ராஜ்ய சபா தேர்தல்: திமுக, அதிமுகவில் குடுமிபிடி சண்டை

பாராளுமன்ற மாநிலங்களவையில் உள்ள தமிழ்நாட்டு எம்.பி.க்கள் ரத்தினவேல், கனிமொழி, மைத்ரேயன், டி ராஜா, கே பி அர்ஜுனன். ஆர் லட்சுமணன் ஆகிய 6 பேரின் பதவிக்காலம் ஜூலை 24-ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில், தமிழகத்தில் காலியாகும் இந்த 6 மாநிலங்களவை  உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் ஜூலை 18-ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்துள்ளது.

இதைத் தொடர்ந்து, திமுக மற்றும் அதிமுகவில் குடுமிபிடி சண்டை ஆரம்பித்துள்ளது. பல்வேறு முக்கியஸ்தர்களும், கட்சிக்காக நீண்ட காலமாக பணியாற்றியவர்களும் திமுக, அதிமுக தலைமைகளை ராஜ்ய சபா எம்பி பதவி கேட்டு நெருக்கத் தொடங்கியுள்ளனர்.

தமிழ்நாடு சட்டமன்றத்தில் தற்போதைய உறுப்பினர்கள் எண்ணிக்கை அடிப்படையில் அதிமுக 3 உறுப்பினர்களையும், திமுக 3 உறுப்பினர்களையும் தேர்வு செய்ய முடியும்.

அதிமுக சார்பில் ஏற்கனவே பாமக.வுக்கு ஒரு இடம் தருவதாக கடந்த நாடாளுமன்றத் தேர்தல் ஒப்பந்தத்தில் கூறப்பட்டிருக்கிறது. எனவே அன்புமணி எம் பி ஆவார். திமுக சார்பில் மதிமுக.வுக்கு ஒரு இடம் வழங்க ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கிறது. எனவே வைகோ எம் பி ஆவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மீதமுள்ள 2 சீட்டில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு தமிழகத்தில் இடம் அளிக்கப்படலாம் என்று செய்திகள் வெளியாகின. ஆனால் அதற்காக எந்தவித நடவடிக்கைகளும் காங்கிரஸ் தலைமை எடுத்தபாடில்லை. எனவே இரு சீட்டையும் திமுக தங்கள் வசமே வைத்துக் கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட ஜெய்சங்கருக்கு, தமிழகத்தில் இருந்து தேர்வு செய்ய வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டது. இதற்காக பாஜக தலைமை அதிமுகவை நாடியதாக சொல்லப்படுகிறது. ஆனால் அவர் குஜராத் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்படுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

ஜூலை 1 முதல் 8 வரை வேட்புமனு தாக்கல். ஜூலை 9-ம் தேதி வேட்புமனு பரிசீலனை. வேட்புமனுக்களை திரும்பப்பெற ஜூலை 11-ம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு எம்.பி.யை தேர்வுசெய்ய 34 எம்.எல்.ஏ.க்கள் வாக்களிக்க  வேண்டும்.

தமிழக சட்டசபையில் ஜூலை 18-ம் தேதி வாக்குப்பதிவு நிறைவடைந்து அன்று மாலை சுமார் 5 மணியளவில் முடிவுகள் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.