தென்னிந்திய கலைஞர்கள் சங்க பத்திரிகை செய்தி!
தேதி: 07.11.2025
பத்திரிகை செய்தி
அன்பு பத்திரிகை நண்பர்களுக்கு…
வணக்கம். திரைத்துறையும் பத்திரிகைத்துறையும் பிரிக்கவே முடியாத சகோதரர்கள். நல்ல திரைப்படங்களையும் திறமையான கலைஞர்களையும் உச்சி முகர்ந்து கடைக்கோடி மக்களிடமும் கொண்டு சேர்க்கும் நீங்கள், நாங்கள் தவறு செய்யும் போதும் சரியான விமர்சனங்களை மிகவும் நாகரிகமாக வெளிப்படுத்தி சரி செய்தும் வருகிறீர்கள். நேற்று நிகழ்ந்த இந்த நிகழ்வு மிகவும் விரும்பத் தகாதது.
தமிழ் திரையுலகம் எப்போதுமே பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் தரும் துறையாகவே விளங்கி வருகிறது. 75 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் திரையுலகில் பெண்கள் நடிகைகளாக மட்டும் அல்லாமல் இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் ஒளிப்பதிவாளராகவும் பிரகாசித்துள்ளனர். ஆனாலும் திரைத்துறையில் ஒரு பெண் நுழைந்து சாதிப்பது என்பது இன்னமும் பெரும் சவாலான ஒன்றுதான். அப்படி பெரும் சவாலை ஏற்று ஏதாவது ஒன்றை சாதித்து விட வேண்டும் என்ற நோக்கத்தில் தான் பெண்கள் திரைத்துறைக்கு அடி எடுத்து வைக்கின்றனர். அப்படி திரைத்துறைக்கு வரும் பெண்களை அவர்களுக்கான பாதுகாப்பையும் அவர்கள் தன்மானத்தையும் சுய கௌரவத்தையும் பாதுகாப்பது என்பது நம் எல்லோரது கடமையும் கூட.
ஆனால் பத்திரிகையாளர் சந்திப்புகளில் ஒரு சில வக்கிரமான நபர்கள் பத்திரிக்கையாளர்கள் போர்வையில் நடிகைகளை பார்த்து ஏளனமாக கேள்வி கேட்பதும் அவமானப்படுத்துவது கவலை அளிக்கிறது. நேற்று எங்களது சகோதரி ஒருவருக்கு நிகழ்ந்த நிகழ்வு அதே நபரால் சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு இன்னொரு சகோதரிக்கும் நிகழ்ந்தது. இன்றைய சூழலில் செல்போன் இருந்தால் ஒரு youtube சேனலை ஆரம்பித்து பத்திரிக்கையாளர் ஆகிவிடலாம், திரைத்துறையினர் பற்றி அவதூறுகளை ஆபாசமாக பரப்பி பார்வையாளர்களை பெற்று விடலாம் என்ற மோசமான நிலை நிலவுகிறது. இந்த சூழலில் எங்களுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டிய பத்திரிக்கை துறையில் இது போன்ற களைகள் முளைத்திருப்பது நாம் அனைவரும் ஒன்று கூடி பேசி சரியான முடிவு எடுக்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தி உள்ளது. நேற்று எங்கள் சகோதரிக்கு நடந்த சம்பவத்தை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். இனி எதிர்காலங்களில் இது போன்ற சம்பவங்கள் நடக்காதவாறு கலந்து ஆலோசிக்க தேவையான முன்னெடுப்புகளை தொடங்குவோம்.
(M.நாசர்)
தலைவர்
++++++++
“நேற்று எங்கள் சகோதரிக்கு நடந்த சம்பவத்தை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.இனி எதிர்காலங்களில் இது போன்ற சம்பவங்கள் நடக்காதவாறு கலந்து ஆலோசிக்க தேவையான முன்னெடுப்புகளை தொடங்குவோம்..”
M.Nasser
President
#siaa