தமிழ் மாணவர்களுக்காக தன் திட்டத்தை மாற்றிய மோடி, குவியும் லைக்ஸ்

மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடனான பிரதமர் நரேந்திர‌ மோடியின் கலந்துரையாடல் நிகழ்ச்சி ஜனவரி 16‍-ம் தேதியிலிருந்து 20-ந் தேதிக்கு மாற்றப்பட்டு உள்ளது. தமிழ் மாணவர்களின் பொங்கல் கொண்டாட்டங்களுக்கு எந்த இடையூறும் இருக்கக் கூடாது என்பதற்காக மோடி இந்த முடிவெடுத்துள்ளதால் பிரதமருக்கு பாராட்டுகள் குவிகின்றன.

தேர்வினை எந்தவொரு நெருக்கடியுமின்றி எழுதுவதற்கு மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடி வருகிறார். மூன்றாவது ஆண்டாக பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சியை, வரும் 16-ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டது.

ஆனால் பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகத்தில் 16-ந் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால், அன்றைய தினம் மாணவர்களை பள்ளிக்கு வருவதில் சிரமம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பிரதமர் மோடியின் கலந்துரையாடல் நிகழ்ச்சி வருகிற 20-ந் தேதிக்கு மாற்றப்பட்டு உள்ளது. இது தொடர்பாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

“மாணவர்களுடனான பிரதமர் மோடியின் கலந்துரையாடல் நிகழ்ச்சியை 16-ந் தேதி நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. இதற்காக மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரிடம் அதிக ஆர்வமும், உற்சாகமும் காணப்பட்டது. தனித்துவமான இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு மட்டுமின்றி, மன அழுத்தம் இன்றி தேர்வுகளை எழுதி வெற்றிகளை பெறுவதற்கு பிரதமர் வழங்கும் குறிப்புகளை பெறுவதற்கும் அவர்கள் ஆர்வமாக இருந்தனர்.

ஆனால் பொங்கல், மகர சங்கராந்தி உள்ளிட்ட பண்டிகைகள் காரணமாக 16-ந் தேதி இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியை நடத்த முடியாத நிலை உள்ளது. எனவே மாணவர்கள், ஆசிரியர்களுடனான பிரதமர் மோடியின் கலந்துரையாடல் நிகழ்ச்சி 20-ந் தேதி (திங்கட்கிழமை) நடத்தப்படும்,” என‌ அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

மோடி பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடும் ‘பரீக்ஷா பே சர்ச்சா’ எனும், பள்ளித்தேர்வை எதிர்கொள்வது குறித்த நிகழ்ச்சி தூர்தார்ஷன், அகில இந்திய வானொலி, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் யூ டியூப் பக்கம் ஆகியவற்றில் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட இருக்கிறது.