவெளிச்சமாகியுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனைத் தெரிவித்தார். மைனாரிட்டி ஆட்சி கவிழ்க்கப்படும் என மு க ஸ்டாலின் கூறியதாக எழுப்பப்பட்ட கேள்விக்கு திமுக தான் மைனாரிட்டி ஆட்சி நடத்தி வந்ததாகவும் தாங்கள் மைனாரிட்டி ஆட்சி நடத்தவில்லை என்றும் தெரிவித்தார்.

இந்நிலையில் இதுகுறித்து மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த தங்க தமிழ்செல்வன் பேசும்போது, “எம்ஜிஆர் ஆட்சி, எம்ஜிஆர் ஆட்சி என்று சொன்னீர்களே? ஏன் ஜானகி ஆட்சியை கலைத்தீர்கள். ஜெயலலிதா நல்லவர், ஜானகி ஆட்சியில் இருப்பவர்கள் நல்லவர்கள் அல்ல. எனவே அந்த ஆட்சியை கலைத்துவிட்டு ஜெயலலிதாவை கொண்டுவரத்தான் அவரை அமரவைத்தோம், உண்மைதானே.

இன்றைக்கு அதிமுக ஆட்சி, அம்மா ஆட்சி என சும்மா சொல்கிறீர்கள். ஊழல் ஆட்சிதான் நடக்கிறது. துரோகிகள் ஆட்சி நடக்கிறது. டி.டி.வி.தினகரனை முதல்வராக்க இந்த ஆட்சியை கலைப்போம். கலைப்பது தப்பில்லையே? இந்த இடைத்தேர்தலில் 22 சீட்டு வென்றோம் என்றால் நாளைக்கு எடப்பாடி நம்பிக்கை கோரும் தீர்மானம் கவனரிடம் கொடுக்க வேண்டும். அப்போது நாங்க அதிமுகவுக்கு எதிராகத்தான் ஓட்டு போடுவோம். திமுகவும், அதிமுகவிற்கு எதிராக ஓட்டுப்போடும். காங்கிரசும் எதிராக தானே ஓட்டு போடும், முஸ்லீம் லீக்கும் எதிராக தானே ஓட்டுப்போடும். அப்போ நாங்கள் எல்லாம் ஒன்று சேர்ந்துவிட்டோம் என்று அர்த்தமா? பிறகு ஏன் நான் சொன்னது தப்பு என்று சொல்கிறீர்கள்?” என கூறியுள்ளார்.