மே 23க்கு பிறகு அரசியல்: ரஜினி அதிரடி

இதோ அதோ என்று தாமதமாகிக் கொண்டிருக்கும் ரஜினியின் அரசியல் கட்சி உதயமாகும் நாள் நெருங்கிக் கொண்டே இருப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தேர்தலில் வாக்களிப்பதற்காக தர்பார் ஷூட்டில் இருந்து பிரேக் எடுத்துக்கொண்டு கடந்த வாரம் மும்பையிலிருந்து சென்னை வந்த ரஜினி, ஒரு முக்கிய ஆலோசனையை நடத்தினாராம்.

அவருக்கு மிக நெருக்கமான சிலர் மட்டுமே கலந்துக் கொண்ட அந்த கூட்டத்தின் முடிவில், மே 23, அதாவது தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, யார் வென்றாலும், தோற்றாலும் கட்சி ஆரம்பித்தே தீருவது என முடிவெடுக்கப் பட்டதாம்.

கட்சி ஆரம்பித்தாலும் ரஜினி படங்களில் நடிப்பது எம்ஜிஆர் பாணியில் தொடருமாம். ஆனால், கட்சி ஆரம்பித்த பிறகு, அனைத்து விஷயங்களுக்கும் ‘தலைவர்’ ரியாக்ட் செய்வாராம், அதாவது, தன் கருத்தை ஆணித்தரமாய் சொல்வாரம்.

‘பார்க்கத் தான போறீங்க இந்த காளியோட ஆட்டத்தை’ என சூப்பர் ஸ்டாரின் வட்டாரங்கள் சொல்ல, உச்சக்கட்ட உற்சாகத்தில் உள்ளார்கள் அவரது ரசிகர்கள், சாரி, காவலர்கள்.

சமீபத்தில், சட்டப்பேரவை தேர்தலை சந்திக்க தயார் என அறிவித்துள்ள ரஜினி, ரசிகர்களை இனி, ஏமாற்ற மாட்டேன் எனவும் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் மக்கள் மன்ற செயல்பாடுகள் மீண்டும் சுறுசுறுப்பாகி உள்ளது.

கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட நிர்வாகிகளில் ஆக்டிவாக இல்லாதவர்களின் பதவிகளை பறித்துவிட்டு புதியவர்களை நியமிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் மக்கள் மன்ற நிர்வாகிகளில் வேறு கட்சியில் இருந்து வந்தவர்களை அடையாளம் காண்பது மற்றும் அவர்களின் தேர்தல் அனுபவம் மிக்கவர்களுக்கு பதவிகளை கொடுப்பது என கடந்த 3 நாட்களாக பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக சொல்கிறார்கள்.

இதன் மூலம் ரஜினி வேட்பாளர் தேர்வுக்கு தயாராகி விட்டதாக அவரது மன்றத்தின் நிர்வாகிகள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். ரஜினியின் அரசியல் நிலைப்பாடு மே 23-ந் தேதிக்கு பிறகு தெளிவாக தெரிய வரும் என்று ரஜினிகாந்தின் அண்ணன் சத்யநாராயணாவும் தெரிவித்துள்ளார்.

“அவர் சொன்னபடியே சட்டமன்ற தேர்தல் எப்போது வந்தாலும் போட்டியிடுவார். அதில் எந்த மாற்று கருத்தும் இருக்காது. மோடியின் நல்ல திட்டங்களை ரஜினிகாந்த் ஆதரித்தாரே தவிர அவருக்கு வாக்களிக்க கூறவில்லை. ரஜினிகாந்த் – கமல் நட்பு எப்போதும் நிலைக்கும்,” என்றும் அவர் கூறினார்.