“ரஸாக்கர்” திரைப்பட டிரெய்லர் வெளியீட்டு விழா !!

RAZAKAR Trailer Tamil | Gudur Narayana Reddy | Yata Satyanarayana | Samarveer Creations

Join the chorus for change and take a stand against injustice!

சமர்வீர் கிரியேஷன்ஸ் சார்பில் குடூர் நாராயண ரெட்டி வழங்கும், இயக்குநர் யதா சத்யநாராயணா இயக்கத்தில், பாபி சிம்ஹா, வேதிகா நடிப்பில், சுதந்திரப் போராட்ட காலகட்டத்தில், ஹைதராபாத் நகரில் உண்மையில் நிகழ்ந்த, மறைக்கப்பட்ட  வரலாற்று நிகழ்வை, அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் “ரஸாக்கர்”.  

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பான் இந்திய வெளியீடாக வெளியாகவுள்ள இப்படத்தின் தமிழ்ப் பதிப்பிற்கான டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. 

படக்குழுவினருடன், திரை பிரபலங்கள் பலர் கலந்து கொள்ளப் பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் இந்நிகழ்வு கோலாகலமாக அரங்கேறியது. 

இந்நிகழ்வினில்..

தயாரிப்பாளர் குடூர் நாராயண ரெட்டி 
வணக்கம். இது மட்டுமே எனக்குத் தமிழில் தெரிந்த வார்த்தை. சமர்வீர் கிரியேஷன்ஸ் சார்பில் என் குழுவினர் அனைவருக்கும் நன்றி. எங்கள் பெருமைமிக்க படைப்பான,  ரஸாக்கர் படத்தின் டிரெய்லரை உங்களுக்கு அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி. நம் வரலாற்றில் மறைக்கப்பட்ட ஒரு உண்மையை இந்த தலைமுறைக்கு எடுத்துச் சொல்வது நம் கடமை என நினைக்கிறேன். இப்போதைய  ஹைதராபாத் 1948ல் இந்தியாவில் சேர்க்கப்படுவதற்கு முன், முஸ்லீம் நிஜாம் மன்னரால் துர்க்கிஸ்தானாக மாற்றப்படுவதாக இருந்தது. இந்திய அரசால் அது தடுக்கப்பட்டது. எங்கள் வம்சத்தில் என் தாத்தா போராடி மக்களை மீட்ட கதையைக் கேட்டிருக்கிறேன். அவர் அந்தப்போராட்டத்தில் தான் உயிர் நீத்தார். இந்தக்கதை ஹைதராபாத் மக்கள் மீது கட்டவிழ்த்து நடத்தப்பட்ட வெறியாட்டத்தை, அதிலிருந்து ஹைதராபாத் மீண்டு வந்த கதையை பதிவு செய்யும். இதை எப்படியாவது திரையில் பதிவு செய்ய வேண்டும் என்பது என் லட்சியமாக இருந்தது.  இக்கதையை நீங்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என விரும்புகிறேன். அனைவருக்கும் பிடிக்குமென நம்புகிறேன் நன்றி. 

நடிகர் பாபி சிம்ஹா பேசியதாவது…
வாழ்த்த வந்த அனைவருக்கும் முதலில் நன்றி. முதலில் இந்தக் கதை கேட்ட போது,  எனக்கே சரியாக புரியவில்லை. உண்மையில் என்ன நடந்தது என்ற வரலாறு, எனக்கே தெரியாமல் இருந்தது. இந்த உண்மை பற்றி தேடித் தெரிந்துகொண்டேன். உடனே கண்டிப்பாக இந்தப் படம் செய்கிறேன் என்றேன். உலகத்திற்கு இந்த கதை தெரிய வேண்டும். குடூர் நாராயண ரெட்டி சாருக்கு என் நன்றி. அவர் தாத்தா இந்தப் போராட்டத்தில் போராடி இறந்துள்ளார். அவர் நினைத்தால் ஒரு கமர்சியல் படம் எடுத்திருக்கலாம் ஆனால் 40 கோடியில் இந்த வரலாறு அனைவருக்கும் தெரிய வேண்டுமென, இப்படத்தை எடுத்துள்ளார். இப்படி ஒரு படத்தை உருவாக்க முனைந்த இயக்குனருக்கு நன்றி. நடிகை வேதிகா, இப்படத்தில் முதலில் அவரை மேக்கப்போடு பார்த்த போது எனக்கு அடையாளமே தெரியவில்லை. அத்தனை மாறியிருந்தார். அவருக்கு என் வாழ்த்துக்கள். அனுஷா புது நடிகை மாதிரியே தெரியவில்லை. நன்றாக நடித்துள்ளார். ஜான் விஜய், தலைவாசல் விஜய் சார், ராம்ஜி சார் அனைவரும் அற்புதமாக நடித்துள்ளனர். படத்தில் அத்தனை கலைஞர்களும் மிக அர்ப்பணிப்போடு உழைத்துள்ளனர். இப்படம் வரலாற்றில் மிக முக்கியமான படமாக இருக்கும் அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி.

