நடிகர் மீது நடிகையின் பாலியல் புகார்: உண்மையா, பொய்யா?

இந்தி நடிகர் நானா படேகருக்கு (காலா வில்லன்) எதிராக பிரபல நடிகை தனுஸ்ரீ தத்தா (தீராத விளையாட்டு பிள்ளையில் விஷால் ஜோடி) வைத்த‌ பாலியல் குற்றச்சாட்டுக்கு, போதிய ஆதாரமில்லை என, மும்பை நீதிமன்றத்தில், போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நானாவும் தனுஸ்ரீ தத்தாவும் இணைந்து நடித்த ஒரு படம் 2008ல் வெளியானது. அந்த படத்தின் படப்பிடிப்பின்போது நானா படேகர் தன்மீது பாலியல் ரீதியாக அத்துமீறி நடந்து கொண்டதாகவும், அதற்கு அந்த படத்தின் நடன பயிற்சியாளர் கணேஷ் ஆச்சார்யா உதவியதாகவும் தெரிவித்தார். இது குறித்து போலீஸிலும் வழக்குப்பதிவு செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் தேவையான ஆதாரங்களை சமர்பிக்க காவல்துறைக்கு அவகாசம் அளித்தது. அந்த வழக்கில் ஆஜரான காவல் துறையினர் இதில் நானா படேகருக்கு எதிரான போதியமான சாட்சியங்கள் கிடைக்காததால் விசாரணையை தொடரமுடியவில்லை என தெரிவித்துள்ளனர்.

மும்பை போலீசார் விசாரணை நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தனர். அதில், ‘நானா படேகர் மீதான பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு, போதிய ஆதாரங்கள் இல்லை. இந்த வழக்கில், விசாரணையை மேலும் தொடர்வதில், எந்த அர்த்தமும் இல்லை. எனவே, வழக்கை முடிப்பதே நல்லது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, தனுஸ்ரீ தத்தா தரப்பினர் கூறுகையில், ‘போலீசார், நானா படேகரை பாதுகாக்க முயற்சிக்கின்றனர். வழக்கை முடிப்பது தொடர்பாக, எங்களிடம் எந்த தகவலும் கூறவில்லை. இது குறித்து, மும்பை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம்’ என்றனர்.

நானா மீது பாலியல் குற்றச்சாட்டை தெரிவித்து முன்னர் பேசிய தனுஸ்ரீ, “ஹீரோயின் மட்டுமே இடம்பெறக்கூடிய அந்த பாடலில் வலுக்கட்டாயமாக உள்ளே நுழைந்த நானா படேகரை நான் கண்டித்த போது, தனக்கு பிடித்ததை நான் செய்வேன் என்னை யாரும் தட்டிக்கேட்க முடியாது என்று சத்தமாகக் கூறினார்.

நானா படேகரின் இந்தச் செயலுக்கு படத்தின் தயாரிப்பாளர், இயக்குநர், நடன இயக்குநர் ஆகிய அனைவரும் ஆதரவாக செயல்பட்டனர். இதுகுறித்து நான் வெளியே கூறியதால் நானா படேகர் ஆதரவாளர்களின் மிரட்டலுக்கு ஆளாகினேன்.

என்னுடைய குடும்பத்தாரோடு வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது அவரது ஆதரவாளர்களால் தாக்குதலுக்கு உள்ளானேன்”, என்று கூறினார்.

“பெண்களுக்கு உரிய பாதுகாப்பு வேண்டும். பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்டால் தைரியமாக முன்வந்து புகார் தெரிவிக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாகத்தான் நான் புகார் கொடுத்தேன். விசாரணை முழுமையாக முடிந்த பிறகு தான் உண்மை வெளிவரும்,” என்றும் அவர் கூறினார்.