அறிமுக இயக்குநர் ஷிவபாரதி எழுதி இயக்கியிருக்கும் படம் ராஜலிங்கா

இயக்கியதோடு முக்கிய கதாபாத்திரமொன்றில் நடித்துமிருக்கிறார். இவரோடு டி.குமரேசன், மாறன் பாண்டியன் ஆகியோரும், நாயகியாக ஜாய் ப்ரியா என்பவரும் நடித்திருக்கிறார்கள்.
இப்படத்தை இயக்கியிருக்கும் ஷிவபாரதி தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறைச் சேர்ந்தவர். இயக்குநர் ராதாபாரதி உள்ளிட்ட பலரிடம் பணியாற்றிய அனுபவங்களைக் கொண்டவர்.
இவர் எழுதிய திரைக்கதையும் அதையொட்டி இவர் செய்திருந்த வடிவமைப்பையும் பாரத்த தயாரிப்பாளர் மாரிமுத்து படத்தை இயக்கும் வாய்ப்பைக் கொடுத்திருக்கிறார்.
இப்படம் குறித்து இயக்குநர் ஷிவபாரதி கூறியதாவது….
இப்படம் தற்காலத்தில் அதிகம் பேசப்படும் ஒரு சிக்கலை மையமாகக் கொண்டு எடுத்திருக்கிறேன்.
பார்த்தவுடன் காதல் பழகியவுடன் அத்துமீறல் என்று போகும் ஜோடிகளுக்கு இப்படம் ஒரு பாடமாக இருக்கும்.
அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசியமாகிவிட்ட வாட்சப்பை நாம் மிக அலட்சியமாகக் கையாள்கிறோம். இப்படம் பார்த்துவிட்டு போனை எடுத்து வாட்சப்பை திறந்தால் ஒரு எச்சரிக்கை உணர்வு வரும்.
இப்படத்தில் நான் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறேன். மாறன் பாண்டியன் காவல்துறை ஆய்வாளர் வேடத்தில் நடித்திருக்கிறார். அந்த வேடம் மிகவும் பேசப்படும்.
இந்தப்படத்தின் நாயகி வேடத்துக்கு இருபதுக்கும் மேற்பட்டோரைப் பார்த்தோம். கதையைக் கேட்டுவிட்டு பயந்து போய் நடிக்கமுடியாது என்று போய்விட்டார்கள். இப்போது நாயகியாக நடித்திருக்கும் ஜாய் ப்ரியா, கதையைக் கேட்டதும் இதுபோன்ற பவர்ஃபுல்லான வேடத்தில் நடிக்கவேண்டும் என்றுதான் ஆசைப்பட்டேன் என்று சொல்லி நடிக்க வந்தார். மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார்.
வல்லவன் இசையில் பாடல்கள் இளைஞர்களைக் கவரும் வண்ணம் அமைந்திருக்கிறது. நிச்சயம் இந்தப்படப் பாடல்கள் வெற்றிப்பாடல்களாக இருக்கும் என்பது நிச்சயம்.
இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டது. இப்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடக்கின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.
சுமார் முப்பதாண்டுகளுக்கும் மேலாக விநியோகஸ்தராகவும் சில படங்களைத் தயாரித்தவருமான திருச்சி மாரிமுத்து இப்படத்தைத் தயாரித்திருக்கிறார்.
அவரிடம் இப்படத்தைத் தயாரித்தது பற்றிச் சொல்லுங்கள் என்றதும்,
வெற்றிமாறன் இயக்கத்தில் வந்த விசாரணை படம் போல் இந்தப்படம் மிகவும் வித்தியாசமாகவும் விறுவிறுப்பாகவும் இருக்கும். கதையைக் கேட்டதும் இப்படி நான் உணர்ந்ததாலேயே படத்தைத் தயாரிக்கத் தொடங்கினேன்.
விநியோகஸ்தராக நிறைய அனுபவம் கொண்டவர் நீங்கள், இதுபோன்ற புதுமுகங்களின் படங்களுக்கு விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்குக்காரர்களிடம் வரவேற்பு இருக்காதே என்று கேட்டால்,…
என்னுடைய முப்பதாண்டுகளுக்கும் மேற்பட்ட அனுபவத்தில் நல்ல கதையம்சம் உள்ள படங்களுக்கு எப்போதும் வரவேற்பு இருக்கும். என்பதை அறிந்திருக்கிறேன். அதைச் சரியாக மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்க்க வேண்டும் என்பதுதான் முக்கியம். அதனால் இந்தப்படத்தைத் தமிழகமெங்கும் உள்ள முன்னணி விநியோகஸ்தர்களிடம் கொடுத்திருக்கிறேன்.
விரைவில் படம் வெளியாகும் நல்ல வரவேற்பையும் பெறும் என்கிற முழுநம்பிக்கை இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்