ஜெராக்ஸ் பத்திரத்தை வைத்துக்கொண்டு கோடிக்கணக்கில் மோசடி செய்த ராஜ் டிவி இயக்குனர்களின் ஒருவரான ரவீந்திரன்!?

தமிழகச் சின்னத்திரை வட்டாரத்தில் சகலருக்கும் தெரிந்த சேனல் ராஜ் டிவி நெட்வொர்க் . இது மொத்தம் 12 சேனல்கள் உள்ளடங்கியது. தமிழில் 4 சேனல்கள், தெலுங்கில் 3 சேனல்கள், மலையாளம், கன்னடத்தில் 2 சேனல்கள், ஹிந்தியில் ஒரு சேனல். சன் டிவிக்கு இணையாக இவர்களும் மீடியா துறையில் வளர்ச்சி கண்டனர். சேனல்கள் மட்டுமின்றி பட தயாரிப்புகளிலும் ஈடுபட்டனர். காதல்னா சும்மா இல்ல, மரியாதை, மகனே என் மருமகனே போன்ற திரைப்படங்களை தயாரித்து உள்ளனர். 

இதன் நிர்வாகிகளில் ஒருவரான ரவீந்தரனால் ரூ 10 கோடி ரூபாய் ஏமாற்றப்பட்ட பிரபல சின்னத்திரை நிறுவனத்தின் புகார் காவல் துறைக்கும் மற்றும் பல அரசு துறைகளுக்கும் போக தயாராகிக் கொண்டிருக்கிறது என்பதுதான் சின்னத்திரை வட்டார ஹாட் நியூஸ்.  

அதாவது பிஏ என்ற பாரதி அசோசியேட் நிறுவனத்தின் சேர்மன் டிஆர்எம். இந்த நிறுவனத்தின் மூலம் கிட்டத்தட்ட 2000 சின்னத்திரை நாடகங்களை தயாரித்து பல சேனல்களுக்கு அளித்துள்ளார். தான் தயாரித்த நாடகங்களில் பணியாற்றும் கலைஞர்களுக்கு அன்றைய தினமே சம்பளத்தை கொடுத்துவிடும் மிக உன்னதமான பழக்கத்தை கடைபிடித்து வருபவர் தான் டிஆர்எம் என்கிற T .R .மாதவன் . அதுமட்டுமல்ல, தனது நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு விசேஷ நாட்கள், பண்டிகை நாட்களில் மட்டுமல்லாது பலருக்கு கல்வி ,கல்யாணம், மருத்துவம், என தேவைப்பட்ட உதவிகளை செய்வார். இதுமட்டுமா 3 மாத போனஸ், இன்சென்டிவ்,மாதத்திற்கு ஒரு டூர் என அவர்களை தம் குடும்பத்தினர் போல பார்த்துக்கொள்வார்.

மற்றவர்களுக்கு உதவி செய்தே சந்தோஷப்பட்ட அவர், 2013 இல் அறிமுகமான நபர் ஒருவரின் நட்பு, தன்னை அதலபாதாளத்தில் கொண்டுபோய் விட போகிறது என்பதை உணரவில்லை. ஆம்.. அந்த நட்புக்கு சொந்தக்காரர் தான் ராஜ் டிவியின் நான்கு சகோதரர்களில் ஒருவரான ரவீந்திரன். ஒரு தெரிந்த நண்பர் மூலமாகத்தான் டிஆர்எம்முக்கு ரவீந்திரனின் அறிமுகம் கிடைத்து, நாளாவட்டத்தில் இருவரும் நெருங்கிய நண்பர்களானார்கள். அதையடுத்து ராஜ் டிவியில் உறவுகள், சங்கமம், என் இனிய தோழியே என்று பல பிரபல நாடகங்களை நடத்தினார் டிஆர்எம். பணப்பட்டு வாடா விஷயத்தில் ராஜ்டிவி இழுத்தடித்தாலும் தன் நண்பர் ரவீந்தரனை தன் சகோதரர் ஆகவே நினைத்த டிஆர்எம் அவருக்காக பலவற்றை விட்டுக் கொடுத்தார்.
 

