NABARD’s credit rating for Tamil Nadu for 2020-21 is Rs. 2,45,629 crore

தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி (நபார்டு) தயாரித்திருக்கும் “தமிழ்நாட்டுக்கான “வளம் சார்ந்த மாநில அறிக்கை 2020-21-ஐ” தமிழக அரசின் தலைமைச் செயளாளர் திரு. கே.சண்முகம் இன்று சென்னையில் நடைபெற்ற மாநில கடன் கருத்தரங்கில் வெளியிட்டார். அப்போது, விவசாயம் மற்றும் கிராமப்புற வளர்ச்சியில் நபார்டு ஆற்றிவரும் சீரிய பணியினைப் பாராட்டியதுடன், மாநில அரசுகளுக்கும், வங்கித்துறைக்கும் நபார்டு அறிவுபூர்வமான ஆலோசகராகவும் செயல்பட்டு வருகிறது என்று குறிப்பிட்டார்.

நிகழ்ச்சியில் வரவேற்புரையாற்றிய நபார்டு தலைமைப் பொது மேலாளர் திருமதி பத்மா ரகுநாதன், “முன்னுரிமை கடன் பிரிவின் கீழ் மாநிலத்தின் வளர்ச்சிக்கான சாத்தியங்களை ஆராய்ந்து, அதன் அடிப்படையில் கடன் திட்டமிடுதலுக்கு உதவும் வகையில் மாவட்ட வாரியாக கடன் மதிப்பீட்டு திட்டங்களை (Potential Linked Credit Plan) நபார்டு கடந்த பல்லாண்டுகளாக  தயாரித்து வருகிறது. வேளாண்மை மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகளில் 2020-21 ஆம் ஆண்டுக்கான மாவட்டவாரியாக செய்யப்பட்ட மதிப்பீடுகள் ஒருங்கிணைக்கப்பட்டு மாநில கடன் மதிப்பீட்டு அறிக்கை (State Focus Paper) தயாரிக்கப்பட்டு உள்ளது. அதன் அடிப்படையில் தமிழகத்திற்கு 2020-21 ம் ஆண்டுக்கான நபார்டின் கடன் மதிப்பீடு ரூ. 2,45,629 கோடி ஆக உள்ளது. இது 2019-20 (ரூ .2,26,906 கோடி) க்கான மதிப்பீட்டை விட 8.25% அதிகமாகும். இதில், விவசாயத் துறைக்கு கடன் 1,33,006 கோடி (54%) யும், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறைக்கு ரூ. 46,899 கோடியும் அடங்கும். இவற்றைத் தவிர, மாநில மற்றும் மத்திய அரசால் தொடங்கப்பட்ட கொள்கை தலையீடுகள் மற்றும் திட்டங்களையும் இந்த அறிக்கை எடுத்துக்காட்டுகிறது” என்று குறிப்பிட்டார்.       நபார்டின் இந்த மாநில வளம் சார்ந்த மதிப்பீட்டு அறிக்கை “உயர் தொழில் நுட்ப வேளாண்மை”க்கு முக்கியத்துவம் அளிக்கிறது.

ரிசர்வ் வங்கியின் முன்னுரிமைத் துறை வழிகாட்டுதலின்படி, வங்கியாளர்கள் பல்வேறு துறைகளின் கீழ் வங்கிக்கடன்கள் வழங்குவதற்கு இது வழி வகுக்கும். மேலும், மாநில அரசால் முன்னுரிமை அடிப்படையில் கவனிக்கப்பட வேண்டிய பல்வேறு துறைகளிலும் உள்ள உள்கட்டமைப்பு இடைவெளிகளையும் இந்த ஆவணம் எடுத்துக்காட்டுகிறது.

வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டில் தீவிர கவனம் செலுத்திவரும் நபார்டு, கிராமப்புற உள்கட்டமைப்பு மேம்பாடு, விவசாயத்தின் பருவ கால சவால்களை எதிர்கொள்வது, விவசாயிகள் மத்தியில் கூட்டு முயற்சிகளை மேம்படுத்துதல், நிதியியல் விழிப்புணர்வு, ஊரகக் கடன் அமைப்புகளை வலுப்படுத்துதல் போன்ற கிராமப்புற பொருளாதாரம் தொடர்பான பல தளங்களில் ஆழமாக தடம் பதித்துள்ளது.

