புரொஜக்ட் சி – சாப்டர் 2’ படத்தில் நியூஸ் & ஸ்டில்
வித்தியாசமான சஸ்பென்ஸ் த்ரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள ‘புரொஜக்ட் சி – சாப்டர் 2’
சார்க் பின் ஸ்டுடியோஸ் (Shark Fin Sttudios) நிறுவனம் சார்பில் ஸ்ரீ தயாரித்திருக்கும் படம் ’புரொஜக்ட் சி – சாப்டர் 2’ (Project C – Chapter 2). 2018 ஆம் ஆண்டு வெளியான ‘மங்கை மான்விழி அம்புகள்’ என்ற படத்தை இயக்கிய வினோ இயக்கும் இரண்டாவது படமான இப்படத்தில் ஸ்ரீ, வசுதா கிருஷ்ணமூர்த்தி, சாம்ஸ், ராம்ஜி, கோவை குருமூர்த்தி ஆகியோர் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.
ரம்மி போன்ற விளையாட்டு போல் நகரும் இப்படத்தின் கதையில் இடம் பெறும் ஐந்து முக்கிய கதாப்பாத்திரங்களில் ஒவ்வொருவரும் ஒரு குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு இடையே நடைபெறும் இந்த விளையாட்டில் யார் ஜெயிப்பார்கள் என்பது படத்தை விறுவிறுப்பாக நகர்த்துவதோடு, இவர்களிடம் இருக்கும் போட்டி குணம் படம் பார்ப்பவர்களை சீட் நுணியில் உட்கார வைக்கும் அளவுக்கு படத்தை சுவாரஸ்யமாக நகர்த்தி செல்லும்.
தமிழ் சினிமாவில் இதுவரை வெளிவராத ஒரு புதிய முயற்சியோடு வித்தியாசமான சஸ்பென்ஸ் த்ரில்லர் படமாக உருவாகியிருக்கும் இப்படத்தின் திரைக்கதையும், படத்தில் வரும் முதன்மை கதாப்பாத்திரங்களின் வடிவமைப்பும் இதுவரை எந்த ஒரு படத்திலும் பார்த்திராத வித்தியாசமாக இருப்பதோடு, பேசப்படும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
மொத்தம் மூன்று பாகங்களாக உருவாக உள்ள இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகமான ‘புரொஜக்ட் சி – சாப்டர் 2’ தான் முதலில் வெளியாக உள்ளது. பொதுவாக பல பாகங்களாக வெளியாகும் படங்கள் முதல் பாகம் வெளியான பிறகு தான் அதன் அடுத்தடுத்த பாகங்கள் வெளியாகும். ஆனால், இப்படக்குழு சற்று வித்தியாசமாக முதலில் இரண்டாம் பாகத்தை வெளியிடுகிறார்கள்.
இது குறித்து தயாரிப்பாளரும், படத்தின் ஹீரோவுமான ஸ்ரீயிடம் கேட்ட போது, ”டிரமாட்டிக் சஸ்பென்ஸ் த்ரில்லர் படம் ‘புரொஜக்ட் சி – சாப்டர் 2’. தமிழ் சினிமாவில் இப்படி ஒரு படம் வந்ததில்லை, என்று சொல்லும் அளவுக்கு படத்தை வித்தியாசமான முறையில் எடுத்துள்ளோம். படம் போலவே படத்தின் வெளியீடும் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்று தான் முதலில் இரண்டாம் பாகத்தையும் வெளியிடுகிறோம். இரண்டாம் பாகத்தை பார்க்கும் போது, முதல் பாகத்தில் என்ன நடந்திருக்கும் என்ற எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடம் ஏற்படுவதோடு, அதன் தொடர்ச்சி மிக எளிமையாக புரியும்படியும் இருக்கும்.” என்றார்.
இப்படத்தில் ஹீரோயினாக நடித்திருக்கும் வசுதா கிருஷ்ணமூர்த்தி, ஏற்கனவே ‘சிஸ்டர்’ என்ற ஆங்கிலப் படத்தில் நடித்திருக்கிறார். அப்படத்திற்காக சிறந்த நடிகைக்கான விருதும் அவர் வென்றிருக்கிறார். அதேபோல், படத்தில் ஹீரோ, ஹீரோயின் என்று இல்லாமல், ஐந்து கதாப்பாத்திரங்களுக்கும் முக்கிய பங்கு கொடுக்கப்பட்டுள்ளாதாம்.
இப்படத்திற்கு சிபு சுகுமாரன் இசையமைத்துள்ளார். இவர் சுமார் 12 மலையாள படங்களுக்கு இசையமைத்துள்ளார். தமிழில் இது தான் முதல் படம். சதிஷ் ஆனந்த் ஒளிப்பதிவு செய்துள்ளார். இவர் ‘அடங்க மறு’, ‘அண்ணாதுரை’ போன்ற படங்களில் உதவியாளராக பணியாற்றியுள்ளார். தினேஷ் காந்தி படத்தொகுப்பு செய்துள்ளார். சித்தின் கும்புக்காடு டிஐ செய்துள்ளார்.
படத்தில் மொத்தம் மூன்று பாடல்கள் உள்ளது. மூன்று பாடல்களும் மிகப்பெரிய ஹிட் பாடல்களாக உருவாகியிருப்பதோடு, படத்தின் பீஜியமும் மிகப்பெரிய அளவில் பேசப்படும் விதத்தில் அமைந்துள்ளது.
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு சமீபத்தில் வெளியிட்டார். அதேபோல், மோஷன் போஸ்டரை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வெளியிட்டார்.
தற்போது படப்பிடிப்பு முடிவடைந்து பின்னணி வேலைகளில் ஈடுபட்டுள்ள படக்குழ் விரைவில் பாடல்களை வெளியிட திட்டமிட்டுள்ளது. அதை தொடர்ந்து ஜூன் அல்லது ஜூலை மாதம் படத்தை வெளியிடவும் திட்டமிட்டுள்ளனர்.
மேலும், இப்படத்தை மூன்று பாகங்களாக தயாரிப்பதோடு, மேலும் மூன்று படங்களை சார்க் பின் ஸ்டுடியோஸ் சார்பில் ஸ்ரீ தயாரிக்க உள்ளார். அப்படங்களுக்கான கதை தேர்வு முடிவடைந்த நிலையில், தற்போது லொக்கேஷன் தேர்வு நடைபெற்று வருகிறது. அப்படங்களின் விவரங்கள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. மேலும், சார்க் பின் ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிக்கும் படங்கள் அனைத்தும் சஸ்பென்ஸ் த்ரில்லர் ஜானர் திரைப்படங்களாக மட்டுமே இருக்கும் என்றும் தயாரிப்பாளர் ஸ்ரீ தெரிவித்துள்ளார்.