நட்பு நன்றாக பலப்பட தொடங்கிய பின்னர் ஒவ்வொரு முறையும் ஏதாவது காரணம் சொல்லி டிஆர்எம்மிடமிருந்து கைமாற்றாக கோடிக்கணக்கில் பணம் வாங்கினார் ரவீந்திரன். நடுவில் தன் மூத்த சகோதரர் திரு ராஜேந்திரன் மிகப்பெரிய பிரச்சினையில் சிக்கி இருப்பதாகவும் அதை சரிசெய்யவில்லை என்றால் அவர் தற்கொலை செய்துகொள்வார் என்றும் அவரை காப்பாற்ற வேண்டும் என்றும கூறி சில கோடிகள் வாங்கினார்.

அந்தவகையில் ஜூலை 2017 இல் இருந்து ஜூன் 2018 வரை சுமார் 6.5 கோடி ரூபாய் கைமாற்று வாங்கினார் ரவீந்திரன்.

ஒரு கட்டத்தில் தன்னிடம் சொந்தப்பணம் இல்லாத நிலையில், தன் உறவினர்கள் நண்பர்களிடம் பணம் புரட்டி கொடுத்தார் டிஆர்எம். 2017இல் ரவியின் மகள் திருமணத்திற்கு 500 கிராம் தங்கமும் சில லட்சங்கள் கடனாகவும் கொடுத்ததும் இதில் அடங்கும். ஆனால் இதற்காக ஒரு டாக்குமென்ட்டோ, ஜாமீனுக்காக ஒரு செக்கோ என எதுவும் வாங்காமல் நட்புக்கு மரியாதையாக பல கோடி உதவி செய்தார் டிஆர்எம். அந்த அளவுக்கு ரவீந்திரனை அவர் பூரணமாக நம்பினார். தான் வெளி நபர்களிடம் இருந்து வாங்கிக்கொடுத்த கோடிகளுக்காக டிஆர்எம் தன் கையில் இருந்து வட்டி கொடுத்துக்கொண்டிருக்க, ரவியிடம் இருந்தோ தாக்கல் தான் வந்ததே தவிர பணம் வரவில்லை.. 

இதற்கிடையே பழனி ப்ராப்பர்ட்டீஸ் சர்டிபிகேட் என ஒரு கவரை அடமானமாக ரவீந்திரன் கொடுக்க, டிஆர்எம்மோ, தான் அடமான கடன் கொடுக்கவில்லை என்றும் நட்புக்காக உதவி செய்தேன் என்றும் பெருந்தன்மையாக சொன்னார்.ரவீந்திரன் வற்புறுத்தியதால் அந்த கவரை பிரிக்காமலே வாங்கிக் கொண்டார். 

இதையடுயத்து தனது ராஜ் டிவி சேனலில் ஐந்து புரோகிரம்கள் தந்து, அதைவைத்து சற்று சமாளித்துக் கொள்ளுமாறு ரவீந்திரன் சொல்ல, ஐடிசி சோளா ஹோட்டலில் நான்கு சகோதரர்கள் முன்னிலையில் 5 சீரியல்களுக்கான அறிமுக விழா பத்திரிக்கையாளர் சந்திப்புடன் நடந்தது.

இந்த சீரியல்களை தயாரிப்பதற்காக மேலும் 3 கோடி கடன் வாங்கினார் டிஆர்எம். ஆக மொத்தம் சொந்தப்பணம், சொந்தக்காரர்கள், நண்பர்கள் பணம், வங்கி கடன், வெளியாட்கள் கடன் என சுமார் பத்து கோடி ரூபாய் வரை ரவீந்திரன் மூலமாக லாக் ஆனார் டிஆர்எம்..

அந்தச் சேனலில் 300க்கும் மேற்பட்ட நாடகங்கள் கொடுத்தும் ராஜ் டிவியில் இருந்து ஒரு பைசா வரவில்லை. இந்த நாடகங்களுக்கான ஒப்பந்தத்தை இமெயிலில் அனுப்பி இருந்தாலும் பத்திரத்தில் கையெழுத்து போடாமல் இழுத்து அடித்தது ராஜ் டிவி. ஒரு சந்தர்ப்பத்தில் அது சேனல் பணம் என்றும் அண்ணன் ராஜேந்திரன் தான் கொடுக்க வேண்டும் என்றும், அதற்கும் தனக்கு சம்பந்தம் இல்லை என்றும் ரவீந்திரன்கை விரித்தார். 

