எட்டயபுரத்தில் அமைச்சர் நிர்மலா சீதாராமன்

பாரதியின் தேசப்பற்றையும் புகழையும் உலகறியச் செய்ய பனாராஸ் இந்து பல்கலைக் கழகத்தில் பாரதியாருக்கு ஆய்வு இருக்கை

மிழகத்தில் மாணவ  மாணவியரிடையே  தேசப்பற்றை வளர்க்க பாரதியாரின் பாடல்களை பள்ளிகளில் கற்றுத்தர வேண்டும் என மத்திய நிதி அமைச்சர் திருமதி. நிர்மலா  சீதாராமன் கூறினார்.

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் உள்ள பாரதியார் மணி மண்டபத்தில்  நடைபெற்ற மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் சார்பில் மண்டல மக்கள் தொடர்பு  அலுவலகம் ஏற்பாடு செய்திருந்த சுதந்திரத்தின் 75வது ஆண்டு  கொண்டாட்ட  நிகழ்ச்சியில்  அவர்  பங்கேற்று  பேசினார்.

சுப்பிரமணியபாரதியாரின் 100-வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் 1908ம் ஆண்டு வாக்கிலேயே பெண்களுக்காக  தனியாக பத்திரிகையை நடத்தியவர் பாரதியார் என்றார், அவரது எழுத்தின் வலிமை  வைரத்திற்கு ஒப்பானது என்றும்  அவருடைய எழுத்துக்கள், வார்த்தைகளின் தாக்கம் மக்களிடையே விடுதலை வேட்கை உணர்வை ஏற்படுத்தியதாக  கூறினார்.

பாரதியின் தேசப்பற்றையும் புகழையும் உலகறியச் செய்யும் வகையில் காசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் தமிழ் ஆராய்ச்சி மையத்தில் பாரதியார்  பெயரில் சிறப்பு இருக்கை ஏற்படுத்த பாரதப் பிரதமர் நரேந்திர மோடி  அறிவித்துள்ளதை  அமைச்சர்  சுட்டிக்காட்டினார்.

பாரதியார் கவிதைகளை புனையும்போது வார்த்தைகளை தெரிந்தெடுத்து அவற்றைப் பிரயோகம் செய்ய இசையோடு இயைந்து அமையும்படி எழுதி வடிக்க பட்ட துன்பம் பிரசவவலிக்கு ஈடானது என்றார். அதே சமயம்  என்றுமே நாடு தமக்கு என்ன செய்தது  என்பது  குறித்து  அவர்  எண்ணியதே இல்லை என்றும் நாடு விடுதலை அடைய தனது வாழ்நாள் முழுமையையும் அவர் கவிதை கட்டுரை மற்றும் பத்திரிகை பணிகள் ஆகியவற்றை மேற்கொள்ள அர்ப்பணித்து  இருந்தார்.

எட்டயபுரத்தில் பாரதி மணிமண்டபம் இன்னும் பொலிவுற அழகு படுத்தப்பட வேண்டும் என்று கூறியதோடு இதற்கு மாவட்ட நிர்வாகம் தேவையான நடவடிக்கை  எடுக்க   வேண்டும்  என்று குறிப்பிட்டார். 1946ல் இதே வாளாகத்தில் பாரதியாரின் பெருமையை அறிந்தவர்கள் அவரின் நினைவாக அவருக்கு மார்பளவு சிலை ஒன்றை நிறுவி அந்த வாளாகத்தினை மூதறிஞர் ராஜாஜி  திறந்து  வைத்ததாக  அமைச்சர்  கூறினார்.

தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அவர் ஏழ்மையை தவிர ஒன்றையும் பார்க்காதவர்   பாரதியார்.

சுதந்திரம் கிடைப்பதற்கு முன்பே கிடைத்த சுதந்திரத்தை எப்படி ஆனந்தமாக கொண்டாட வேண்டும் என்பதை அவர் உற்சாகமாக நூறு ஆண்டுகளுக்கு முன்பே அவர் பாடியுள்ளார்.  வெள்ளைக்காரனை  கொடுமைகளை பொறுத்துக் கொள்ள முடியாத அவர் அப்போதே சுதந்தரத்தை ஒளி படைத்த கண்ணினாய் வா வா என்று சொல்லி வரவேற்று இருக்கிறார் என்று அவரது பெருமையை அமைச்சர்  நிர்மலா சீதாராமன் எடுத்துக் கூறினார்.

75-வது சுதந்திர ஆண்டை கொண்டாடும்  இந்த வேளையில் சுதந்திர போராட்ட வீரர்கள்  அனைவரின் சிறப்பையும் நாடு முழுவதும் எடுத்துச் செல்ல வேண்டும்.

பள்ளிக்கூடங்களில் சிறுபிள்ளைகளுக்கு பாரதியாரின் பாட்டை கற்றுக் கொடுக்க  வேண்டும் அப்போதுதான் சிறுவயதிலேயே சிறுவர்களிடம் நாட்டுப்பற்று வளரும் என்று கூறினார்.  அவர்  எட்டயபுரத்தின்  சொத்து அவரை உலகிற்கு பகிர்ந்து கொடுங்கள் பாரதியை நீங்கள் மறக்காதீர்கள் நாங்களும் மறக்க  மாட்டோம் என்று அமைச்சர்  நிர்மலா  சீதாராமன் பேசினார்.

நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து பேசிய மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை இணையமைச்சர்  எல்.முருகன் பாரதி வெறுமனே தேசபக்தி பாடல்களை மட்டுமே எழுதியவரல்ல என்றும் இளம் வயதிலேயே சமூக சீர்திருத்தவாத கருத்துக்கள் உடையவராக  இருந்தார்  என்று  அமைச்சர் புகழாரம் சூட்டினார்.

இந்த நாட்டுக்கு பாரதி ஆற்றிய பங்கு அளப்பரியது என்று அமைச்சர் எல். முருகன்  பேசினார்.

சுதந்திர இந்தியாவின் 75வது ஆண்டை கொண்டாடும் விதமாக அடுத்த  இரண்டாண்டுகள் பல்வேறு அமைச்சகங்களின் சார்பில் பல நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என்றார்.

முன்னதாக மத்திய நிதி அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகத்தின் வெளியீட்டு பிரிவு சார்பில் சுப்பிரமணிய  பாரதி  மற்றும்  வ.உ.   சிதம்பரம் பிள்ளை  நூல்களை வெளியிட மத்திய  இணையமைச்சர்  எல். முருகன்  பெற்றுக் கொண்டார்.

நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்ட பல்வேறு முகமறிந்த மற்றும் முகமறியாத தியாகிகளின் புகைப்பக் கண்காட்சியை அமைச்சர்கள்  திறந்து  வைத்து  பார்வையிட்டனர்.

நிகழ்ச்சியில்  தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் கே.செந்தில்ராஜ் மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சகத்தின்  தென்மண்டல தலைமை இயக்குனர் எஸ். வெங்கடேஸ்வர்  உள்ளிட்டவர்கள்  கலந்து கொண்டனர்.

(வெளியீட்டு அடையாள எண்: 1754353)

Share this:

Exit mobile version