வெளியே வர்ப்போகும் சசிகலா, தவிப்பில் தமிழக அரசியல் புள்ளிகள்

சொத்து குவிப்பு வழக்குல, கடந்த 2017ஆம் ஆண்டு சிறை சென்ற சசிகலா, பெங்களூரு பரப்பன அக்ரஹார ஜெயில்ல இரண்டு ஆண்டு வாசத்தை முடிக்கவுள்ளார். இதுக்கிடையில, நன்னடத்தை, உடல் நிலை போன்றவற்றை காரணம் காட்டி அவரை சிறையில் இருந்து வெளியே கொண்டு வர முயற்சிகள் நடக்குதாம்.

அவ்வாறு சசிகலா வெளியே வந்தா தங்களோட நிலைமை என்னாகுமோன்னு பல அதிமுக பிரமுகர்கள் பீதியில இருக்காங்களாம். சசிகலா முன்னாடி நிக்க கூட பயப்படக்கூடிய பல பேரு தான் இன்னிக்கு அதிமுகவுல கோலோச்சிக்கிட்டு இருக்காங்க. அவங்க எல்லாம் தங்களோட டப்பா சின்னம்மா வந்ததுக்கப்புறம் டான்ஸ் ஆடிடுமோனு மரண பயத்துல இருக்காங்களாம்.

அதுல சில பேரு, சின்னம்மா வெளியே வந்தவுடனே அவங்க கால்ல விழுந்து சரண்டர் ஆகலாம்ன்ற மனநிலையில கூட இருக்காங்களாம். எங்களுக்கு சசிகலா கூட என்னிக்குமே பிரச்சினை இல்லை. எங்கள் தலைவலியே டிடிவி தினகரன் தான், இதையும் நாங சின்னம்மா கிட்ட சொல்லுவோம்னு அவங்க நினைக்கிறாங்க‌ளாம்.

இதுக்கிடையில, சிறையில் இருந்து சசிகலா வெளியே வந்தவுடன் அவரை சேர்ப்போமா வேண்டாமா என அப்போது முடிவெடுப்போம் என்று கொடைக்கானலில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார். மக்களவை தேர்தலை எதிர்கொள்ள அமமுகவில் இருந்து தினகரனை தவிர யாரும் அதிமுகவிற்கு வரலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த குழப்பமெல்லாம் போதாதுனு, தினகரன் ஆதரவாளரும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் கர்நாடக மாநில செயலாளருமான‌ புகழேந்தி, தேர்தல் அறிவிப்பு வெளியானால் இரட்டை இலை சின்னம் முடக்கப்படுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது என்று கூறியுள்ளார்.

புகழேந்தி தேனியில் நிருபர்களிடம் கூறியதாவது:‍ “தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் தொடர்பான வழக்கு முடிவுக்கு வர உள்ளதால் மனக்குழப்பத்தில் உள்ள துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அவர்களை கட்சிக்கு திரும்ப அழைக்கிறார். இந்த வழக்கில் ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்களும் பதவியை இழந்தே ஆக வேண்டும்.

தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலையும் பாராளுமன்ற தேர்தலுடன் சேர்த்து நடத்த தயார் என்று தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கை 4 வாரங்களில் முடிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் தற்போது தேர்தல அறிவிப்பு வெளியானால் அ.தி.மு.க.வுக்கு இரட்டை இலை சின்னம் முடக்கப்படுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.”

மேலும் அவர் கூறுகையில்: “பாராளுமன்ற தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணியில் அதிமுக வேட்பாளர்களை கூட பாஜக தான் அறிவிக்கும். அந்த கூட்டணியில் பாமக, தேமுதிக இடம் பெறாது”னு தெரிவித்தார்.