அரசியலில் இணைவார்களா ரஜினி, கமல்? உண்மை ரிப்போர்ட்

திரையுலகில் பல படங்களில் இணைந்து நடித்த பின் தனி ஆவர்த்தனம் செய்ய முடிவெடுத்த ரஜினியும் கமலும், அதன் பின் சேர்ந்து நடிக்காதது வரலாறு. தற்போது அரசியலில் அவர்களை இணைந்து பயணிக்க வைக்க முயற்சிகள் நடப்பதாக தகவல்கள் கசிகின்றன.

சமீபத்தில் ரஜினியை சந்தித்த இளையராஜா, இந்த ஐடியாவை முன்வைத்ததாகவும், ரஜினியும் கமலும் அரசியலில் இணைந்தால் கட்டாயம் ஆட்சியை பிடிக்கலாம் எனக் கூறியதாகவும், இரு உச்ச நட்சத்திரங்களும் இதைப் பற்றி யோசிப்பதாகவும் சில செய்தி தளங்கள் கூற, உண்மையில் என்ன தான் நடந்தது எனத் தெரிந்து கொள்ள விசாரணையில் இறங்கினோம்.

இளையராஜா மட்டுமல்ல, இருவருக்கும் நெருக்கமான பல பேரும் இந்த யோசனையை ஏற்கனவே பல தடவை முன் வைத்ததாகவும், ஆனால் ரஜினி, கமல் இருவருக்குமே அரசியலில் இணையும் எண்ணம் இல்லை என்றே தெரிகிறது ‘நாம் நல்ல நண்பர்களாகவே இருப்போம், நம் நட்பை எந்த காரணம் கொண்டும் கெடுத்துக் கொள்ள வேண்டாம்,’ என்பதே அவர்களின் முடிவாம்.

இந்நிலையில், பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க ரஜினிகாந்த், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெற்றது.

இதற்கான வாக்கு எண்ணிக்கை மே 23ஆம் தேதி நடைபெற்று, முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதில் பாஜக தலைமையிலான கூட்டணி 350 தொகுதிகளைக் கைப்பற்றி, பிரம்மாண்ட வெற்றியைப் பதிவு செய்தது.

மோடி பிரதமராக பதவியேற்கும் நிகழ்ச்சி டெல்லியில் வரும் 30ந்தேதி நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்ச்சிக்கு நாடு முழுவதிலும் உள்ள கூட்டணி கட்சி தலைவர்கள், முதல் அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் என அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது. ரஜினிகாந்த் தேர்தல் முடிவுகள் வெளியான அன்றே மோடிக்கு டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்து இருந்தார்.

அதிமுகவிலிருந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓபிஎஸ், மற்றும் மூத்த அமைச்சர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் அமோக வெற்றி பெற்ற எதிர்க்கட்சித் தலைவர் மு க ஸ்டாலினுக்கும் பாஜக அழைப்பு விடுத்துள்ளது.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு அங்கமாக, நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.