நயன்தாராவுக்கு ஒன்னுண்ணா… சீறிய ஸ்டாலின், பின்னணியில் உதயநிதி?

ராதாரவி எத்தனையோ பேரை எப்படி எப்படி எல்லாலோ வசை பாடிய போதெல்லாம் அமைதியாக இருந்த திமுக தலைமை, அவர் சில தினங்களுக்கு முன் நடைபெற்ற கொலையுதிர்காலம் திரைப்பட முன்னோட்ட விழாவில் கலந்து கொண்டு நடிகை நயன்தாரா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் இழிவாக பேசியவுடன் வீறு கொண்டு எழுந்து அவரை கட்சியிலிருந்து தற்காலிகமா நீக்கி இருக்கு.

அது மட்டுமில்லாம, கட்சியின் தலைவர் மு க ஸ்டாலினே டிவிட்டரில், “பெண்ணுரிமை முன்னிறுத்தும் திமுகவில் அங்கம் வகிக்கும் நடிகர் ராதாரவி அவர்களின் திரைத்துறை சார்ந்த பெண் கலைஞர்கள் குறித்த கருத்து ஏற்க இயலாதது. கடும் கண்டனத்திற்குரியது. கழகத்தினர் யாவரும் கண்ணியம் குறையாத வகையில் கருத்துகளை தெரிவிக்க வேண்டும்.மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று கடும் கண்டனம் தெரிவிச்சு இருக்கார்.

இதுக்கெல்லாம் பின்னாடி உதயநிதி ஸ்டாலினுக்கும் நயன்தாராவுக்கும் உள்ள பழைய நட்பு தான் காரணம்னு நெட்டிசன்கள் மீம்ஸ் போடும் நிலையில, திமுக ராதாரவி விஷயத்துல இரட்டை நிலைப்பாட்டை எடுத்திருப்பதாகவும், அதன் தலைமை மாற்றுத் திறனாளிகளின் மத்தியில் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பால் முகவர்கள் சங்கம் வலியுறுத்தி இருக்கு.

தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் தலைவர் சு ஆ பொன்னுசாமி, ” ராதாரவி அவர்கள் நடிகை நயன்தாரா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் இழிவாக பேசியது திமுகவிற்கு அவப்பெயரை ஏற்படுத்தி விட்டதாகவும், கழக கட்டுப்பாட்டை அவர் மீறி விட்டதாகவும் கூறி அவரை அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் தற்காலிகமாக நீக்கம் செய்வதாக கட்சித் தலைமை அறிவித்துள்ளது.

இதே நடிகர் ராதாரவி அவர்கள் கடந்த 2017ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் வாரத்தில் வடசென்னை, தங்கசாலை மணிக்கூண்டு அருகே நடைபெற்ற திமுகவின் அதிகாரபூர்வமான பொதுக்கூட்டத்தில் பேசிய போது எதிர்க்கட்சியினரை தாக்கி பேசுவதற்காக மாற்றுத் திறனாளிகளை உதாரணம் காட்டியும், மாற்றுத்திறனாளிகளின் மனதை புண்படுத்தும் விதமாக அவர்களின் செய்கையை அந்த மேடையிலேயே நடித்து காண்பித்ததோடு மட்டுமின்றி அவர்களை இழிவுபடுத்தும் விதமாகவும் பேசியிருந்தார்.

அவர் பேசிய அதே மேடையில் அமர்ந்திருந்த எழும்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. ரவிச்சந்திரன், திரைப்பட பின்னணி பாடகி சின்னப்பொண்ணு உட்பட சுமார் 20க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் எவரும் அவரது கீழ்த்தரமான அச்செயலை கண்டிக்கவோ, தடுக்கவோ முன் வராமல் அதனை ரசித்து வாய்விட்டு சிரித்து கொண்டிருந்திருந்த நிகழ்வும் அரங்கேறியது.

தனது அரசியல் ஆதாயத்திற்காக மாற்றுத்திறனாளிகளின் அசைவுகளை கிண்டலடித்து அதன் மூலம் அரசியல் செய்த நடிகர் ராதாரவியின் கீழ்த்தரமான அந்த செயலை அப்போது திமுகவின் தலைமை வெறும் கண்டிப்போடு விட்டு விட்டது.

ஆனால் தற்போது நடிகை நயன்தாரா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் இழிவாக பேசிய காரணத்திற்காக திமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கம் செய்வதாக கட்சித் தலைமை அறிவித்துள்ளது மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலை மனதில் வைத்து நடத்தப்பட்ட முழுக்க, முழுக்க சுயநல அரசியல் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.

பெண்களை எவர் இழிவுபடுத்தினாலும், எந்த வகையில் இழிவுபடுத்தினாலும் அதனை ஏற்றுக் கொள்ள முடியாது என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அதே சமயம் மாற்றுத்திறனாளிகளை இழிவுபடுத்தி பேசி, பல லட்சம் மாற்றுத் திறனாளிகளின் மனதை புண்படுத்திய போது அதனை பார்த்து ரசித்து விட்டு பெயரளவிற்கு மட்டும் தங்களின் எதிர்ப்பை பதிவு செய்த திமுக தலைமை தற்போது பிரபல நடிகை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி விட்டார் என்பதற்காகவும், தற்போது தேர்தல் காலம் என்பதாலும் அவர் மீது அவசர, அவசரமாக நடவடிக்கை எடுத்திருக்கும் திமுகவின் இரட்டை நிலைப்பாட்டை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.

நடிகர் ராதாரவி விவகாரத்தில் இரட்டை நிலைப்பாட்டை எடுத்த திமுக தலைமை தங்களின் செயலிற்கு மாற்றுத் திறனாளிகளிடையே பகிரங்கமாக மன்னிப்பு கோர வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்”னு சொல்லி இருக்கார்.