இயக்குநர் யதா சத்யநாராயணா பேசியதாவது…
தமிழ் என்றால் எனக்கு அவ்வளவு பிடிக்கும். மணிரத்னம் சார் என்றால் எனக்கு அவ்வளவு பிடிக்கும். சுஹாசினி மேடத்திடம் இந்தக் கதையை போனில் சொன்னேன், அவர் என்னைப் பாராட்டினார். இப்படத்திற்காக என்ன உதவி வேண்டுமானாலும் செய்வதாகச் சொன்னார், அவருக்கு நன்றி. இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு முழுப் பாத்திரமாக மாறிய பாபிக்கு என் நன்றி. கோலிவுட் தென்னிந்தியாவுக்கு தாய் மாதிரி. ரஸாக்கர் மூலம் அறிமுகமாகும் என்னை இங்கு ஆசிர்வதிப்பார்கள் என்று நம்புகிறேன். தமிழ் மக்களுக்கு, ஒரு படம் பிடித்தால் தூக்கி வைத்துக் கொண்டாடுவார்கள். இப்படம் அவர்களுக்குப் பிடிக்கும் என நம்புகிறேன். இந்தியாவிற்கே சுதந்திரம் கிடைத்த போது, ஹைதராபாத்தில் மக்கள் நிஜாமுக்கு எதிராகப் போராடி கொண்டிருந்தார்கள். வல்லபாய் படேல் எடுத்த நடவடிக்கைகள் மூலம், போர் செய்து தான் ஹைதராபாத் விடுதலை செய்யப்பட்டது. பல மாகாணங்களாகப் பிரிந்து கிடந்த இந்தியாவை வல்லபாய் படேல் தான் ஒருங்கிணைத்தார். ஆனால் ஹைதராபாத் மாநிலத்தை அத்தனை எளிதாக ஒருங்கிணைக்க முடியவில்லை. அது துர்கிஸ்தானாக அறிவிக்கப்பட்டு அங்குள்ள இந்து மக்கள் நிஜாம் மன்னரால் துன்புறுத்தப்பட்டனர். பெண்கள் சீரழிக்கப்பட்டார்கள். ரஸாக்கர் ஹைதராபாத் மக்கள் மீது நடத்திய வன்முறை அளவில்லாதது. அதைத்தான் இப்படத்தில் சொல்ல முயன்றுள்ளோம். தமிழ் ரசிகர்கள் எங்களின் வரலாற்றைச் சொல்லும் இப்படத்தை ஆதரிக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன் நன்றி. 

