பணப் பட்டுவாடா, பதவி போட்டி, பலே பிளான்கள்: நடக்குமா நடிகர் சங்கம் தேர்தல்?

பல்வேறு பிரச்சினைகள் ஒன்றன் பின் ஒன்றாக கிளம்பி வருவதால், வரும் ஜூன் 23ம் தேதி திட்டமிட்டபடி நடிகர் சங்கம் தேர்தல் நடக்குமா என்னும் கேள்வி கோலிவுட்டில் சுற்றி வருகிறது.

நடிகர் சங்கத்தின் பதவி காலம் நிறைவடைந்த நிலையில்,
2019 முதல் 2022 வரையிலான அடுத்த 3 ஆண்டுகளுக்கு நடிகர் சங்கத்தை நிர்வகிக்க நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் அறிவிக்கப்பட்டு, அது வரும் 23 ஆம் தேதி சென்னை அடையாறில் உள்ள எம்ஜிஆர் – ஜானகி கல்லூரியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது

நாசர், விஷால் தலைமையில் பாண்டவர் அணியும் பாக்யராஜ், ஐசரி கணேஷ் தலைமையில் சுவாமி சங்கரதாஸ் அணியும் போட்டியிடுகின்றன.

தேர்தலுக்கு பாதுகாப்புக் கோரி ஏற்கனவே காவல்துறை ஆணையரிடம் அளித்த கோரிக்கை மனு நிலுவையில் இருப்பதால், அதை பரிசீலித்து பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும் என்று விஷால் உயர் நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தார்.

இந்த வழக்கு இன்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்த போது, அரசு தரப்பில் ஆஜரான மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஏ நடராஜன், “அடையாறில் உள்ள எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரி அருகே முதல்வர், அமைச்சர்கள் மற்றும் நீதிபதிகள் குடியிருப்புகள் உள்ளதாலும், அந்த இடத்தில் தேர்தல் நடைபெற்றால் மக்களுக்கு இடையூறு ஏற்படும் என்பதாலும், அந்த இடத்தில் தேர்தல் நடத்தினால் பாதுகாப்பு வழங்குவது சிரமம் எனவும், மாற்று இடத்தில் தேர்தல் நடத்துவது குறித்து நடிகர் சங்கம் முடுவெடுத்து தெரிவித்தால் உரிய பாதுகாப்பு அளிக்கப்படும்” எனவும் தெரிவித்தார்.

அரசு தரப்பு விளக்கத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி,
எம்.பி., எம்.எல்.ஏ தேர்தலை விட நடிகர் சங்க தேர்தலுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படுவது கவலை அளிப்பதாகவும், நீதிமன்றங்களுக்கு மக்களின் பாதுகாப்பே முக்கியம் என்பதால் எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரியில் தேர்தலை நடத்த அனுமதிக்க முடியாது எனவும் தெரிவித்தார்.

இந்நிலையில், மதுரையில் உள்ள தனியார் விடுதியில் மதுரை நாடக நடிகர் சங்க உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகளை சந்தித்து, தங்களுக்கு நடிகர் சங்கத் தேர்தலில் ஆதரவு தர பாண்டவர் அணியின் சார்பாக விஷால் கோரினார்.

அப்போது பேசிய விஷால் மதுரையில் கடந்த முறை தேர்தலை சந்திக்கும் போது மதுரையில் எங்களது அணிக்கு பாண்டவர் அணி என பெயர் வைக்கப்பட்டது.கடந்த 3 ஆண்டுகளில் சொன்னதையும், சொல்லாததையும் செய்துள்ளோம்.

இன்னும் 3 மாதங்களில் கட்டிடம் திறக்கப்பட உள்ளது.மதுரை நாடக நடிகர்களை சந்திக்கும் போது ஒரு உற்சாகம் ஏற்படுகின்றது. மதுரை , தேனி , திண்டுக்கல் பகுதியிலிருந்து எங்களை நம்பி நாடக நடிகர்கள் வந்துள்ளனர்.

தமிழகத்தில் உள்ள நாடக நடிகர்களை சந்திக்க உள்ளோம்.கடந்த தேர்தலில் நாங்கள் சொன்னதை செய்யாமல் இங்கு வந்திருந்தால் , இந்த சந்திப்பு நடந்து இருக்காது. சொன்னதை செய்ததால் தான் நாங்கள் நாடக நடிகர்களை சந்திக்க முடிகின்றது,” என்றார்.

இந்நிலையில், நாசர் எதிரணியினர் பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டு வருவதாகவும், பதவிக்காக பல்வேறு வேலைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.