மீண்டும் நிலானி, மீண்டும் காதல், மீண்டும் ஆபாச படங்கள்

பிரிக்க முடியாதது எதுவோ? நிலானியும் சர்ச்சைகளும் என சொல்லும் அளவுக்கு போய்விட்டது நிலைமை. தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் போலீசார் பற்றி தரக்குறைவாக பேசி போலீஸ் உடையில் சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்ட குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு முதன்முதலில் சர்ச்சையானார் நிலானி.

35 வயதான நிலானி, தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார். திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். கணவரை பிரிந்து வாழ்கிறார். கைது செய்து விடுதலை ஆன சில காலத்திற்குள், சின்னத்திரை உதவி இயக்குனர் காந்தி தற்கொலை செய்து கொண்டதற்கு நிலானி தான் காரணம் என புகார் எழுந்தது.

அவர் காந்தியுடன் நெருக்கமாக இருக்கும் படங்களும் வெளியானது. இதனால் நிலானியும் தற்கொலைக்கு முயற்சியில் ஈடுபட்டார். சில மாதங்களாக அவரை பற்றி செய்தி வெளிவராமல் இருந்த நிலையில், சென்னை கமிஷனர் அலுவலகத்தில் நேற்று புகார் மனு ஒன்றைக் கொடுத்தார்.

அதில் அவர், “கடந்த 9 மாதங்களுக்கு முன் சில நிகழ்வுகளால் என்னைக் குறித்த செய்திகள் வெளியாகின. அதைப்பார்த்த சிலர் எனக்கு உதவி செய்வதாகக் கூறினார்கள். அதில் ஒருவர் மஞ்சுநாதன்.

அவர் என்னிடம் வெளிநாட்டில் இருப்பதாகவும் இந்தியா வரும்போது உதவி செய்வதாகவும் கூறினார். என்னுடன் நண்பர்போல பழகினார். நேரில் என்னைச் சந்தித்தபோது மஞ்சுநாதன், தனக்கு திருமணமாகவில்லை. இதனால் என்னைத் திருமணம் செய்துகொள்ள ஆசைப்படுவதாகக் கூறினார்.

நானும் என்னுடைய குழந்தைகளின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு மஞ்சுநாதனிடம் உங்களுடைய பெற்றோர் சம்மதித்தால் திருமணத்துக்குச் சம்மதம் என்று கூறினேன். இந்தச் சமயத்தில் எனக்கு செல்போன் வாங்கித் தந்தார். ரகசியமாகத் திருமணம் செய்ய என்னை வற்புறுத்தினார். நான் அதற்கு மறுத்ததால் செல்போனை எடுத்துச் சென்றுவிட்டார். அதன் பிறகு தன்னுடைய தாயாரை என்னுடன் பேச வைத்து என்னை சமாதானப்படுத்த முயற்சி செய்தார் மஞ்சுநாதன். அப்போதுதான் மஞ்சுநாதனுக்குத் திருமணமாகி குழந்தையும் இருக்கும் தகவல் தெரியவந்தது. அதை அவரின் மாமனாரும் மனைவியும் என்னிடம் கூறினர்.

 இதுகுறித்து மஞ்சுநாதனிடம் கேட்டபோது அவர் பதில் சொல்லவில்லை. இதனால் மஞ்சுநாதனின் மனைவி மற்றும் மாமாவின் ஆலோசனை பேரில் அவரிடமிருந்து விலகி வேறு இடத்துக்குச் சென்றுவிட்டேன். போன் நம்பரையும் மாற்றினேன். ஆனால், மஞ்சுநாதன் என்னை விடாமல் என் போனிலிருந்து உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் போன் செய்து சைக்கோபோல ஆபாசமாகப் பேசினார். ஒரு நாளைக்கு 400 போன் கால் செய்து தொல்லை கொடுத்தார். மேலும், என்னைப்பற்றி அவதூறான தகவல்களை சமூகவலைதளங்களில் பதிவு செய்தார்.

மஞ்சுநாதன், என்னிடம் திருமணம் செய்து கொள்ளும்படி மிரட்டுகிறார். இல்லையெனில் என்னுடைய குளியல் வீடியோக்களையும் அவர் எடுத்திருப்பதாகவும் செல்போனில் உள்ள புகைப்படங்களை வெளியிட்டுவிடுவதாகவும் மிரட்டுகிறார்.

அதோடு மட்டுமல்லாமல் என்னைக் கொலை செய்துவிடுவதாகவும் ஆசிட் வீசுவதாகவும் குழந்தைகளைக் கடத்துவதாகவும் கூறுகிறார். கடந்த மூன்று மாதங்களாகப் பல நம்பர்களிலிருந்து எனக்குத் தொல்லை கொடுத்துவருகிறார்,” என்று கூறியுள்ளார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: “பழைய சம்பவங்கள் பற்றி என்னிடம் எதுவும் கேட்காதீர்கள். இப்போது புதிய பிரச்சினையில் சிக்கி உள்ளேன். பல்வேறு பிரச்சினைகளில் சிக்கியதால் நடிக்க வாய்ப்பும் கிடைக்கவில்லை. 2 குழந்தைகளோடு நான் வாழ்வாதாரத்திற்கு கஷ்டப்பட்டு வந்தேன்.

மஞ்சுநாதன் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரிடம் உள்ள எனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காக தான் புகார் கொடுக்க வந்தேன்,” என்று கூறினார்.