அசராத ஸ்ரீரெட்டி, அதிர்ச்சியில் திரையுலகம்

நடிகை ஸ்ரீரெட்டி திரையுலக பிரமுகர்கள் மீது சொன்ன பாலியல் புகார்களைத் தொடர்ந்து இது குறித்து விசாரணை நடத்த ராமமோகன்ராவ் தலைமையில் 25 பேர் கொண்ட குழுவை தெலுங்கானா அரசு அமைத்துள்ளது.

இந்த குழுவில் நடிகை சுப்ரியா, இயக்குனர் நந்தினிரெட்டி, சமூக ஆர்வலர் விஜயலட்சுமி உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். தமிழ் திரையுலகத்திலும் ‘மீ டூ’ கமிட்டி அமைக்கப்பட்டுள்ள நிலையில், பல பிரபலங்கள் தங்கள் வண்டவாளம் தண்டவாளம் ஏறிவிடுமோ என பயத்தில் உள்ளனர்.

ஆனால் ஸ்ரீரெட்டியோ, “எனது கனவுகள் இப்போது நிஜமாகி இருக்கிறது. சினிமாவில் கதாநாயகர்களாக தோன்றுபவர்கள் நிஜவாழ்க்கையில் அப்படி இருப்பது இல்லை. ஆனால் தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகரராவ் உண்மையான ஹீரோ என்பதை நிரூபித்துவிட்டார்.

இதுவரை மோசமாக அழைக்கப்பட்டு வந்த நான் இந்த அறிவிப்பு மூலம் கதாநாயகி ஆகிவிட்டேன். ஒரு வருடமாக நான் சுமந்த வலியும், வேதனையும் இப்போது பறந்து விட்டது. எனக்கு ஆதரவு தந்த அனைவருக்கும் நன்றி,” என கூறியுள்ளார்.

தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகில் பாலியல் தொல்லை இருப்பதாக கூறி பரபரப்பை ஏற்படுத்திய ஸ்ரீரெட்டி சமீபத்தில், திரிஷா – ராணா நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ராணாவை சாடினார்.

“ராணாவின் தந்தை சுரேஷ் பாபுவோ பெண்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்று கூறிவருகிறார். ஆனால் அவருக்கு தனது மகன்கள் ராணா, அபிராமை ஒழுங்காக வளர்க்க தெரியவில்லை. ராணாவின் தாத்தாவும் பெண்கள் விஷயத்தில் இப்படித்தான் இருந்தார். அவரைப்போன்று பேரன்களும் உள்ளனர்,” என சமூக வலைதளத்தில் பகிர்ந்தார்.

ஸ்ரீரெட்டி தனது முகநூல் பக்கத்தில் திரிஷாவுடன் ராணா நெருக்கமாக இருந்து கன்னத்தில் முத்தமிடும் படத்தையும், அவரது தம்பி அபிராம் தன்னுடன் நெருக்கமாக இருக்கும் படத்தையும் தற்போது வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தினார்.