 அத்துடன் ஈமெயிலில் ராஜ் லீகல் டிபார்ட்மெண்ட் ஒப்பந்தம் அனுப்பியதும் ஏமாற்று வேலை என்பதும் தெரிந்தது.

மேலும்  தன்னிடம் கொடுத்த பழனி  பத்திரங்கள் அனைத்தும் ஜெராக்ஸ் என்பதும் அறிந்து அதிர்ச்சி அடைந்த டிஆர்எம், தன்னை எல்லாவிதத்திலும் ரவி ஏமாற்றியது கண்டு உடைந்து போனார்.

அதுசரி. இப்படி டிஆர்எம்மிடமிருந்து வாங்கிய கோடிக்கணக்கான பணத்தை ரவி என்ன செய்தார் என்கிற கேள்வி எழுகிறது அல்லவா..? அதற்கும் விடை கிடைத்தது.

தன் அண்ணனிடம் இருந்து 300 ஏக்கர் பெருமான பழனி பிராப்பர்ட்டியை அவர் பெயருக்கு மாற்றியதும், இது சம்பந்தமாக ஒரு பெரிய தொகையை கனரா வங்கியின் ஓடி(OD) அடைக்க உபயோகப்படுத்தி இருப்பதும் தெரியவந்தது. மேலும் சில படங்கள் டிஸ்ட்ரிபியூஷன் எடுத்து தியேட்டரில் ரிலீஸ் செய்ததும் தெரியவந்தது. மற்றவர் சொத்து வாங்க வட்டியில்லா கடன் கொடுத்து, தான் எல்லோருக்கும் வட்டி கொடுத்து கொண்டிருக்கும் அவல நிலையை நினைத்து வருந்திய டிஆர்எம், ரவியை பல வழிகளில் தொடர்புகொள்ள முயன்றும் முடியவில்லை. இமெயில் எஸ்எம்எஸ் அனுப்ப பதில் இல்லை.. போன் செய்தால் கூட நான் பிஸி அப்புறம் கூப்பிடுறேன் என பதில் சொல்ல ஆரம்பித்தார்.

ஒரு கட்டத்தில் பிச்சை போடுவது போல 5 லட்சம் ,10 லட்சம் என்று 2018 கடைசிலிருந்து 2019 ஆகஸ்ட் வரை சுமார் 1.75 கோடி (6.36கோடி அசலுக்கு) மட்டும் கொடுத்தார் .தன்னிடம் அதற்குமேல் நெருக்கடியாக இருப்பதாக கூறி சுமார் 2.20 கோடி மதிப்புக்கு தன் தம்பியின் பிளாட்டை  கொடுத்து அட்ஜஸ்ட் செய்தார்.

இதிலும் ஒரு சிக்கல் அந்த பிளாட் கட்டுமான நிலையில் இருந்தது 18 மாதம் கழித்துதான் விற்க  முடிந்தது.இதிலும் டிஆர்எம் முக்கு ரீபைன்ட் வட்டி என 40 லட்சம் நஷ்டம் .

அப்படியும் இரு வருடங்கள் கழித்து இன்னும் சுமார் 2.41 கோடி பாக்கி இருந்தது. ஒரு சமயம் தம்பியின் பிளாட் சம்பந்தமான டாக்குமெண்ட் கொடுக்கும்போது அதை உபயோகப்படுத்திக் கொண்ட ரவி 2.41 கோடி தள்ளுபடி என்றும் தான் எல்லாவற்றையும் கொடுத்து முடித்தாகிவிட்டது என்றும் ஒரு குண்டை தூக்கி போட்டார்.

மேலும் ராஜ் டிவியில் டி.ஆர்.எம் தயாரித்த 319 எபிசோடுகளுக்கு ஒரு பைசா தராமல், எந்த அதிகாரமும் இல்லாமல், யூட்யூப், டிஜிட்டல் பிளாட்பார்ம், வெளிநாட்டு பிளாட்பாரம் என பல லட்சங்கள் அவற்றை பயன்படுத்தி காபிரைட் உரிமையை மீறி சம்பாதித்த விஷயம் அறிந்தும் கண்டுகொள்ளாமல் இருந்தார் ரவீந்திரன்.

