மத்திய அமைச்சராகும் ஓபிஎஸ் மகன், இன்னொரு மந்திரி யார்?

அதிமுக ஒருங்கிணைப்பாளரும் தமிழக துணை முதல்வருமான ஓ பன்னீர்செல்வத்தின் மகன் ஓ பி ரவீந்திரநாத் குமார் அதிமுக பாஜக கூட்டணியின் ஒரே வெற்றி வேட்பாளராக தேனியிலிருந்து ஜெயித்திருக்கும் நிலையில், அவர் மத்திய அமைச்சராவார் என அடித்து சொல்கிறார்கள் அதிமுகவினர்.

“தமிழ்கத்துக்கு எப்படியும் மந்திரி சபையில் பிரதிநிதித்துவம் கொடுத்து தான் ஆக வேண்டும். சென்ற முறை பொன்னார் வென்றது போல, இந்த தடவை ரவீந்திரநாத் குமார் வென்றுள்ளார். எனவே, அவர் மத்திய அமைச்சர் ஆவது உறுதி,” என்கின்றனர் ரத்தத்தின் ரத்தங்கள்.

இது தொடர்பாக ஏற்கனவே, ஓபிஎஸ் பாஜக தலைமையிடம் பேசி இருப்பதாகவும், சாதகமான சிக்னல் கிடைத்துள்ளதாகவும் தெரிகிறது. சமீபத்தில் பிரதமர் நரேந்திர‌ மோடியின் மனு தாக்கலுக்காக பன்னீர் வாரணாசி சென்ற போது, மகனையும் அழைத்து சென்றது நினைவிருக்கலாம்.

இந்நிலையில், தமிழ் நாட்டில் பாஜகவை பலப்படுத்த தேர்தலில் தோற்ற‌ ஒரு முக்கியத் தலைவருக்கும் மத்திய மந்திரி பதவி அளிக்கப்படும் எனத் தெரிகிறது. அவருக்கு ஆறு மாதத்திற்குள் ராஜ்ய சபை எம் பி பதவியும் வழங்கப்படும் எனக் கூறப்படுகிறது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கான தேர்தல் தேதிகள் மார்ச் 10ம் தேதி அறிவிக்கப்பட்டது. ஏப்ரல் 18ம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 39 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது.

தேனி தொகுதியைப் பொறுத்தவரை, ஈவிகேஎஸ் இளங்கோவனை களம் இறக்கியது காங்கிரஸ். இவரை எதிர்த்து அதிமுக சார்பில் அந்த தொகுதியில் களம் இறங்கியவர் ரவீந்திரநாத் குமார். அமமுக சார்பில் தங்க தமிழ்ச்செல்வன் போட்டியிட்டார்.

இநத தொகுதியில் மொத்தம் 15 லட்சத்து 54 ஆயிரத்து 51 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 11 லட்சத்து 55 ஆயிரத்து 565 வாக்காளர்கள் வாக்களித்தனர். பதிவான வாக்குகள் கொடுவிலார்பட்டியில் உள்ள கம்மவார் சங்க கல்லூரியில் எண்ணப்பட்டன. முடிவில் ரவீந்திரநாத்குமார் வென்றார்.

தேர்தல் முடிவுகள் வெளியாகும் முன்பே தேனி மக்களவை அதிமுக வேட்பாளர் ரவீந்திராந்த் குமாரை எம்பி என்று குறிப்பிட்டு குச்சனூர் கோயிலில் கல்வெட்டு வைக்கப்பட்டது நினைவிருக்கலாம்.