ரெஜினாவுக்கு ரகசிய திருமணமா?

ரெஜினா கசாண்ட்ராவுக்கு கடந்த 13-ம் தேதி ரகசியமாக திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்து விட்டதாக கோலிவுட்டில் தகவல் பரவிய நிலையில், அது குறித்து அவர் விளக்கமளித்துள்ளார்.

பாலிவுட்டில் ஏக் லட்கி கோ தேகா தோ ஐசா லகா என்ற படத்தில் சிறப்பாக நடித்து, ரசிகர்களை கவர்ந்த ரெஜினா கசாண்ட்ரா, தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நாயகிகளில் ஒருவராக இடம் பிடித்துள்ளார்.

தமிழில் கண்ட நாள் முதல் படத்தின்  மூலம் அறிமுகமாகி இருந்தாலும், ரெஜினாவை ரசிகர்களிடம் அடையாளப்படுத்தியது என்றால், அது நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த கேடி பில்லா கில்லாடி ரங்கா படம் எனலாம்.

இதைத் தொடர்ந்து சரவணன் இருக்க பயமேன், மிஸ்டர் சந்திரமௌலி, மாநகரம், சிலுக்குவார் பட்டி சிங்கம், ஆகிய படங்களில் நடித்தார். இவர் நடிப்பில் விரைவில் பார்ட்டி திரைப்படம் வெளியாக உள்ளது. சிம்புதேவன் இயக்கும் கசட தபர படத்திலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில், ரெஜினா கசாண்ட்ராவுக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளதாகவும், விரைவில் திருமணம் செய்யவுள்ளதாகவும் திருமணத்திற்கு பின்னர் சினிமாவில் நடிக்க மாட்டார் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன.

குடும்பத்தினர் மட்டுமே இதில் கலந்துகொண்டதாகவும், மிகவும் ரகசியமாக நிச்சயதார்த்தத்தை நடத்தி முடித்ததாகவும் பேசுகின்றனர். கைவசம் உள்ள படங்களை முடித்துவிட்டு விரைவில் அவர் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டு உள்ளதாகவும் கூறப்பட்டது.

இது வதந்தியா அல்லது உண்மையா என்பது தெரியாமல் இருந்த நிலையில், இந்த செய்தியை திட்டவட்டமாக மறுத்துள்ள ரெஜினா, திருமண அறிவிப்பு விவகாரத்தில் நிச்சயம் ஒளிவு மறைவு இருக்காது என விளக்கம் அளித்துள்ளார்.

ஏக் லட்கி கோ தேகா தோ ஐசா லகா படத்தில் ஓரின சேர்க்கையாளர் கதாபாத்திரத்தில் துணிச்சலாக நடித்து ரெஜினா பரபரப்பை ஏற்படுத்தினார். ரெஜினாவுக்கு தற்போது 28 வயது ஆகிறது.