விருந்தில் மோடி தடவிய மருந்து: உற்சாகத்தில் எடப்பாடி

டெல்லியில் நேற்றிரவு நடைபெற்ற விருந்தில் பிரதமர் நரேந்திர மோடியும் பாஜக தேசிய‌ தலைவர் அமித்ஷாவும் காட்டிய அன்பில் மெய்சிலிர்த்து போய் உள்ளது அதிமுக கூட்டணி டீம்.

நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக தேர்தல் முடிவடைந்ததும் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாயின. அதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அறுதி பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளின் தலைவர்களுக்கு பாஜக தேசிய தலைவர் அமித் ஷா டெல்லியில் நேற்று விருந்தளித்தார். இதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம், தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் பங்கேற்றனர்.

விருந்துக்கு முன்பாக டெல்லியில் பாஜக கூட்டணி தலைவர்கள் ஆலோசனை கூட்டமும் நடந்தது. மத்திய பாஜக அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். டெல்லி பாஜக அலுவலகத்தில் இந்த ஆலோசனை நடந்தது. பாஜக தேசிய தலைவர் அமித் ஷா ஆலோசனைக்கு தலைமை தாங்கினார்.

இதில் பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதன்பின்பே அமித் ஷா தலைமையில் பாஜக கூட்டணி கட்சித் தலைவர்களுக்கு டெல்லியில் விருந்து வைக்கப்பட்டது. மோடியும் அமித் ஷாவும் எடப்பாடி மற்றும் பன்னீரிடம், கருத்து கணிப்புகள் பற்றி கவலைப்பட வேண்டாம், நம் பந்தம் என்றும் தொடரும் என்று உறுதியளித்துள்ளனராம்.

அன்புமணி, ஜி கே வாசன், சரத்குமார், தேவநாதன் யாதவ், ஏ சி சண்முகம், ஐக்கிய ஜனதா தள தலைவரும் பீகார் முதல்வருமான‌ நிதிஷ் குமார், மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் (லோக் ஜனசக்தி), சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே உள்ளிட்டோரும் விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

டெல்லியில் உள்ள அசோகா ஓட்டலில் நடைபெற்ற இந்த விருந்தில் பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டு, சில முக்கிய முடிவுகளும் எடுக்கப்பட்டனவாம். தேர்தல் முடிவுகள் நாளை வெளியானவுடன் அவையெல்லாம் செயல் வடிவம் பெறும் எனத் தெரிகிறது.