நான் நல்லவனா இருப்பதும், கெட்டவனா மாறுவதும் உங்க கையில தான், எதிரிகளை எச்சரிக்கும் ரஜினி

ரஜினிகாந்த்தின் புதிய படமான தர்பாரின் ‘முதல் பார்வை’ இன்று வெளியிடப்பட்டுள்ள நிலையில், அதில் இருக்கும் ஒரு வாசகம் ஆழ்ந்த அரசியல் அர்த்தத்தோடு இருப்பதாக பார்க்கப்படுகிறது.

ஆங்கிலத்தில் உள்ள அந்த வாசகத்தின் தமிழாக்கம் இது தான்: ‘நான் நல்லவனாக இருக்க வேண்டுமா, கெட்டவனாக இருக்க வேண்டுமா, இல்லை மிக மோசமனவாக மாறவேண்டுமா என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள்’.

முழுக்க முழுக்க திமுகவை நோக்கிக் கக்கப்படும் அனலாக பார்க்கப்படும் இந்த வாசகத்தின் பின்னணி பற்றிக் கூறும் தகவலறிந்த வட்டாரங்கள், ‘ரஜினி அரசியலுக்கு வருவதாக அறிவித்த நாளில் இருந்தே திமுக தன் ஆட்டத்தை ஆரம்பித்து விட்டது.

ரஜினி ரசிகர்களை தன் பக்கம் இழுப்பது முதல் பேட்ட‌ படத்தை அஜித்தின் விசுவாசத்தோடு ரிலீஸ் செய்தது வரை அனைத்திலும் திமுக தனக்கு எதிராக செய்யும் சதி வேலையாக ரஜினி பார்ப்பதால் தான், அக்கட்சியை எச்சரிக்கும் விதமாக இப்படி ஒரு வாசகத்தை இடம் பெற செய்துள்ளார்,’ என்கின்றன.

ஆனால் ரஜினி தரப்போ, மிகவும் கூலாக, ‘தலைவருக்கு ஆயிரம் வேலைகள். அவர் ஏன் இப்படி மறைமுக மெசேஜ் எல்லாம் சொல்லப் போகிறார். இது முழுக்க முழுக்க படக்குழு முடிவு செய்த போஸ்டர். வாசகமும் அப்படியே. இறுதியாக ஒரு தடவை ரஜினி பார்த்ததோட சரி’ என்கின்றனர்.

லைகா தயாரிப்பில் ஏ ஆர் முருகதாஸ் இயக்கும் தர்பார் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதற்கு முன்னதாக ரஜினியுடன் இணைந்து நயன்தாரா சந்திரமுகி, சிவாஜி மற்றும் குசேலன் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

பேட்ட படத்தை தொடர்ந்து இப்படத்திற்கும் அனிருத் இசையமைக்கிறார். தளபதி படத்திற்கு பிறகு சந்தோஷ்சிவன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். 2020 பொங்கலுக்கு திரைக்கு வரவிருக்கும் தர்பார் படத்தில் போலீஸ், சமூக சேவகர் என இரட்டை வேடத்தில் ரஜினி நடிப்பதாக தெரிகிறது.