Sabarimala Pilgrim Guide

சபரிமலை ஐயப்பன் கோவிலில் இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை அடுத்த மாதம் (டிசம்பர்) 26-ந்தேதி நடை பெறுகிறது. இதற்காக கோவில் நடை வருகிற 15-ந்தேதி மாலை திறக்கப்படுகிறது. பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்காமல் சாமி தரிசனம் செய்வதற்கு பல்வேறு புதிய நடைமுறைகள் கடைபிடிக்கப்பட உள்ளன. அதன்படி மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை சீசன் காலத்தில் ஆன்லைன் முன்பதிவு மற்றும் ‘ஸ்பாட் புக்கிங்’ அடிப்படையில் தினமும் 80 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட உள்ளனர். அது மட்டுமின்றி பக்தர்கள் தங்களின் இருமுடி கட்டுகளில் கற்பூரம்,சாம்பிராணி, பன்னீர் ஆகியவற்றை எடுத்துச்செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் சபரிமலை வரக்கூடிய பக்தர்களுக்கான புதிய வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி சாமிதரிசனம் செய்வதற்கு ஆன்லைன் மூலமாக மெய்நிகர் வரிசையில் முன்பதிவு செய்த பக்தர்கள், முன்பதிவு செய்த நாட்களில் சரியாக வர வேண்டும். முன்பதிவு செய்த பக்தர்கள் யாத்திரை தேதியை மாற்ற முடிவு செய்தால் தங்களின் முன்பதிவை ரத்து செய்ய வேண்டும். வாட்ஸ்-அப்பில் பெறப்பட்ட இணைப்பு அல்லது ஆன்லைன் முன்பதிவு அமைப்பு மூலம் முன்பதிவுகளை ரத்து செய்யலாம். அப்படி செய்யவில்லை என்றால் அது போன்ற பக்தர்களால் யாத்திரை காலத்தில் மீண்டும் முன்பதிவு செய்ய முடியாது.

திட்டமிட்ட தரிசனத்தை தவறவிடுபவர்களின் இடங்கள் ஸ்பாட் புக்கிங் செய்யக்கூடிய பக்தர்களுக்கு மாற்றப்படும். பம்பை, எருமேலி, வண்டிப் பெரியார்- சத்திரம் உள்ளிட்ட நுழைவு வாயில்களில் ஸ்பாட் புக்கிங்கை பயன்படுத்தும் பக்தர்கள் 12 மணி நேரத்திற்குள் தங்களது தரிசனத்தை நிறைவு செய்ய வேண்டும். ஸ்பாட் புக்கிங்கில் முன்பதிவு மற்றும் நுழைவு சரிபார்ப்புக்கு 2 நிமிடங்கள் ஆகும். அப்போது கியூ-ஆர் குறியீடு ஸ்கேன் மூலம் பத்தர்களின் தகவல்கள் மற்றும் புகைப்படம் அங்கீகரிக்கப்படும். ஆனால் அவர்களுக்கான டிக்கெட்டில் பக்தர்களின் புகைப்படம் இருக்காது. ஸ்பாட் புக்கிங்கிற்கு ஆதார் அட்டை கட்டாயமாகும். புதிய வழிகாட்டுதல்களின்படி எதிர் காலத்தில் அனைத்து மெய் நிகர் வரிசை முன்பதிவுகளும் ஆதார் அட்டையின் அடிப்படையில் மட்டும் இருக்கும் என்று தகவல் வெளியாகியிருக்கிறது.

–courtesy  Times of Tamil Nadu

Share this:

Exit mobile version