பாடகியை படுக்கைக்கு அழைத்த பிரபல‌ இயக்குநர்: பரபரப்பு புகார்

பெரும் புயலை கிளப்பிய ‘மீ டூ’ விவகாரம் இப்போது தான் சற்று ஓய்ந்துள்ள நிலையில், தெலுங்கு சினிமாவின் முன்னணி பாடகிகளில் ஒருவராக இருக்கும் பிரணவி, பிரபல இயக்குனர் ஒருவர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறியிருக்கிறார்.

ஸ்ரீ ராமதாசு, ஹேப்பி டேஸ், எமதொங்கா, லயன் உள்ளிட்ட பல படங்களில் பாடி மிகவும் பிரபலமானவர் பிரணவி. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடன இயக்குனர் ரகு மாஸ்டரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பெண் குழந்தை ஒன்று உள்ளது.

அவர் கூறியதாவது: “நான் சினிமாவில் பாட பலரிடம் வாய்ப்பு கேட்டேன். அப்போது பிரபல இயக்குனர் ஒருவர் தனக்கு பாட வாய்ப்பு தருவதாக தெரிவித்தார்.

ஸ்டூடியோவுக்கு வருமாறு அழைத்தார். அங்கு சென்றதும் படுக்கையை பகிர்ந்தால் பாட வாய்ப்பு தருவேன் என்று கூறினார். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. நான் சின்ன பொண்ணு இப்போதுதான் பள்ளி படிப்பை முடித்து இருக்கிறேன் என்று கூறினேன்.

ஆனால் அதை அவர் பொருட்படுத்தாமல் படுக்கைக்கு அழைப்பதிலேயே குறியாக இருந்தார். எனக்கு கோபம் வந்தது. அவரை பார்த்து செருப்பால் அடிப்பேன் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பி வந்து விட்டேன்.” இந்த திடுக் குற்றச்சாட்டு தெலுங்கு பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆரம்பகாலத்தில் சினிமாவில் பாடல் பாட வாய்ப்புகள் தேடிய சமயத்தில் பலர் படுக்கைக்கு வந்தால் தான் பாட வாய்ப்பு என கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலக பிரபலங்கள் பலர் மீது பாலியல் புகார் கூறி நடிகை ஸ்ரீரெட்டி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். சில காலம் விஸ்வரூபம் எடுத்த‌ மீ டூ பிரச்சினையும் ஓய்ந்திருந்த நிலையில், தற்போது மீண்டும் பிரணவி, சமீரா ரெட்டி போன்றோர் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொந்தரவுகள் பற்றி பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த குற்றச்சாட்டுகளை எல்லாம் விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.