மோடியின் மேஜிக், மாபெரும் வெற்றியை நோக்கி பாஜக‌

பிரதமர் நரேந்திர மோடி மீது நீண்ட நாட்களாக வைக்கப்படும் குற்றச்சாட்டு‍, அவர் ஊடகங்களை சந்திக்க மறுக்கிறார் என்பதே. ஆனால் அதையும் இந்த முறை தவிடுபொடியாக்கி விட்டார் பிரதமர் என்பதே வட இந்தியா முழுக்க பேச்சு.

சமீபத்தில் அவர் தொலைக்காட்சி சேனல்களுக்கு, அதுவும் தன்னை முழு மூச்சாக எதிர்க்கும் சில டிவிக்களுக்கு, அளித்த பேட்டிகள், பாஜக ஆதரவாளர்களை மட்டுமில்லாமல், பொது மக்களையும், அவ்வளவு ஏன், அவரது எதிர்ப்பாளர்களையும் கவர்ந்துள்ளதாம்.

இவையெல்லாம் தேர்தலில் எதிரொலித்து, பாஜகவை மாபெரும் வெற்றி பெற செய்யும் என காங்கிரஸ் ஆதரவாளர்களே சொல்கிறார்கள். சரி, அப்படி என்ன தான் அந்த பேட்டிகளில் சொன்னார் மோடி?

எந்தக் கேள்விக்கும் பதிலளிக்க முடியாமலோ, விரும்பாமலோ திசைதிருப்பி வேறு கேள்விக்கு முண்டியடிக்காமல், பொருத்தமான பதிலை, உரிய தகவல்களுடன், தேவையான அளவு நகைச்சுவை, காட்டம் ஆகியவற்றை சரிவிகிதத்தில் கலந்து ஒவ்வொரு பேட்டியையும் சுவாரசியம் குறையாத ஒரு அனுபவமாக்கினார்.

வேலைவாய்ப்பு குறித்த‌ கேள்விக்கு, “உங்கள் அலுவலகத்திலேயே கூட ஆட்கள் அதிகமாகிவிட்டதால், உட்கார இடமின்றி சிலர் நின்றுகொண்டே வேலை பார்ப்பதாகக் கேள்விப்பட்டேன். இதற்கு என்ன சொல்லுகிறீர்கள்?” என்று மடக்கினார்.

தீவிரவாதச்செயலில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டப்பட்ட சாதுவி பிரக்ஞாவுக்கு தேர்தலில் போட்டியிட அனுமதித்தைப் பற்றிக் கேட்கப்பட்டதற்கு, “என்மீது கூடத்தான் எத்தனை எத்தனையோ பயங்கரமான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்கள். இவர்கள் சுமத்திய குற்றச்சாட்டுகளால், அமெரிக்கா எனக்கு விசா கொடுக்க மறுத்தார்கள். இப்போது அதே அமெரிக்கா எனக்கு அழைப்பு விடுக்கவில்லையா? நான் போய் வரவில்லையா? இதுபோல திட்டமிட்டு ஒருவர் மீது குற்றம்சாட்டுவது புதிதல்ல. அதுவும் ஆயிரக்கணக்கான வருடங்களாய்த் தழைத்து வருகின்ற ஹிந்து தர்மத்தைக் கொச்சைப்படுத்தும் விதமாக, அந்த தர்மத்தோடு தீவிரவாதத்தைத் தொடர்புபடுத்தி அரசியல் செய்கிறவர்களுக்கு எதிர்வினையாக, சாதுவி பிரக்ஞாவை தேர்தலில் நிறுத்துவதுதான் நியாயம்.” என்று தெரிவித்தார்.

மமதா பானர்ஜி குறித்து கேட்டபோது, “2009-ல் இதே மமதா பானர்ஜி, மே.வங்கத்தில் சட்டவிரோதமாகக் குடியேறுகிறவர்கள் குறித்து ஆக்ரோஷமாகக் கேள்வி எழுப்பினார். காகிதங்களைக் கிழித்து வீசியெறிந்தார். அங்கே குடியரசுத் தலைவரின் ஆட்சியை அமல்படுத்தினாலொழிய தேர்தல் நடத்த முடியாது என்று ஆவேசப்பட்டார். இன்று அந்த மமதா பானர்ஜி இப்படி மாறியிருப்பது அதிர்ச்சியாக இருக்கிறது. அவரது விஷயத்தில் எனது கணிப்புகள் அனைத்தும் தவறி விட்டன என்பது வேதனையாக இருக்கிறது,” என்றார்.

முத்தலாக் பற்றி பேசும் போது, “முத்தலாக் விஷயத்தை மத அடிப்படையில் பார்க்கக்கூடாது. வரதட்சணைத் தடுப்புச் சட்டம் ஹிந்து விரோதச் சட்டமா? பால்ய விவாகத் தடுப்புச் சட்டம் ஹிந்து விரோதச் சட்டமா? முத்தலாக் தடுப்புச் சட்டம் பெண்களின் மாண்பைப் பாதுகாப்பதற்காகக் கொண்டுவரப்பட்டது. உலகம் முழுவதிலுமுள்ள அனைத்து இஸ்லாமிய நாடுகளிலும் முத்தலாக் தடை செய்யப்பட்டிருக்கிறபோது, இந்தியாவில் மட்டும் எப்படி அனுமதிப்பது?” என்றார்.

காங்கிரஸ் அறிவித்துள்ள “நியாய்” திட்டம் குறித்து கேட்டதற்கு,
”காங்கிரஸ் 2009-ல் சுமார் ஆறு லட்சம் கோடி விவசாயக்கடன்களை ரத்து செய்வதாக அறிவித்து ஆட்சிக்கு வந்தது. ஆனால், அவர்கள் ரத்து செய்தது வெறும் 52,000 கோடி மட்டுமே! அதிலும் பெரும்பாலான தொகை நிலமே இல்லாதவர்களுக்கும், விவசாயத்துடன் சற்றும் சம்பந்தமில்லாதவர்களுக்கும் சென்று சேர்ந்தது. 2ஜி ஊழல், நிலக்கரி ஊழல் ஆகியவை அப்போது பெருமளவு பேசப்பட்டதால், இந்த விவசாயக்கடன் தள்ளுபடி ஊழல் மழுங்கடிக்கப்பட்டு விட்டது.

இப்போதுகூட, ம.பியிலும் ராஜஸ்தானிலும் விவசாயக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் என்ன செய்து கொண்டிருக்கிறது என்பதை நாடறியும். ஆகவே, காங்கிரஸ் அளிக்கிற வாக்குறுதிகளை மக்கள் பொருட்படுத்த மாட்டார்கள்,” என்று குறிப்பிட்டார்.