அன்றே சொன்ன சென்னை விஷன்: டிடிவிக்கு எதிராக போர்க்கொடி தூக்கும் புகழேந்தி

டிடிவி தினகரன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளராக முடி சூட்டிக் கொண்ட அடுத்த நாளே, அமமுகவில் உள்ள சசிகலாவின் விசுவாசிகள் குழப்பத்தில் இருக்கிறார்கள் என்றும், சில அமமுக முக்கியஸ்தர்கள் இதற்கு எதிராக போர்க்கொடி தூக்குவார்கள் என்றும் சென்னை விஷன் செய்தி வெளியிட்டது.

இப்போது அதை மெய்ப்பிக்கும் விதமாக, அமமுக செய்தித் தொடர்பாளர் பெங்களூரு புகழேந்தி தினகரன் மீது அதிருப்தி தெரிவித்துள்ளார்.

“சிறைக்குச் செல்வதற்கு முன்னர் அதிமுக பொதுச் செயலாளராக இருந்த சசிகலா, துணைப் பொதுச் செயலாளராக தினகரனை நியமித்தார். இனி பொதுச் செயலாளர் தினகரன் என்றால் சசிகலா யார்? இனி அவரால் எப்படி இரட்டை இலைக்காகப் போராட முடியும்?” என விகடனுக்கு அளித்த பேட்டியில் கேட்டுள்ளார் புகழேந்தி.

மேலும் அவர், “அதிமுகவை மீட்க வேண்டும் என்பதற்காகத்தான் அமமுகவைத் தொடங்கினோம். இதற்காக நீதிமன்றம் சென்றும் முடியாததால், தனிக்கட்சியாகச் செல்வதாகக் கூறுகிறார் தினகரன். `இது குழப்பத்தை ஏற்படுத்தும் செயல்’ என்பதுதான் தொண்டர்களின் கருத்து,” எனவும் கூறியுள்ளார்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளராக தினகரன் கடந்த வாரம் சென்னை அசோக்நகரில் நடைபெற்ற நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார். கழகத்தை கட்சியாக பதிவு செய்ய தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

எதிர்காலத்தில் அதிமுகவை அமமுகவுடன் சேர்த்து விடுவோம்; மதுரை ஆதினம் சொல்வதை எல்லாம் பெரிதுபடுத்த தேவையில்லை என்றும் தெரிவித்தார்.

“சசிகலா அதிமுகவை கைப்பற்றுவதற்காக மறு பரிசீலனை மனுதாக்கல் செய்ய உள்ளார். எனவே அவரால் இந்த கட்சியை தொடங்க முடியாது. எனவே நான் கட்சியை தொடங்கியுள்ளேன்.
சசிகலா தேவைப்பட்டால் இங்கு வரலாம். எனவே தலைவர் பதவியை காலியாக வைத்துள்ளோம்,” எனவும் அவர் கூறினார்.