நடிகை வேதிகா பேசியதாவது…
வாழ்த்த வந்துள்ள அனைவருக்கும் நன்றி. இந்தப் படத்திற்காக என்னை அழைத்தபோது எனக்கே உண்மையான வரலாறு தெரியாது. ஹைதராபாத் மாநிலத்திற்கு 1948 ல் தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. ஆனால் அது பலருக்கு தெரியாது. அந்த வரலாற்றின் உண்மையைச் சொல்லும் படத்தில் நானும் இருப்பது பெருமை. வரலாற்றுப் படங்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும். நம் சுதந்திர வாழ்க்கைக்காக எத்தனை மனிதர்கள் தியாகம் செய்துள்ளார்கள், போராடியிருக்கிறார்கள் அவர்களின் கதையை இந்தப் படம் சொல்லும். தயாரிப்பாளர் குடூர் சார் பிரம்மாண்டமாக இப்படத்தை எடுத்துள்ளார், நன்றி. பாபி நேஷனல் அவார்ட் வின்னிங் ஆக்டர். அவரை இந்தப் பாத்திரத்தில் பார்த்த போது பிரமிப்பாக இருந்தது. அவருக்கு என்னை, மேக்கப்போடு பார்த்தபோது அடையாளமே தெரியவில்லை. அப்புறம் தான் கண்டுபிடித்தார். மிகச் சிறந்த நடிகர் அவருடன் வேலை பார்த்தது மகிழ்ச்சி. இயக்குநருக்கு என் சிறப்பு நன்றி. என்னுடன் வேலை பார்த்த அனைத்து கலைஞர்களுக்கும் நன்றி. எப்போதும் போல் எனக்கும் படத்திற்கும் உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி. 

இசையமைப்பாளர் பீம்ஸ் பேசியதாவது.. 
என் தாத்தா குடூர் நாராயண ரெட்டி வரலாற்றைக் கூறியிருக்கிறார். இந்தப்படத்தில் மூலம் நம் வரலாற்றை தெரிந்து கொள்ளலாம். இப்படி ஒரு சிறப்பான படைப்பில் நானும் பணியாற்றியது மகிழ்ச்சி அளிக்கிறது அனைவருக்கும் நன்றி. 

ஒளிப்பதிவாளர் குசேந்தர் ரமேஷ் ரெட்டி பேசியதாவது… 
எங்கள் படத்திற்கு ஆதரவு தர வந்துள்ள அனைவருக்கும் நன்றி. ரஸாக்கர் எனக்கு மிக முக்கியமான படம்.  நான் ஹைதராபாத்தைச் சேர்ந்தவன், ஆனால் எனக்கே இந்தக்கதை அவ்வளவாகத் தெரியாது. இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்த 1 வருடம் கழித்தே ஹைதராபாத்திற்கு சுதந்திரம் கிடைத்தது. இந்த வரலாறு தெரியாததற்கு நான் வருத்தப்படுகிறேன். இதில் பணியாற்றியது பெருமை. இந்தக் கதை உங்கள் அனைவரையும் உருக வைக்கும் நன்றி. 

நடிகர் தலைவாசல் விஜய் பேசியதாவது…
தயாரிப்பாளர், இயக்குநர் இருவருக்கும் நன்றி. இந்த படத்தில் பணிபுரிந்தது அற்புதமான அனுபவம். இந்த தலைமுறைக்குத் தெரியாத, ஒரு வரலாற்றைச் சொல்லும், இப்படத்தில் நானும் இருப்பது பெருமை. மிக முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளேன். இந்தப் படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் 

தயாரிப்பாளர் மனோஜ் பெனோ பேசியதாவது…
ஒரு காலகட்டத்தில் படங்கள் எல்லாம் ஒரே மாதிரியாக இருப்பதாகப் பேசினோம். இப்போது டிரெய்லரே ஒரே மாதிரியாக இருப்பதாகப் பேசிக்கொண்டிருக்கிறோம். ஆனால் இந்த டிரெய்லரே மிக வித்தியாசமாக இருக்கிறது. தயாரிப்பாளர் மிக அர்ப்பணிப்புடன் இந்தப்படத்தை, பிரமாண்டமாக தயாரித்துள்ளார். படக்குழுவினர் தங்கள் உயிரைக் கொடுத்து, படத்தை அட்டகாசமாக எடுத்துக் கொண்டு வந்துள்ளனர். இந்தப் பட விழாவிற்கு வரக்காரணம் பாபி. என் நெருங்கிய நண்பர். அவர் எப்போதும் கெத்து தான். வேதிகாவிற்கு என் வாழ்த்துக்கள். இந்தப் படம் மிகப்பெரிய வெற்றி பெற என் வாழ்த்துக்கள். 

