அதிமுகவில் சேர்ந்த ராதாரவி, அதிரடி ஆரம்பம்

தடாலடி பேச்சுக்கு பாப்புலரான ராதாரவி, சினிமா நிகழ்ச்சி ஒன்றில் நயன்தாரா குறித்து இழிவாக பேசியதால் திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நேற்று நேரில் சந்தித்து தன்னை மறுபடியும் அதிமுகவில் இணைத்துக் கொண்டார்.

இந்நிலையில், நடிகர் சங்கம் தேர்தல் குறித்து பேட்டி அளித்த அவர், “கடந்த முறை எங்களுக்கு எதிராக போட்டியிட்ட விஷால் அணி மாற்றம் தேவை என்றார்கள். நான் மாற்றம் வரலாம் ஏமாற்றம் வரக்கூடாது என்றேன்.

இப்போது அது தான் நடந்து இருக்கிறது. விஷால் மீது ஏமாற்றம் ஏற்பட்டிருக்கிறது. எங்களுக்கு எதிராக அவருக்கு ஆதரவாக நின்ற அனைவரும் இப்போது அவருக்கு எதிராக நிற்கிறார்கள்.

கடந்த முறை ரஜினி தேர்தலில் ஓட்டு போட்ட போது யார் ஜெயித்தாலும் மூன்று ஆண்டுகளில் சொன்னதை நிறைவேற்ற வேண்டும் என்றார். இப்போது அவர்கள் ஒன்றையும் நிறை வேற்றாததால் ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது. அந்த அணி பொய்களை கூறி ஜெயித்த அணி.

எதற்கெடுத்தாலும் விஷாலை முன்னிலைப்படுத்தி முன்னிலைப்படுத்தி இப்போது அசிங்கப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இது நடக்கும் என்று முன்பே கூறினேன். இன்னும் நிறைய வேடிக்கைகள் காத்திருக்கிறது. இது சட்ட விரோதமான தேர்தல்.

23-ந் தேதி கண்டிப்பாக தேர்தல் நடக்காது. அவர்கள் நடத்திய கலை நிகழ்ச்சிகளுக்கு முறையான கணக்கு தாக்கல் செய்யவில்லை. நிறைய குளறுபடிகள் நடந்திருக்கிறது. இந்த தேர்தல் கண்டிப்பாக நடக்காது. 13-ந்தேதி நீதிமன்றம் மூலம் தேர்தல் நிறுத்தப்படும்,” என்றார்.

இதனால், திட்டமிட்டப்படி நடிகர் சங்கத் தேர்தல் நடக்குமா என்று கோலிவுட்டில் பரபரப்பு நிலவுகிறது. கடந்த தேர்தலில் பாண்டவர் அணிக்கு எதிர் அணியாக போட்டியிட்டு தோல்வியை தழுவிய சரத்குமார் அணியில் இருந்தவர் ராதாரவி என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் சங்கத் தேர்தல், சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களை விட பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிடும் விஷாலுக்கு எதிராக தயாரிப்பாளரும் கல்வியாளருமான‌ ஐசரி கணேஷ் களமிறங்கி இருக்கிறார்.

நடிகர் சங்கத் தேர்தலில் பாண்டவர் அணியில் தலைவர் பதவிக்கு நாசரும் பொதுச் செயலாளர் பதவிக்கு விஷாலும் பொருளாளர் பதவிக்கு கார்த்தியும் துணை தலைவர்கள் பதவிக்கு கருணாஸ் மற்றும் பூச்சி முருகனும் போட்டியிடுகின்றனர்.