சீட் நஹி: கோபத்தில் குஷ்பு, தாங்குமா காங்கிரஸ்?

பத்து சீட்டுல ஏதாவது ஒன்னு தனக்கு நிச்சயமா கிடைக்கும்னு நம்பிக்கையா இருந்த காங்கிரசின் தேசிய‌ செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்பு, அதையே சூசககமா காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கட்டளையிட்டால் தேர்தலில் போட்டியிடுவேன் என்று ஊடகங்களிடம் இத்தனை நாள் சொல்லி வந்தார்.

ஆனால், பத்தில் ஒன்பது தொகுதிகளுக்கு வெளியான வேட்பாளார் பட்டியலில் தன் பெயர் இல்லாததாலயும், பாக்கி இருக்கிற சிவகங்கையிலும் தனக்கு சான்ஸ் கம்மி என்பதாலயும் அம்மணி ரொம்பவே அப்செட்டில் இருக்கிறாராம்.

டெல்லியோ, மூத்த தலைவர்களுக்கிடையே கடும் போட்டியால இந்த தடவை குஷ்புவுக்கு சீட் தர முடியல, அவருக்கான உரிய முக்கியத்துவம் விரைவிலேயே தரப்படும், தமிழ் நாட்டில் அவரின் புகழை நாங்கள் அறியாமல் இல்லைனு ஆறுதல் சொல்லுதாம்.

காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பட்டியல் இன்று வரும், நாளை வரும் என பெரிய போராட்டத்திற்கு இடையே நேற்று இரவு பட்டியல் வெளியானது. தமிழகத்தில் 9 தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ் 8 தொகுதிகளில் வேட்பாளர்களை அறிவித்தது. சிவகங்கை தொகுதிக்கு வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை.

திருச்சி தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் திருநாவுக்கரசரும், தேனி தொகுதியில் ஈவிகேஎஸ் இளங்கோவன், திருவள்ளுர் தொகுதியில் கே.ஜெயகுமார், புதுச்சேரி தொகுதியில் வைத்தியலிங்கம், கன்னியாகுமரியில் எச் வசந்தகுமார் , ஆரணியில் டாக்டர் எம் கே விஷ்ணு பிரசாத்தும் போட்டியிடுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மேலும் கரூர் தொகுதியில் தம்பிதுரைக்கு எதிராக காங்கிரஸ் கட்சியில் ஜோதிமணியும், விருதுநகரில் மாணிக்கம் தாகூர், கிருஷ்ணகிரியில் டாக்டர் ஏ செல்வகுமாரும் போட்டியிடுவதாக அறிவிப்பு வெளியானது.

திருச்சி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட குஷ்பு விருப்ப மனு தாக்கல் செய்து இருந்தனர். காங்கிரஸ் கலை இலக்கிய பிரிவு துணை தலைவர் மயிலை அசோக்குமார் குஷ்பு பெயரில் விருப்ப மனுவை கொடுத்தார்.

இந்த தேர்தலில் குஷ்பு போட்டியிடுவார் என்று கடந்த ஒரு மாதமாகவே பேச்சு அடிபட்டது. தென் சென்னை தொகுதியில் அவர் போட்டியிடுவார் என்று கூறப்பட்டது. ஆனால் தென் சென்னை திமுகவுக்கு ஒதுக்கப்பட்ட‌து. இப்போது திருச்சியும் குஷ்புவுக்கு இல்லை என்று ஆகிவிட்டது.