தடை உடை பட இயக்குநர் ராகேஷ் பேசியதாவது..,
டிரெய்லரே மிரட்டுகிறது. இப்படி ஒரு வரலாற்றைப் படமாக எடுக்க முனைந்த தயாரிப்பாளர், இயக்குனருக்கு நன்றி. இன்னும் சொல்லப்படாத கதைகள் நிறைய இருக்கிறது. இந்தப்படத்தை இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் மொழி மாற்றம் செய்ய வேண்டும்.  படக்குழுவினருக்கு என் வாழ்த்துக்கள்

நடன இயக்குநர் ஷெரீஃப் பேசியதாவது…
பாபி எனக்கு நெருங்கிய நண்பர். அவர் எது செய்தாலும் என் ஆதரவு உண்டு. வரலாற்றில் மறைக்கப்பட்ட வரலாற்றை இந்தக் கதை சொல்கிறது. படத்தை அட்டகாசமாக எடுத்துள்ளார்கள். இந்தப் படம் பெரிய வெற்றி அடைய வாழ்த்துக்கள். 

நடிகர் ஜான் விஜய் பேசியதாவது…
ஒரு பிரம்மாண்டமான வரலாற்றுப் படத்தில் நானும் இருப்பது பெருமையாக உள்ளது. தயாரிப்பாளர், இயக்குநர் இருவருக்கும் என் நன்றிகள். என்னை இந்த படத்தில் நடிக்க வைத்ததற்குச் சிறப்பு நன்றி. பாபி உடன் பணியாற்றியது மகிழ்ச்சி. எப்போது பாபியை பார்த்தாலும் மிக நட்போடு பழகுவார். இப்படம் உங்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும் நன்றி. 

நடிகர் ராஜ் அர்ஜுன்  பேசியதாவது…
உங்களால் தான் நாங்கள். நீங்கள் பாராட்டுவதால் நாங்கள் சரியாக பணியாற்றுகிறோம். ஆதலால் உங்கள் அனைவருக்கும் நன்றி. இந்தப்படத்தின் கதாபாத்திரத்திற்காக நான் பிறந்ததாக நினைக்கிறேன். எனக்கு இந்த வாய்ப்பை தந்ததற்கு குடூர் நாராயணன் ரெட்டி சாருக்கு மிகப்பெரிய நன்றி. உயிரைத் தந்து இந்த குழுவினர் படத்தை எடுத்துள்ளார்கள். இது வரலாற்றுப்படம் ,ஆனால் அதில் ஆக்சன், டிராமா எல்லாம் இருக்கிறது அதையெல்லாம் தாண்டி உணர்வுகள் இதில் நிறைந்திருக்கிறது. இப்படத்தில் பணியாற்றியது மகிழ்ச்சி. அனைவருக்கும் நன்றி. 

நடன இயக்குநர், நடிகர்  ராம்ஜி பேசியதாவது…
இந்த படத்தில் சின்ன ரோல் தான் ஆனால் பவர்ஃபுல் ரோல் செய்துள்ளேன். இந்த படத்தில் நடிக்க காரணமான சங்கர் மாஸ்டருக்கு நன்றி. இந்தப் படத்தின் தயாரிப்பாளர், இயக்குநர் இருவருக்கும் நன்றி. வரலாற்றில் மறைக்கப்பட்டதை ஒவ்வொரு இந்தியனுக்கும் எடுத்துச் செல்லும் படமாக இப்படம் இருக்கும். இது தான் உண்மையான பான் இந்தியன் மூவி. உங்கள் ஆதரவை தாருங்கள் அனைவருக்கும் நன்றி.  

நடிகர் சரத் ரவி பேசியதாவது…
இந்தப்படத்தை அனைத்து பத்திரிக்கை நண்பர்களும் நல்ல முறையில் எடுத்துச் செல்ல வேண்டும். பாபி அண்ணாவுடன் 3 படங்கள் செய்துள்ளேன். அவர் ஒவ்வொரு படத்திலும் பெயர் கிடைக்குதோ, இல்லையோ உயிரைக் கொடுத்து உழைப்பார். இந்தப்படத்தில் இன்னும் அதிகமாக உழைத்துள்ளார். அவருக்கு இப்படி ஒரு படம் வந்து கொஞ்ச காலம் ஆகிவிட்டது. இந்தப்படம் கண்டிப்பாக மிகப்பெரிய வெற்றிப்படமாக இருக்கும்.

Share this:

Exit mobile version