கொலை செய்ய முயன்றாரா பார்த்திபன்? நடந்தது என்ன?

பிரபல இயக்குனரும், நடிகருமான ஆர் பார்த்திபன் மீது உதவி இயக்குனர் ஜெயம்கொண்டான் என்பவர் காவல் ஆணையர் அலுவலகத்தில் கொலை முயற்சி புகார் அளித்துள்ளார்.

பார்த்திபனின் திருவான்மியூர் வீட்டில் கொள்ளை போனதை அடுத்து ஜெயம்கொண்டான் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இதற்கான காரணம் குறித்து கேட்க சென்றபோது பார்த்திபன் தன்னை தாக்கியதாக ஜெயம்கொண்டான் குற்றம்சாட்டியுள்ளார்.

கடந்த 10 ஆண்டுகளாக பார்த்திபன் வீட்டில் பணிபுரிந்த ஜெயம்கொண்டான், பார்த்திபன் தன்னை தாக்கி, மாடியில் இருந்து தள்ளிவிட்டதாக காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, நுங்கம்பக்கம் காவல் துறையினர் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். இந்த சம்பவம் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே, ஜெயம்கொண்டான் குறித்து இன்னொரு தகவலும் கிடைத்துள்ளது. ஜெயம்கொண்டான், பார்த்திபன் வீடு அமைந்துள்ள, கேகே நகர் பகுதியில் ‘கவிஞர் கிச்சன்’ என்கிற பெயரில் உணவகம் ஒன்றை நடத்தி வந்துள்ளார்.

இங்கிருந்து தான் பல தயாரிப்பு நிறுவனங்களுக்கு சாப்பாடு சப்ளை செய்யப்பட்டது. மேலும் பார்த்திபன் வீட்டில் ஏதேனும் விசேஷம் என்றால், இவர் தான் வேலைக்கு ஆட்கள் அனுப்பி வைத்துள்ளார். தற்போது இந்த உணவகத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் மூடிவிட்டு, முழுமையாக திரைப்படங்களில் நடிப்பது, பாடல்கள் எழுதுவது என திரையுலகில் தன்னுடைய முழு கவனத்தையும் செலுத்தியுள்ளார் எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், தன் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள பார்த்திபன், “பார்த்திபன் கொலை செய்ய முயற்சி’ Humour sense-க்கு அளவுவே இல்லாமல் போய் விட்டது!

என் புகாரின் பெயரில் நேற்று மாலை ஆணையர் அலுவலகத்தில் நின்ற குற்றவாளி இன்று காலை அதே அலுவலகத்தில் என்மீது புகார் செய்ய அது எல்லா ஊடகங்களிலும் வர கவிஞனாக பிரபலமாகி விட்டார் ஒருவர். மகிழ்ச்சி!” எனக் கூறியுள்ளார்.

மேலும் அவர், “அவராகவே ஓடிவிட்டு இப்போது நான் தள்ளிவிட்டதாகப் புகார் கொடுக்கிறார். மூன்றாவது மாடியிலிருந்து தள்ளிவிட்டால் எப்படி வந்து புகார் கொடுக்க முடியும்? அந்தத் திருட்டு சம்பவத்திற்குப் பிறகு சிலரை நான் வேலையை விட்டு நீக்கினாலும் இவரை வைத்திருந்தேன். கடந்த வாரம் கூட இவருக்குப் பண உதவி செய்தேன். இவர் எனக்கு துரோகம் செய்துவிட்டு அது குறித்து நான் கேட்டதற்கு இப்படியொரு வீண் பழியை என் மீது சுமத்தியுள்ளார்,” எனக் கூறியுள்ளார்