ஒருகட்டத்தில் டிஆர்எம் குடும்பம் மற்றும் நண்பர்களிடத்தில் கசப்புணர்வு தோன்ற ஆரம்பித்தது. தன் நெருங்கிய உறவினர் ஒருவரிடம் பணம் வாங்கி ரவிக்கு கொடுத்து இருந்தார் டிஆர்எம். அவர் மாப்பிள்ளைக்கு திடீரென கேன்சர் வந்தது மாப்பிள்ளையின் கேன்சர் செலவுக்காக பணம் கொடுங்கள் என்று ரவியை கெஞ்சினார் டிஆர்எம். ஆனால் ரவி பணம் கொடுக்காததால், அவரது மாப்பிள்ளை இறந்தே போனார். இன்னொரு பக்கம் டிஆர்எம்மின் மனைவி ஒரு Liver patient வேறு.. அவருடைய மருத்துவ செலவுக்கே தற்போது திண்டாடி வருகிறார் டிஆர்எம். இப்போதும் கூட ரவியை நம்பி வரும் டிஆர்எம், தான் செய்யாத தவறுக்கு 10 கோடி ரூபாய் நட்டத்திற்கு இன்றும் வட்டி கட்டி வருகிறார்.

எப்போது கேட்டாலும் இன்னும் ஒரு வாரத்தில் உங்களுக்கு சில கோடிகள் மற்றும் நகை வரும் என்றும், மீண்டும் கேட்டால் உங்களுக்கு நான் எதுவும் கொடுக்க வேண்டாம் என்றும், பின் ஒரு சமயம் அண்ணனிடம் பேசி சேனலில் ஒரு தொகை வாங்கித்தருகிறேன் என்றும், மீண்டும் கேட்டால் எனக்கு சம்பந்தம் இல்லை என்றும் மாறி இவர் சொல்லும் வசனத்தை கேட்டால், அந்நியன் கூட இவரிடம் தோற்றுப் போவான்.

அதையும் மீறி பணத்தை கேட்டு அழுத்தம் கொடுக்கும்போதெல்லாம், தான் அந்தக் கட்சியில் இருக்கிறேன் என்றும் தன்னுடைய சம்மந்தி விஐபி என்றும் தான் மீடியாவை சேர்ந்தவன் என்றும் எகத்தாளமாக பேசுவார். டிஆர்எம் உதவியால் பல குடும்பங்கள், உடல்நலம் சரியில்லாத பல குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் சந்தோசமாக இருந்தார்கள். இன்று டிஆர்எம்மும் மற்றும் அவரை சேர்ந்தவர்களும் படும் துன்பங்கள் சொல்ல முடியாது.. செய்யாத தவறுக்கு தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கிறார் டிஆர்எம்.

இவரிடமிருந்து வாங்கிய பணத்தில் ரவியின் பல சொத்துக்களுடன் பழனியில் லேட்டஸ்டாக 300 பிளஸ் ஏக்கர் சேர, அதே நேரத்தில் டிஆர்எம்மோ தன் சொத்துக்களை விற்று வாழ்க்கையில் கஷ்டப்படுகிறார். டிஆர்எம் இடம் வந்த வக்கீல் நோட்டீஸ்களுக்கும் தட்டிக்கழிப்பான பதில்தான் வந்தது. 

தற்போது டி ஆர் எம் தான் கொடுத்த எல்லா தொகைக்கும் பக்கா எவிடென்ஸ் வைத்திருக்கும் சூழலில் இப்போது அவர் நண்பர்கள் வட்டாரம், திரைக்கலைஞர்கள் டெக்னீஷியன்கள் போன்றோர் காவல்துறை ,செபி, கம்பெனி மேலாண்மை (Company affairs) முதலானவற்றிற்கு அவரை வற்புறுத்தி புகார் கொடுக்க ஏற்பாடு செய்துக் கொண்டு இருக்கிறார்களாம்..

ஏற்கனவே பார்க் (Barc ), செபி(sebi) போன்ற சிக்கல் மட்டும் பஞ்சாயத்தில் இருக்கும் ராஜ் டிவி இந்த ரவீந்தரனால் மிகப்பெரிய பிரச்சனையை சந்திக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு ஒரு இக்கட்டான நிலையில் உள்ளது .

Share this:

Exit mobile version