நபார்ட்டின் ஊரக உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி (Rural Infrastructure Development Fund- RIDF) மூலமாக மாநில அரசுக்கு 4.52 லட்சம் ஹெக்டேர்  நிலத்தை பாசனத்தின் கீழ் கொண்டு வரவும், 30,000 கி.மீ தூரத்திற்கு சாலைகள் அமைக்கவும், 1666 பாலங்களை அமைக்கவும், எட்டு லட்சம் மெ. டன் சேமிப்பு கிடங்குகள் அமைக்கவும் உதவியுள்ளது. மேலும், பல்வேறு குடிநீர் திட்டங்கள் மூலமாக மாநிலத்தில் உள்ள 14,800 குடியிருப்பு பகுதிகளுக்கு குடிநீர் வழங்க வழி செய்யப்பட்டுள்ளது.

நபார்டு ஊக்குவித்துள்ள 251 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களில் 181 நிறுவனங்கள் முறைப்படி பதிவு செய்யப்பட்டு, அவர்களுக்கு ரூ. 24.50 கோடி அளவுக்கு நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. சுய உதவி குழுக்களை ஊக்குவிப்பதன் மூலம் நபார்டு, பெண்கள் மற்றும் விளிம்புநிலை மக்கள் மத்தியில் நிதி சுதந்திரத்தை உறுதிசெய்து, குழு சேமிப்பு மற்றும் வங்கி கடனுதவி மூலம் சமூகத்தின் பின்தங்கிய பிரிவினருக்கு சமூக நிலைப்பாட்டை மேம்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் 10.60 லட்சம் சுய உதவிக்குழுக்கள் ரூ. 1280.87 கோடி சேமிப்புடன் இயங்கி வருகின்றன.
விவசாயிகளின்  துயரத்திற்கு முக்கிய காரணங்களில் ஒன்று, பருவநிலை மாற்றம். பருவநிலை மாற்றத்திற்கான தேசிய நிதியத்தின் கீழ் உதவிகளை வழங்குவதன் மூலம் நபார்டு அவற்றுக்கு தீர்வு காண்கிறது.  தற்போது, சுமார் 40 பருவநிலை சரிபார்ப்பு திட்டங்களை ரூ. 42.38 கோடி உதவியுடன் செயல்படுத்துகிறது. மேலும், நபார்டு 178 நீர்செறிவு மேம்பாட்டுத் திட்டங்கள் மற்றும் 19 பழங்குடியினர் மேம்பாட்டு திட்டங்களுக்கும் ஆதரவளித்துள்ளது.

வேளாண் சாரா துறையின் மேம்பாட்டிற்காக நபார்டு பல சிறப்புத் திட்டங்களை உருவாக்கியுள்ளதுடன், திறன் மேம்பாடு, பயிற்சி, சந்தைப்படுத்தல் மற்றும் பல்வேறு பண்ணை நடவடிக்கைகளுக்கும் உதவிகளை வழங்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டுள்ள கஞ்சமலை நெசவாளர் உற்பத்தி நிறுவனம் (சேலம் மாவட்டம்) மதுரை சணல் பொருட்கள் உற்பத்தியாளர் நிறுவனம் (மதுரை மாவட்டம்) ஆகிய இரண்டும் மிகவும் வெற்றிகரமாக செயல்பட்டு வருகின்றன.

இந்த நிகழ்ச்சியின்போது, ‘கிராமப்புற உள்கட்டமைப்பு திட்டங்கள் – தமிழ்நாடு’ என்ற ஒரு கையடக்க புத்தகமும் வெளியிடப்பட்டது. கருத்தரங்கின் போது, ​​நிதி சார் கல்வியில் சிறப்பாகப் பணியாற்றிய பொதுத்துறை வங்கிகள், கிராமிய மற்றும் கூட்டுறவு வங்கிகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. சிறப்பாகச் செயல்படும் நீர்வடி பகுதி மேம்பாடு மற்றும் பழங்குடியினர் மேம்பாட்டுத் திட்டங்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.

ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை முதன்மை செயலாளர், திரு. ஹன்ஸ்ராஜ் வர்மா, பாரத ஸ்டேட் வங்கி தலைமைப் பொது மேலாளர் திரு. வினய் டோன்ஸ், இந்திய ரிசர்வ் வங்கி பொது மேலாளர் திருமதி மோகனா உட்பட தமிழக அரசு மற்றும் வங்கி உயரதிகாரிகள் பலர் இந்தக் கருத்தரங்கில் பங்கேற்றனர்.

Ref:- 1602289