சோதனை மேலை சோதனை… விரக்தியில் ஸ்டாலின்

வேலூர் தேர்தல் ரத்து… கனிமொழி வீட்டில் சோதனை… பணப்பட்டுவாடா செய்ய முயன்ற அமமுகவினரை தடுப்பதற்காக துப்பாக்கி சூடு… தேர்தலுக்கு இன்று ஒரு தினம் மட்டுமே இருக்கையில் தேர்தல் கமிஷன், வருமான வரித்துறை மற்றும் காவல் துறையினரின் இந்த அதிரடி ஆக்ஷன்கள் திமுக தலைவர் மு க ஸ்டாலினை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறதாம்.

அதனால் தான் பத்திரிகையாளர்களை சந்தித்து தன் மனக் குமுறல்களை கொட்டியதோடு மட்டுமில்லாமல், நீண்ட அறிக்கை ஒன்றையும் வெளியிட்டாராம். உச்ச நீதிமன்றத்தை அணுகலாமா என்றும் சட்ட வல்லுனர்களிடம் ஆலோசித்தாராம். ஆனால், நேரமும் காலமும் சாதகமாக இல்லை என்பதால் அந்த திட்டத்தை கைவிட்டு விட்டாராம்.

“யாரை திருப்திபடுத்த தேர்தல் ஆணையம் இந்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தேர்தலில் நடுநிலைமை என்ற தேர்தல் ஆணையத்தின் கோட்பாடு மோடியின் காலில் மிதிப்பட்டுக் கிடக்கிறது,” என்று ஸ்டாலின் கூறினார்.

மேலும் அவர், “ஜனநாயகத்தை காப்பாற்ற எங்களை வீதிக்கு வந்து போராடுகின்ற சூழலை உருவாக்கிவிட வேண்டாம். வேலூரில் எப்போது தேர்தல் நடத்தப்பட்டாலும் வெற்றி பெறப்போவது திமுக தான்,” என்றார்.

தன் வீட்டில் நடத்தப்பட்ட சோதனை குறித்து கனிமொழி கூறுகையில், “தூத்துக்குடியில் நான் தங்கியிருக்கும் வீட்டில் சோதனை செய்யப்பட்டிருப்பது சட்டத்திற்கு புறம்பானது,” என்று கூறினார்.

அவர் மேலும் பேசும்போது, “சுமார் 8.30 மணியளவில் சோதனை செய்ய அனுமதி கேட்டார்கள். உரிய ஆவணம் இருக்கிறதா என்று கேட்டேன். நாங்கள் முழுமையாக ஒத்துழைப்பு கொடுத்தோம். என் வீட்டில் சோதனை செய்யப்பட்டது சட்டத்திற்கு புறம்பானது.

சோதனைக்குப் பின் ஒன்றும் இல்லை என்று அவர்களே ஒப்புக் கொண்டார்கள். தமிழிசை வீட்டில் கோடி கோடியாக பணம் இருக்கிறது. அங்கு சோதனை செய்ய தயாரா?. தூத்துக்குடியில் எங்களை அச்சுறுத்துவதற்காக சோதனை நடைபெற்றிருக்கிறது. தோல்வி பயத்தால் சோதனை செய்யப்பட்டிருப்பதாக நான் கருதுகிறேன். எதுவாக இருந்தாலும் நாங்கள் சந்திப்போம்”, என்றார்.