உள்ளே போகும் அண்ணாச்சி, ஜீவஜோதி வாழ்க்கை என்னாச்சு?

தேர்தல் பரபரப்பில் இருந்த தமிழ்நாட்டை ஃப்ளாஷ் பேக் மோடில் 19 வருஷம் பின்னோக்கி பயணிக்க வெச்சது நேற்று சுப்ரீம் கோர்ட் கொடுத்த ஒரு ஆர்டர். பிரின்ஸ் சாந்தகுமார் என்பவரின் கொலை வழக்கில் சரவண பவன் ஓட்டல் அதிபர் ராஜகோபாலுக்கு ஆயுள் தண்டனையை உறுதி செய்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்தது.

தமிழ்நாட்டில் மட்டுமில்லாமல் இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை 2001ல் கிளப்பிய இந்த வழக்கு அண்ணாச்சி என்று அழைக்கப்படும் ராஜகோபால் மற்றும் ஜீவஜோதி என்ற பெண் குறித்து வெளியான தகவல்களால் தொடர்ந்து பல மாதங்கள் மீடியாக்களின் தலைப்புச் செய்தியாக இருந்தது.

ராஜகோபாலின் நிறுவனத்தில் ஜீவஜோதியின் தந்தை வேலை பார்த்து வந்தார். அந்த ஜீவஜோதியின் கணவர் தான் பிரின்ஸ் சாந்தகுமார். ஜீவஜோதியை அடைவதற்காக அவரது கணவரை கொன்றதாக ராஜகோபால் மீது குற்றம் சாட்டப்பட்டது.

சரவண பவன் அண்ணாச்சிக்கு 2 மனைவிகள் இருந்தபோதிலும் மூன்றாவது மனைவியாக ஜீவஜோதியைத் திருமணம் செய்துகொள்ள விரும்பினார். அதற்கு காரணம் ஜோதிட நம்பிக்கை என்றும், ஜீவஜோதியின் அழகென்றும் கூறப்பட்டது.

26.10.2001 அன்று பிரின்ஸ் சாந்தகுமார் கடத்தப்படுகிறார். இதுதொடர்பாக, வேளச்சேரி காவல்நிலையத்தில் ஜீவஜோதி புகார் அளிக்கிறார். அந்தப் புகாரில் ராஜகோபாலின் ஆட்கள், தன்னுடைய கணவரைக் கடத்திவிட்டதாகக் குறிப்பிடுகிறார். 5 நாள்கள் தேடுதலுக்குப் பிறகு கொடைக்கானல் மலை ரோட்டில் சடலமாக மீட்கப்பட்டார் பிரின்ஸ். இதையடுத்து, ராஜகோபாலுக்கு எதிராக சட்டப்போராட்டத்தை கையில் எடுத்தார் ஜீவஜோதி.

இந்த கொலை வழக்கு விசாரணை கீழ் கோர்ட்டில் நடந்து வந்தது. 2004-ம் ஆண்டு கோர்ட்டு ராஜகோபாலுக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்தது. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் ராஜகோபால் அப்பீல் செய்தார். அப்பீல் வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு நேற்று தீர்ப்பு வழங்கியது. ஐகோர்ட்டு அளித்த ஆயுள் தண்டனையை சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்தது.

இதற்கிடையே, ஜீவஜோதி இப்போது எப்படி இருக்கிறார், என்ன செய்கிறார் என்று விசாரித்த போது, கீழ் நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் உள்ள தனது சொந்த ஊருக்கு போனாருன்னும், பிறகு தண்டபாணி என்பவரை திருமணம் செய்து கொண்டாருன்னும் தெரிய வருது.

தண்டபாணி தஞ்சாவூரில் உணவு பொருட்கள் ஏற்றுமதி தொழில் செய்து வர்றாராம். ஜீவஜோதியும் தையல் மற்றும் உணவகத் தொழிலில் ஈடுபட்டு உள்ளாராம். இருவருக்கும் ஒரு ஆண் குழந்தையும் இருக்கிறதாம்.