கும்மாளம் போடுவது தப்பில்லை: ராதிகாவின் தரமான சம்பவம்

மனசுல ஒன்னு வெச்சிக்க்ட்டு வெளியில ஒன்னு பேசுறது ராதிகா சரத்குமார் அகராதியிலியே இல்லையாம். இதுக்கு ஒரு சோறு பதமா அவரோட லேட்டஸ்ட் இன்டெர்வியூ வந்திருக்கு. பத்திரிகைகள் நடிகைகளை மட்டுமே மட்டம் தட்டறதா சொல்ற அவர், நடிகைகள் வெளியே போனா என்ன தப்புனும் கேட்டிருக்கார்.

“அந்தக் காலத்தில் பெரிசா பொழுதுபோக்கு விஷயங்கள் இல்லை. சக நடிகைகள் பலரும் தோழிகளாக இருந்தோம். எங்களுக்கு ஓய்வுநேரம் கிடைச்சா, ஹோட்டல், அவுட்டிங்னு போவோம். `நடிகைகள் ஹோட்டலில் கும்மாளம்’னு நடிகைகளை மட்டும் குறிவெச்சு தவறாக சித்திரிச்சு எழுதுவாங்க. இதனால என் சக சினிமா தோழிகள் ரொம்ப கலங்குவாங்க. ஆனா, நான் எதுக்கும் பயப்படமாட்டேன். தவறான செய்தியை தைரியமா எழுதுறவங்களுக்கு மத்தியில், நான் ஏன் பயப்படணும்? அந்தக் காலகட்டத்திலிருந்து பயம் என்பதே என் வாழ்க்கையில் இல்லை’னு அவர் சொல்லி இருக்காரு.

இதுக்கிடையில, தூத்துக்குடி தொகுதியில் பாராளுமன்ற தேர்தல்ல கனிமொழியை எதிர்த்து போட்டியிட போவது ராதிகான்னு சில தகவல்கள் சொல்கின்றன. தூத்துக்குடியை பொறுத்தவரை பெரும்பாலும் நாடார் சமுதாயம் ஆக்கிரமித்துள்ளது. இதில் திமுகவில் கனிமொழி நிறுத்தப்படலாம் என்ற கருத்து முன்பிருந்தே பேசப்பட்டு வருகிறது. அதேபோல, இந்த தொகுதியில் அதிமுக வேட்பாளர் யார் என்பது முடிவாகவில்லை.

சில தினங்களுக்கு முன்பு சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தமிழக முதல்வரை சந்தித்து பேசினார். எதற்கான சந்திப்பு என்பது முழு விவரமாக நமக்கு தெரியப்படுத்தப்படவில்லை என்றாலும், கூட்டணியில் இணைவதற்கான சாத்திய கூறுகள் எழுந்துள்ளதோ என்று பார்க்கப்பட்டது. இப்போ என்ன சொல்லப்படுதுன்னா, அதிமுக கூட்டணியில, சமக சார்பா ராதிகா தூத்துக்குடி தொகுதியில இரட்டை இலை சின்னத்துல நிப்பாருன்னு ஆரூடம் சொல்றாங்க.

கனிமொழி, இருமுறை திமுக சார்பில் ராஜ்ய சபா உறுப்பினராக பதவி வகித்திருக்கிறார். அவரது பதவிக் காலம் வருகிற ஜூலையில் முடிகிறது. 2ஜி வழக்கில் இருந்து விடுதலை ஆன கனிமொழி அடுத்தபடியாக நேரடியாக மக்களை சந்தித்து வாக்குகளைப் பெற்று எம்.பி. ஆக விரும்புகிறார்.

இதற்காக கனிமொழி தேர்வு செய்திருக்கும் தொகுதி, தூத்துக்குடினு தகவல்கள் சொல்லுது. சமீபத்தில் அவர் கலந்துகிட்ட ஊராட்சி சபைக் கூட்டங்கள், கிட்டத்தட்ட கனிமொழியின் தேர்தல் பிரசாரமாகவே பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே சரத்குமார் தென்காசி, திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிட்டபோது, ராதிகா சரத்குமார் இந்தப் பகுதியில் பிரசாரம் செய்திருக்கிறார். கடந்த காலங்களில் திமுக.வுக்காகவும் அவர் பிரசாரம் மேற்கொண்டிருக்கிறார். இப்போது முதல் முறையாக அவரே தேர்தலில் களம் காண முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. சபாஷ், சரியான போட்டி.