விக்னேஷ் சிவனுக்கு எதிராக திரும்பிய நயன்தாரா பட நிறுவனம்

ராதாரவியின் சர்ச்சைப் பேச்சை கண்டிக்கும் போது இயக்குனர் விக்னேஷ் சிவன் உதிர்த்த சில வார்த்தைகளால், நயன்தாரா நடித்த கொலையுதிர் காலம் திரைப்படத்தை தயாரித்த நிறுவனம் கடுப்பில் உள்ளதாம். விக்னேஷ் சிவன் மீது புகார் அளிக்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளதாம்.

கொலையுதிர் காலம் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. அதில் பேசிய ராதாரவி, நயன்தாராவையும் மற்ற நடிகைகளையும் இழிவாக பேசினார். இதை விக்னேஷ் சிவன் உட்பட பல்வேறு தரப்பினரும் கண்டித்தனர்.

விக்னேஷ் சிவன் தனது டுவிட்டர் பக்கத்தில், “இந்த படத்தை தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் சில ஆண்டுகளுக்கு முன்பே கைவிட்டு விட்டனர் என்று நினைத்தேன். பொருத்தமற்ற நிகழ்ச்சியில் தேவையற்ற நபர்கள் கலந்து கொண்டு என்ன பேசுகிறோம் என்று தெரியாமலே பேசினர்” என்று தெரிவித்தார்.

விக்னேஷ் சிவனின் இந்த ட்வீட் படத்தின் வியாபாரத்தை பாதித்துள்ளதாம். “வினியோகஸ்தர்கள் பின்வாங்கிவிட்டனர். படத்தின் டிஜிட்டல் உரிமையை வாங்குவதாக உறுதி அளித்த நிறுவனமும் இப்போது வேண்டாம் என்று கூறிவிட்டது. இதனால் விக்னேஷ் சிவன் மீது வழக்கு தொடர்வது குறித்து படக்குழுவினர் ஆலோசிக்கின்றனர்,” என தகவல்கள் வெளியாகியுள்ளது.

‘முன்பெல்லாம் சாமி வேஷம் போட வேண்டும் என்றால் கே.ஆர்.விஜயாவை தான் தேடுவார்கள். ஆனால் இப்போது யார் வேண்டுமானாலும் நடிக்கலாம். இப்போது பார்த்தவுடன் கும்பிடத் தோன்றுபவர்களும் நடிக்கலாம், பார்த்தவுடன் கூப்பிடத் தோன்றுபவர்களும் நடிக்கலாம்.’

ராம ராஜ்ய‌ம் தெலுங்கு படத்தில் நயன்தாரா சீதையாக நடித்தது பற்றி கொலையுதிர் காலம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் ராதாரவி கூறிய மேற்கண்ட கருத்து பலத்த சர்ச்சையை கிளப்பியது.

இந்நிலையில், ராதாரவி இவ்வாறு பேசியதை அறிந்தவுடன் ஆத்திரமடைந்த விக்னேஷ் சிவன், அவரை என்ன செய்கிறேன் பார் என்று ஆவேசமாகப் புறப்பட்டாராம். ஆனால், நயன் தான், ‘இது ஆத்திரப்படும் நேரமல்ல, அமைதி காக்கும் நேரம். நம் கடைமையை நாம் செய்வோம், அவரை கடவுள் பார்த்துக் கொள்வார்’ என்று ஆசுவாசப்படுத்தினாராம்.

ஆனாலும் கோபம் குறையாதா விக்னேஷ் சிவன், ‘ஒரு பாரம்பரியமான குடும்பத்திலிருந்து வந்தவரிடம் பேசிய அருவருப்பான கருத்துகளுக்கு எதிராக யார் நடவடிக்கை எடுப்பார்களோ? யார் எனது கண்டன குரலுக்கு ஆதரவு கொடுப்பார்களோ?

மூளையற்ற நபர், தன் மீதான கவனத்தை ஈர்க்க வேண்டும் என்பதற்காக இதனை செய்கிறார். இதில் வேதனையளிக்கும் விஷயம், அவருடைய கீழ்தரமான கருத்தை அங்கிருந்தவர்கள் கைத்தட்டி, சிரித்து கேட்பது. இப்படி ஒரு நிகழ்ச்சி நடக்கிறது என்று எங்கள் யாருக்கும் தெரியாது.

இப்படத்தை தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் சில ஆண்டுகளுக்கு முன்னரே கைவிட்டுவிட்டனர் என்றுதான் நான் நினைத்தேன். இப்போது நடந்தது சற்றும் பொருத்தமில்லாத நிகழ்ச்சியாகும். தேவையற்ற நபர்கள் கலந்து கொண்டு என்ன பேசுகிறோம் என்று தெரியாமலயே பேசியுள்ளனர். இதுதான் ஒரு படத்தை புரமோட் செய்யும் விதம் என்றால் இனி இது போன்ற நிகழ்ச்சிகளில் இருந்து விலகி நிற்பதே நலம்,’ என டிவிட்டரில் கண்டனம் தெரிவித்தார்.