இந்தி எதிர்ப்பு: திமுகவின் இரட்டை வேடம் அம்பலம்

அனைத்துப் பள்ளிகளிலும் நடுநிலை வகுப்புகளில் மும்மொழி கொள்கையை கடைபிடிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு சமர்பிக்கப்பட்டுள்ள‌ வரைவு புதிய கல்விக் கொள்கையில் குறிப்பிடப்பட்டிருப்பது தமிழகத்தில் அரசியல் புயலை கிளப்பியுள்ளது.

6-ம் வகுப்பு முதல் தாய்மொழி, ஆங்கிலம் ஆகியவற்றோடு இந்தி மொழியை கற்பிக்க வேண்டும் என்ற கஸ்தூரி ரங்கன் குழு பரிந்துரைத்துள்ளது. இது இந்தியை திணிக்க மத்திய அரசின் திட்டம் என எதிர்க்கட்சிகள் கூறி வரும் நிலையில், அப்படி ஒரு திட்டமும் கைவசம் இல்லை, அனைத்து மொழிகளுக்கும் சம அந்தஸ்து அளிக்கப்படும் என மத்திய அரசு தெளிவுப்படுத்தியது.

தமிழிலேயே ட்வீட்டிய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர், “மத்திய அரசு மக்களின் கருத்துகளை கேட்டறிந்த பிறகே கல்வி குழுவின் வரைவை முன் எடுத்து செல்லும். அரசு அனைத்து இந்திய மொழிகளையும் வளர்க்கவும் ஊக்குவிக்கவும் எல்லா முயற்சியையும் எடுக்கும். எந்த மொழியையும் யார் மீதும் திணிக்கும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை,” என திட்டவட்டமாக கூறினார்.

இருந்தும் அடங்காத எதிலும் அரசியல் செய்யும் சில தமிழக கட்சியினர், மத்திய அரசு மீது பொய் குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகின்றனர். இதைத் தொடர்ந்து பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா, “புதிய கல்விக் கொள்கை பற்றி மத்திய அரசு எந்த அறிவிப்பும் வெளியிடாத போது நேசமணி. மற்றும் இந்தி எதிர்ப்பு ஆகிய பிரச்சினைகள் பற்றி கூக்குரலிடுவது SRM கல்லூரி தற்கொலைகள் விஷயத்தை திசைதிருப்பவே. முதலில் Sunshine பள்ளியை ஸ்டாலின் இழுத்து மூடட்டும். வெட்கம் கெட்டவர்கள்,” என பதிவிட்டார்.

மேலும் அவர், “திமுக,மதிமுக எம் பி க்கள் எம் எல் ஏ க்கள், திக, திமுக, மதிமுக, மாநில,மாவட்ட, ஒன்றிய செயளாளர்கள், குழந்தைகள் படிக்கும் பள்ளிகள் பற்றிய விவரம் திரட்டுவோம். அக்குழந்தைகளை இந்தி கற்பிக்கும் பள்ளியில் இருந்து டிசி பெற்று தமிழ் பள்ளியில் சேர்க்க வைக்கும் போராட்டம் துவங்க வேண்டியுள்ளது.”

இது மட்டுமல்லாமல், சமூக வலைதளங்களிலும் பல்வேறு பதிவுகள், திமுக எவ்வாறு இந்த விஷயத்தில் இரட்டை வேடம் போடுகிறது என்பதை அம்பலப்படுத்தும் வண்ணம் பரவி வருகின்றன. தற்போது நடைமுறையில் உள்ள தேசிய கல்வி கொள்கையானது 1986-ம் ஆண்டில் கொண்டுவரப்பட்டு, 1992-ம் ஆண்டு திருத்தப்பட்டது.

2014- ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின் போது புதிய கல்விக் கொள்கை கொண்டு வரப்படும் என்று பா.ஜனதா வாக்குறுதி கொடுத்திருந்தது. அதன்படி கஸ்தூரி ரங்கன் தலைமையிலான 9 பேர் கொண்ட நிபுணர்கள் குழு, அமைக்கப்பட்டது.

அந்த குழு, தேசிய கல்வி கொள்கைக்கான வரைவை, புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட மத்திய மனித வளம் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் போகிரியால் நிஷாங்கிடம் சமீபத்தில் ஒப்படைத்தது.